மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வீடு நிச்சயம்: வாக்குறுதி அளித்து தி.மு.க., பிரசாரம்
மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வீடு நிச்சயம்: வாக்குறுதி அளித்து தி.மு.க., பிரசாரம்
ADDED : மார் 11, 2026 06:18 AM

சென்னை: 'தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்தால், 'உங்க கனவ சொல்லுங்க' திட்டத்தின் கீழ், நகர்ப்புறங்களில் வசிப்போருக்கு குடியிருப்பு ஒதுக்கப்படும்' என, வாக்குறுதி அளித்து, தி.மு.க.,வினர் பிரசாரம் செய்து வருகின்றனர்.
தமிழகத்தில், 'உங்க கனவ சொல்லுங்க' என்ற திட்டத்தை, தமிழக அரசு ஜன., 9ம் தேதி துவக்கியது. இத்திட்டத்தின் வாயிலாக, 1.91 கோடி குடும்பங்களின் கனவு என்ன என்பதை தெரிந்துகொள்ள அரசு விரும்புகிறது.
இதற்காக, பயிற்சி பெற்ற 50,000 தன்னார்வலர்கள் வீடுவீடாகச் சென்று, 10 வகையான திட்டங்கள் அடங்கிய படிவத்தை கொடுத்து, எந்தெந்த திட்டங்களில் பயன் பெற்றீர்கள் என மக்களிடம் கேட்டுள்ளனர்.
மேலும், அவர்களின் மூன்று கனவுகளை கேட்டு, அவற்றை படிவத்தில் பூர்த்தி செய்து, அந்த விபரங்களை மொபைல்போன் செயலியில் பதிவு செய்து, கனவு அட்டை வழங்கப்படுகிறது.
'உங்க கனவ சொல்லுங்க' திட்டத்தில், நகர்ப்பகுதிகளில் வசிப்போரில் பெரும்பாலானோர், 'சொந்த குடியிருப்பு வேண்டும்' என, விருப்பம் தெரிவித்துள்ளனர். அதன்படி படிவத்தை பூர்த்தி செய்து, அவர்களுக்கான கனவு அட்டை வழங்கப்படுகிறது. இந்த அட்டையை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.
தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், அடுக்குமாடி குடியிருப்பில், உங்களுக்கு வீடுகள் ஒதுக்கி தரப்படும். குறிப்பாக, சென்னையில் வசிப்போருக்கு, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் வீடுகள் ஒதுக்கப்படும் என, தி.மு.க.,வினர் வீடுவீடாக உறுதி அளித்து, தேர்தல் பிரசாரத்தை துவக்கி உள்ளனர்.
பொதுமக்கள் கூறியதாவது: தன்னார்வலர்கள் பெரும்பாலும் தி.மு.க.,வை சேர்ந்தவர்களாக உள்ளனர். அவர்கள், பூர்த்தி செய்த படிவத்தை பெற்று, 'உங்க கனவ சொல்லுங்க' திட்டத்தின் வாயிலாக நிச்சயம் உங்கள் கோரிக்கை ஏற்கப்படும்.
கோரிக்கை நிறைவேற, தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும். நீங்கள் ஓட்டு போட்டு தி.மு.க.,வை ஆட்சிக்கு கொண்டு வந்தால், உங்களின் சொந்த வீடு கனவு நிறைவேறும் என பிரசாரம் செய்கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

