விஜய்க்கு எதிராக அவதுாறு 'போஸ்டர்'; தி.மு.க., நிர்வாகிகளுக்கு தலைமை 'டோஸ்'
விஜய்க்கு எதிராக அவதுாறு 'போஸ்டர்'; தி.மு.க., நிர்வாகிகளுக்கு தலைமை 'டோஸ்'
ADDED : ஆக 27, 2025 04:03 AM

முதல்வர் ஸ்டாலினை 'அங்கிள்' என விமர்சித்து பேசிய த.வெ.க., தலைவர் விஜயை கண்டித்து, அவதுாறு போஸ்டர்கள் ஒட்டிய மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க., நிர்வாகிகளை, கட்சி தலைமை கண்டித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
மதுரையில் கடந்த 21ம் தேதி, த.வெ.க., சார்பில் மாநில மாநாடு நடந்தது. இதில், 'அ.தி.மு.க.,வை பா.ஜ.,வின் அடிமை கட்சி' என்றும், தி.மு.க.,வை அரசியல் எதிரி என்றும் விஜய் விமர்சித்தார்.
முதல்வர் ஸ்டாலின் குறித்து பேசுகையில், 'தி.மு.க., - பா.ஜ., உடன் ரகசிய கூட்டணி வைத்துள்ளது. ஒரு ரெய்டு வந்தால் போதும்; உடனே டில்லி சென்று, ரகசிய மீட்டிங் போடுறாங்க. ஸ்டாலின் அங்கிள், இது வெரி ராங் அங்கிள்.
'தமிழகத்து பெண்கள், இங்கே தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என கதறிட்டு இருக்காங்க. இதெல்லாம் வெரி வெரி வொர்ஸ்ட் அங்கிள்' என, ஸ்டாலின் செயல்பாடுகளை விமர்சித்திருந்தார்.
இது, தி.மு.க., தரப்புக்கு நடிகர் விஜய் மீது மிகப் பெரிய கோபத்தை ஏற்படுத்தியது. அதுவரை விஜய் குறித்து பெரிதாக எதுவும் பேசாமல் இருந்து வந்த அமைச்சர்கள், தலைமை கழக நிர்வாகிகள், விஜய்க்கு எதிராக கொந்தளிக்கத் துவங்கினர்.
இதன் தொடர்ச்சியாக, நடிகர் விஜயை கண்டித்து, மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க., செயலரும், எம்.எல்.ஏ.,வுமான கோ.தளபதி மற்றும் கட்சி நிர்வாகிகள் சிந்து நாகேந்திரன், தமிழ்சந்திரன், வீரமணி ஆகியோரின் படத்துடன், மதுரையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
அவற்றில் இடம் பெற்றிருந்த வாசகங்கள் விபரம்:
திராவிடம் வெறும் சிந்தனை அல்ல; வாழ்வியல். தி.மு.க., வெறும் அரசியல் கட்சி அன்று. அது, தமிழக மக்களின் சொத்து.
ஜனநாயக போர்க்களத்திற்கு கொள்கை வாளையும், சனாதனத்தை அறுத்தெறியும் வேலையையும், பகுத்தறிவென்னும் சுயமரியாதை ஈட்டியையும், சமூக நீதிக்கான கேடயங்களையும் வடித்து தந்திட்ட, திராவிட பெருவேந்தரான உதயநிதியாரின் உடன் பிறவாத தம்பிகள் உயிரோடு இருக்கும் வரை, த.வெ.க., அணில் கூட்டத்தினரால் ஒரு ம...யும் புடுங்க முடியாது என அச்சிடப்பட்டுள்ளது.
இது மக்களிடம் முகச் சுளிப்பையும் ஏற்படுத்தியது. இத்தகவலை, தி.மு.க., தலைமைக்கு உளவுத்துறையினர் தெரிவிக்க, மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க., நிர்வாகிகளுக்கு, கட்சி தலைமையால் டோஸ் விடப்பட்டுள்ளது.
மதுரையில் த.வெ.க., தலைவர் விஜயை விமர்சித்து தி.மு.க.,வினர் ஒட்டிய போஸ்டர்.
- நமது நிருபர் -