ADDED : அக் 06, 2024 01:10 AM

புதுடில்லி: சென்னை மெட்ரோவின் இரண்டாம் கட்ட பணிகளுக்கு மத்திய அரசு சமீபத்தில் அனுமதி அளித்தது. இது, டில்லி அரசியல் வட்டாரங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், 'தி.மு.க., - -பா.ஜ., நெருங்கி வருகிறதா' என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த இரண்டாம் கட்ட திட்டம், பல மாதங்களாக கிடப்பில் இருந்தது; தவிர, நிதி அமைச்சகம் இதற்கு அனுமதி அளிக்க கிட்டத்தட்ட மறுத்து விட்டது. இந்நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் டில்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்து, இத்திட்டத்திற்கு விரைவில் அனுமதி அளிக்கும்படி கோரிக்கை வைத்தார்.
மத்திய அமைச்சரவை, இதற்கான அனைத்து வேலைகளையும் ஒரே நாளில் முடித்து, அனுமதியும் வழங்கியது குறித்து அதிகாரிகள் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.
இந்த விவகாரத்தில், பல அமைச்சகங்களின் அனுமதி தேவை. மேலும், இந்த விவகாரத்தை கவனிப்பது, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை.
இதன் அமைச்சர், ஹரியானாவின் முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டார். அவரோ, ஹரியானா சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் பிசியாக இருந்தார். எனவே, அவர் செய்ய வேண்டிய வேலைகளை, சென்னை மெட்ரோ திட்டத்திற்காக செய்தது, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
'இப்போதைக்கு அனுமதி கிடையாது' என, ஒரு மாதத்திற்கு முன் சொன்ன நிதி அமைச்சகம், தற்போது அனுமதி வழங்க அனைத்து வேலைகளையும் செய்துள்ளது. தமிழக முதல்வரின் வேண்டுகோளை ஏற்று, பிரதமர் கட்டளையிட்டதாக சொல்லப்படுகிறது. எது எப்படியோ... சென்னை மக்களுக்கு இந்த திட்டம் ஒரு பெரிய வரப்பிரசாதம்.
இந்த அனுமதி, அரசியல் ரீதியாக பல கேள்விகளை எழுப்பியுள்ளதுடன், காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் சந்தேகத்தையும் உண்டாக்கியுள்ளது.
பா.ஜ.,வுடன் தி.மு.க., நட்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளதா? காங்கிரசின் சீனியர் தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ் மற்றும் முகுல் வாஸ்னிக் ஆகியோர், தி.மு.க., சீனியர் எம்.பி., ஒருவரிடம், 'முதல்வரும், பிரதமரும் என்ன பேசினர்? நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தனரே... என்ன நடந்தது?' என, விசாரித்து உள்ளனராம். அந்த எம்.பி.,யோ, 'எனக்கு எதுவும் தெரியாது' என கைவிரித்து விட்டாராம்.
தி.மு.க., பவள விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், 'பா.ஜ.,வை உள்ளே வர விடக்கூடாது' என, கறாராக சொல்லி விட்டார்; ஆனாலும், காங்கிரசுக்கு சந்தேகம் தீரவில்லை. 'இதென்ன காதலா அல்லது உறவா?' என, டில்லி தலைவர்கள் கிண்டலடிக்கின்றனர்.
தன் ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள, தி.மு.க., எதையும் செய்ய தயாராக இருக்கும்' என, சந்தேகிக்கின்றனர் காங்கிரசார். இதற்கேற்றார் போல, தி.மு.க., அமைச்சர்கள் மீது, அமலாக்கத் துறை வழக்குகளில் வேகம் காட்டாமல், அமைதியாக இருப்பதையும் அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.