கூட்டுறவு வங்கி கடன் தள்ளுபடி திட்டத்தில் ரூ.3,289 கோடி நிலுவை!
கூட்டுறவு வங்கி கடன் தள்ளுபடி திட்டத்தில் ரூ.3,289 கோடி நிலுவை!
ADDED : பிப் 11, 2025 12:54 AM

இந்திய ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கைப்படி, மார்ச் 31க்குள், தள்ளுபடி செய்யப்பட்ட கூட்டுறவு வங்கி கடன்களில், தமிழகத்திலுள்ள கூட்டுறவு வங்கிகளுக்கு, மாநில அரசால் வழங்க வேண்டிய, 3,289 கோடி ரூபாயை விடுவிக்க, முதல்வர் அறிவுரை வழங்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2024 டிச., 31ம் தேதியிட்ட, இந்திய ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை:
வணிக வங்கிகள், கூட்டு றவு வங்கிகள், ஏனைய நிதி நிறுவனங்கள் வழங்கிய கடன்களை, மாநில அரசுகள், கடன் நிவாரண திட்டங்கள் வாயிலாக தள்ளுபடி செய்யும் கடன் தொகை அனைத்தையும், அடுத்த 60 நாட்களுக்குள், அவ்வங்கிகளுக்கு திரும்ப செலுத்த வேண்டும்.
இதற்கான அறிவிப்பு வெளியிடுவதற்கு முன், மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுமத்துடன், மாநில அரசு கலந்தாலோசிக்க வேண்டும்.
மேலும், ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டு, தற்போது நிலுவையிலுள்ள தொகை அனைத்தையும், வரும் மார்ச் 31ம் தேதிக்கு முன்பாக, வங்கிகளுக்கு மாநில அரசுகள் திரும்ப செலுத்த வேண்டும்.
திரும்ப செலுத்தாத பட்சத்தில், வங்கிகளுக்கு வர வேண்டிய தொகைக்காக, இவ்வாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், 100 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேண்டுகோள்
இந்நிலையில், 2021ம் ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்ட கூட்டுறவு வங்கி கடன்களில், தமிழகத்திலுள்ள கூட்டுறவு வங்கிகளுக்கு, மாநில அரசு வழங்க வேண்டிய 3,289 கோடியை விடுவிக்க, முதல்வர் அறிவுரை வழங்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலர் வைரப்பன் முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதம்:
கூட்டுறவு வங்கி கடன்கள் தள்ளுபடி திட்டத்தின் கீழ், தள்ளுபடி செய்யப்பட்ட கடன்களில், 7,186 கோடி ரூபாயை, தமிழக அரசு, கூட்டுறவு வங்கிகளுக்கு திரும்ப அளிக்க வேண்டும் என, அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம், தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கம் சார்பில், கடந்தாண்டு அக்., மாதம் வேண்டு கோள் விடப்பட்டது.
இதையடுத்து, 4,000 கோடி ரூபாய் வரை கூட்டுறவு வங்கிகளுக்கு விடுவித்து ஆணை பிறப்பித்ததால், கூட்டுறவு வங்கிகளில் நிதி சுழற்சி ஓரளவுக்கு சீரமைந்துள்ளது. மீதமுள்ள 3,289 கோடி ரூபாயை, தமிழக அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்.
நடவடிக்கை
ரிசர்வ் வங்கி சுற்றறிக்கைப்படி, இத்தொகையை, மார்ச் 31க்குள் விடுவிக்காத பட்சத்தில், தமிழகத்திலுள்ள, மாநில தலைமை கூட்டுறவு வங்கி, 22 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், நுாற்றுக்கணக்கான தொடக்க வேளாண் கூட்டு றவு கடன் சங்கங்கள், 3,200 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படும்.
இதன் காரணமாக, தேசிய வங்கியிடமிருந்து கடன் பெறும் தகுதியை, கூட்டுறவு வங்கிகள் இழக்க நேரிடும். முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.
- நமது நிருபர் -

