'ஒப்பந்த முறையில் ஓட்டுநர் இடைத்தரகர் லாபம் பெற வழி' இந்திய கம்யூ., தொழிற்சங்கம் குற்றச்சாட்டு
'ஒப்பந்த முறையில் ஓட்டுநர் இடைத்தரகர் லாபம் பெற வழி' இந்திய கம்யூ., தொழிற்சங்கம் குற்றச்சாட்டு
UPDATED : ஜன 30, 2025 06:54 AM
ADDED : ஜன 30, 2025 01:19 AM

சென்னை:''அரசு போக்குவரத்துக் கழகங்களில், ஒப்பந்த முறையில் ஓட்டுநர், நடத்துநர்கள் நியமனம் செய்வது, இடைத்தரகர்கள் லாபம் பெறவே வழி வகுக்கும்,'' என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஏ.ஐ.டி.யு.சி., தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, முன்னாள் எம்.எல்.ஏ.,வும், ஏ.ஐ.டி.யு.சி., தலைவருமான ஆறுமுகம் கூறியதாவது:
தமிழகத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள், உரிய பயிற்சி பெற்று, அரசு போக்குவரத்துக் கழகங்களில் நிரந்தரமாக பணியாற்ற காத்திருக்கின்றனர்.
ஆனால், அரசு போக்குவரத்துக் கழகங்களில், ஒப்பந்த முறையில் ஓட்டுநர், நடத்துநர்களை, தனியார் வாயிலாக நியமனம் செய்வது ஏற்க முடியாது.
கடந்த சில நாட்களுக்கு முன் கூட, கோவை போக்குவரத்துக் கழகத்தில், 148 ஓட்டுநர்கள், 175 நடத்துநர்கள் நியமனம் செய்யும் பணிகள் நடந்துள்ளன. அரசு போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள, 39,000 பணியிடங்களை நிரப்ப, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒப்பந்த முறையில் நியமனம் செய்தால், இடைத்தரகர்கள் லாபம் பெறவே வழி வகுக்கும்; ஊழல் ஏற்படுவதற்கு வாய்ப்பாக அமைந்து விடும்; அரசுக்கு அவப்பெயர் ஏற்படும்.
ஆட்கள் பற்றாக்குறை காரணமாக, பஸ்களை இயக்க முடியவில்லை. பணிமனைகளில் பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. முழு அளவில் பஸ்கள் இயக்காததால், வருவாய் இழப்பும், பயணியருக்கு சேவை குறைபாடும் ஏற்படுகிறது.
எனவே, அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட காலி பணியிடங்களுக்கு, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கும் இளைஞர்களுக்கும், இறந்துபோன தொழிலாளர்களின் வாரிசுகளுக்கும் உடனே வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.