தனித்து போட்டி!: பீஹாரில் பா.ஜ., - காங்., உடன் கூட்டணி இல்லை: ஜன் சுராஜ் கட்சி தலைவர் பிரசாந்த் கிஷோர் அறிவிப்பு
தனித்து போட்டி!: பீஹாரில் பா.ஜ., - காங்., உடன் கூட்டணி இல்லை: ஜன் சுராஜ் கட்சி தலைவர் பிரசாந்த் கிஷோர் அறிவிப்பு
ADDED : அக் 02, 2025 11:46 PM

தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்து அரசியல்வாதியாக மாறி, ஜன் சுராஜ் என்ற கட்சியை துவக்கியுள்ள பிரசாந்த் கிஷோர், 48, பீஹாரில் நடக்கும் சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.
பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, மொத்தமுள்ள 243 தொகுதிகளுக்கு அடுத்த மாதத்தில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அங்கு அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் நடக்கிறது.
பீஹாரை பொறுத்தவரை, ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி - எதிர்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்., கூட்டணி இடையே போட்டி நிலவிய நிலையில், தற்போது புது போட்டியாளராக களத்தில் குதித்துள்ளார், பி.கே., என அழைக்கப்படும் பிரசாந்த் கிஷோர்.
கடந்த 2014 லோக்சபா தேர்தலில், மத்தியில் பா.ஜ., ஆட்சி அமைத்ததில் அவரது பங்கு முக்கியமானது. பீஹாரில் நடந்த 2015 சட்டசபை தேர்தலில், நிதிஷ் குமார், லாலு பிரசாத் யாதவ் ஆகியோருக்கும் அவர் வேலை பார்த்துள்ளார்.
குற்றச்சாட்டு இது தவிர, 2021ல் தமிழகத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், முதல்வர் ஸ்டாலினின் தி.மு.க., வெற்றி பெறுவதற்கும் வியூகங்களை வகுத்து தந்தார் பிரசாந்த் கிஷோர்.
அதே ஆண்டு மேற்கு வங்கத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், திரிணமுல் காங்., தலைவர் மம்தா பானர்ஜிக்கும் தேர்தல் வியூகங்களை அவர் வகுத்து தந்தார்.
இதற்கு, அக்கட்சிகளிடம் இருந்து அவர் பெற்ற தொகை பல கோடி ரூபாய் என சொல்லப்படுகிறது. இப்படி பல்வேறு கட்சிகளுக்கு வியூகங்களை வகுத்து தந்து வெற்றி பெறச் செய்த அவருக்கு, முதல்வர் பதவி மீது ஆசை வந்ததோ என்னவோ, பீஹாரில் ஜன் சுராஜ் என்ற கட்சியை துவங்கினார்.
கடந்த இரு ஆண்டுகளாக பீஹார் முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர், ஆளும் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார்; காங்., - ராஷ்ட்ரீய ஜனதா தள கூட்டணியையும் விட்டு வைக்கவில்லை.
மாற்று சக்தி பீஹாரில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், 243 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப் போவதாக ஜன் சுராஜ் தலைவர் பிரசாந்த் கிஷோர் அறிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
நான் சொல்வதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். பீஹார் முதல்வராக நிதிஷ் குமார் பதவி வகிப்பது இதுவே கடைசியாக இருக்கும்.
வரும் சட்டசபை தேர்தலில் அவர் 25 இடங்களுக்கு மேல் வென்றால், நான் அரசியலில் இருந்து விலகி விடுகிறேன்.
பீஹாரில் உள்ள 243 தொகுதிகளிலும் ஜன் சுராஜ் தனித்து போட்டியிடும். நிதிஷ் குமார் மிகவும் சோர்வடைந்து விட்டார்; ஓய்வுபெற்ற அதிகாரிகளின் உதவியுடன் மட்டுமே அவர் பணியாற்றுகிறார்.
அவரது உடல்நிலை குறித்தும் மக்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது. 20 ஆண்டுகள் தே.ஜ., கூட்டணியின் ஆட்சியையும், அதற்கு முன், 15 ஆண்டுகள் லாலு பிரசாத் யாதவின் ஆட்சியையும் பார்த்த பீஹார் மக்கள், தற்போது நம்பகமான மாற்று சக்தியை எதிர்பார்க்கின்றனர்.
அந்த மாற்று சக்தியாக நாங்கள் இருப்போம்; நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்துவோம்.
கொலை வழக்கில் சிக்கிய பா.ஜ.,வைச் சேர்ந்த பீஹார் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரியை, முதல்வர் நிதிஷ் குமார் பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
இல்லை எனில், கவர்னர் ஆரிப் முகமது கானை சந்தித்து கோரிக்கை விடுப்போம். 1995-ல் தாராபூரில் ஏழு பேர் கொல்லப்பட்ட வழக்கில், சாம்ராட் சவுத்ரி குற்றஞ்சாட்டப்பட்டார்.
ஆனால், 1981-ல் பிறந்ததாகவும், அதனால் குற்றம் நடந்த போது 14 வயது தான் என்றும், தவறான பிரமாணப் பத்திரத்தை நீதிமன்றத்தில் அவர் சமர்ப்பித்ததால் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
அதே சமயம், 2020 சட்டசபை தேர்தலில் சாம்ராட் சவுத்ரி தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், அவரது வயது 51 என குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படி என்றால், 1995-ல் அவருக்கு 26 வயது. அவரை பதவியிலிருந்து நீக்கக் கோரி பிரதமர் மோடிக்கும் கடிதம் எழுதுவேன்.
காங்., - ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் ஊழல் பற்றி உலகத்துக்கே தெரியும்; நான் சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை. ஆனால், அந்த கூட்டணியை விட, பா.ஜ., கூட்டணி அதிகமாக ஊழல் செய்துள்ளது. அதனால் தான், பா.ஜ., கூட்டணியின் ஊழலை அம்பலப்படுத்துகிறேன்.
குறை கூற முடியாது தேர்தலுக்கு முன்னரோ அல்லது பின்னரோ யாருடனும் கூட்டணி அமைக்கப் போவதில்லை. பண விவகாரங்களில் நான் மிகவும் வெளிப்படையானவன்.
மூன்று ஆண்டுகளில் வியூக வகுப்பாளராக, 241 கோடி ரூபாய் ஈட்டினேன். இதற்கு வரி கட்டி உள்ளேன். இந்த விபரங்கள் வருமான வரித் துறையின் இணையதளத்தில் உள்ளன. எனவே, என்னை யாரும் குறை கூற முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்து அரசியல்வாதியாக மாறியுள்ள பிரசாந்த் கிஷோரின் எண்ணம் பலிக்கிறதா என்பது, அடுத்த மாதம் இறுதிக்குள் தெரிந்து விடும்
- நமது சிறப்பு நிருபர் -.