சனாதன தர்மத்தை பாதுகாக்க ஜனசேனாவில் புதிய பிரிவு துணை முதல்வர் பவன் கல்யாண் அதிரடி
சனாதன தர்மத்தை பாதுகாக்க ஜனசேனாவில் புதிய பிரிவு துணை முதல்வர் பவன் கல்யாண் அதிரடி
ADDED : நவ 04, 2024 03:25 AM

எலுரு: ''சனாதன தர்மத்தை பாதுகாக்கும் நோக்கில், ஜனசேனா கட்சியில், 'நரசிம்ம வாராஹி படை' என்ற புதிய பிரிவு துவங்கப்படுகிறது,'' என, அக்கட்சி தலைவரும், ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் தெரிவித்தார்.
ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில், தெலுங்கு தேசம் - ஜனசேனா - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, ஜனசேனா தலைவர் பவன் கல்யாண், துணை முதல்வராக உள்ளார்.
எலுரு மாவட்டத்தின் ஜகன்னாதபுரம் என்ற கிராமத்தில் ஆண்டுக்கு மூன்று சமையல் காஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கும், 'தீபம் - 2' என்ற திட்டத்தை, துணை முதல்வர் பவன் கல்யாண் நேற்று முன்தினம் துவக்கி வைத்தார்.
இதன்பின், துணை முதல்வர் பவன் கல்யாண் கூறியதாவது:
நான் அனைத்து மதங்களையும் மதிக்கிறேன். ஆனால், என் நம்பிக்கையில் உறுதியாக இருக்கிறேன்.
சமூக வலைதளங்களில் சனாதன தர்மத்தை விமர்சிப்போர் அல்லது அவமரியாதை செய்வோர் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். சனாதன தர்மத்தை பாதுகாக்க, ஜனசேனாவில், 'நரசிம்ம வாராஹி படை' என்ற பெயரில் புதிய பிரிவு துவங்கப்படுகிறது. பெண்கள் மீது தாக்குதல், சமூக வலைதளங்களில் மிரட்டல் விடுப்போர் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரத்தில், 11 நாட்கள் விரதமிருந்து ஏழுமலையானிடம் துணை முதல்வர் பவன் கல்யாண் மன்னிப்பு கேட்டார்.
அப்போதே, 'சனாதன தர்மத்தை பாதுகாக்க தேசிய அளவில் அமைப்பை உருவாக்க வேண்டும்' என, அவர் கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.