கனிம வாகனங்களிடம் யூனிட்டுக்கு ரூ.500 கறார் வசூல்; அட்டூழியம் செய்யும் புதுக்கோட்டை, சென்னை 'டீம ் '
கனிம வாகனங்களிடம் யூனிட்டுக்கு ரூ.500 கறார் வசூல்; அட்டூழியம் செய்யும் புதுக்கோட்டை, சென்னை 'டீம ் '
ADDED : ஆக 10, 2025 08:21 AM

கோவை: கோவையில் இருந்து வாகனங்களில் கனிமம் எடுத்துச் செல்வோரிடம் யூனிட்டுக்கு, 500 ரூபாய் வீதம் புதுக்கோட்டை மற்றும் சென்னை என, இரண்டு குழுவினர் வசூலில் ஈடுபடுகின்றனர். இது பற்றி தெரிந்தும், கனிம வளத்துறையோ, மாவட்ட நிர்வாகமோ எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கோவை மாவட்டத்தின் தெற்கு பகுதிகளில், 80 கல்குவாரிகள், 120 கிரஷர்கள் செயல்படுகின்றன. குவாரிகளில் எடுக்கப்படும் கனிமங்கள், ஓரிடத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு, ஜல்லி, கல்லுக்கால், சைஸ் கல், அளவீட்டுக்கல், எம் சாண்ட், பி சாண்ட், டஸ்ட் என பல ரகங்களாக பிரித்து விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.
குவாரி மற்றும் சைட்டில் இருந்து எடுத்துச் செல்ல, ஆன்லைனில் விண்ணப்பித்து, கனிமவள துறையில் அனுமதிச்சீட்டு பெற வேண்டும். இதற்குரிய தொகையை ஆன்லைனில் உரிமதாரர்கள் செலுத்த வேண்டும்.
தொகை செலுத்தினாலும், டன்னுக்கு, 500 ரூபாய் வீதம் லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது. இதற்கு முன், புதுக்கோட்டை டீம் வசூலித்து வந்தது.
தற்போது புதுக்கோட்டையில் இருந்து வேறொரு டீம் வந்துள்ளது. அதனுடன் சென்னை டீமும் இணைந்துள்ளது.
பொள்ளாச்சி - ஆனைமலை தாலுகாக்களில் சென்னை டீம்; கிணத்துக்கடவு, மதுக்கரை உள்ளிட்ட இதர பகுதிகளில் புதுக்கோட்டை டீம் வசூலிக்கிறது. ஏற்கனவே புதுக்கோட்டை டீம் வசூலித்த அதே பாணியில், இந்த புது டீம்கள் வசூலை ஆரம்பித்துள்ளன.
அதாவது, ஆன்லைன் முறையில் விண்ணப்பித்தாலும், வசூல் டீமுக்கு 'கப்பம்' கட்டாவிட்டால், அனுமதிச்சீட்டு கிடைப்பதில்லை. வேறு வகையில் அனுமதிச்சீட்டு பெற்று விட்டாலும், அவர்கள் விபரங்களை துறை அலுவலர்களிடம் பெற்று, வாகனங்களை சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தி, கட்டாய வசூலில் ஈடுபடுகின்றனர்.
இங்கும் கப்பம் கட்டாமல் தப்பிச்சென்றால், அவ்வாகனங்களை போலீசாரிடம் சிக்க வைக்கின்றனர். அதிவேகம், 'ஓவர் லோடு' என குற்றச்சாட்டுகள் பதிவு செய்து, போலீசாரும், வட்டார போக்குவரத்து துறையினரும் பெருந்தொகையை பறிக்கின்றனர்.
கல் என்றால் யூனிட்டுக்கு, 400 ரூபாய், எம் சாண்டுக்கு 500 ரூபாய் வசூலிக்கின்றனர். உள்ளூர் தேவைக்கு நகர்ப்பகுதிக்குள் ஜல்லி, மணல் எடுத்துச் செல்லும் வாகனங்களில் யூனிட்டுக்கு, 100 ரூபாய் வீதம் இதுநாள் வரை வசூலிக்கப்பட்டது; இத்தொகையை, 500 ரூபாயாக உயர்த்தியதால் சர்ச்சை எழுந்தது.
இதற்கு ஆட்சேபனை தெரிவித்ததால், தற்போதைக்கு, 200 -- 300 ரூபாய் வீதம் வசூலிக்கின்றனர். இத்தொகை விரைவில், 500 ரூபாயாக அதிகரிக்கும் என கூறுவதால், குவாரி நடத்துவோர் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.
இவ்விபரங்கள் நன்கு தெரிந்திருந்தாலும், கனிம வளத்துறையிரோ, மாவட்ட நிர்வாகத்தினரோ எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், மவுனமாக இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.