ADDED : அக் 20, 2024 03:19 AM

புதுடில்லி: கேரளாவின், வயநாடு லோக்சபா தொகுதியிலிருந்து வெற்றி பெற்ற ராகுல், ராஜினாமா செய்து விட்டார். அவர், ரேபரேலி தொகுதியிலும் வென்றதால் அதைத் தக்க வைத்துக் கொண்டார். இதையடுத்து, 'வயநாட்டில் நவ., 13ல் இடைத்தேர்தல் நடைபெறும்' என, தேர்தல் கமிஷன் அறிவித்தது. அனைவரும் எதிர்பார்த்தபடி, பிரியங்கா இங்கு முதன் முறையாக போட்டியிடுகிறார் .
'வயநாட்டின் ப்ரியங்காரி' என வாழ்த்தி, வயநாட்டில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. ஆனால், எந்த அளவிற்கு ராகுலும், பிரியங்காவும் இங்கு பிரசாரம் செய்வர் என, கேரள காங்கிரஸ் தொண்டர்கள் கலக்கத்தில் உள்ளனர். காரணம், நவ., 13, 20களில் ஜார்க்கண்ட் மற்றும் மஹாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளன.
ஜார்க்கண்டில் காங்., கூட்டணி அரசு ஆட்சியில் உள்ளது. மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள, 'இண்டி' கூட்டணி பலத்த பிரசாரம் செய்ய வேண்டிய நிலையில் உள்ளது. அதேபோல, மஹாராஷ்டிராவில் பா.ஜ., கூட்டணியை ஆட்சியிலிருந்து அகற்றவும், கடும் பிரசாரம் தேவைப்படுகிறது.
இதனால் ராகுலும், பிரியங்காவும் இந்த மாநிலங்களில் அதிகளவில் பிரசாரம் செய்ய வேண்டியிருக்கும். எனவே, வயநாட்டில் அதிக நேரம் பிரசாரம் செய்ய முடியாது; இது, காங்., தொண்டர்களை பாதித்தாலும், 'பிரசாரம் செய்யாமலேயே பிரியங்கா வெற்றி பெறுவார்' என்கின்றனர், டில்லி காங்., தலைவர்கள்.