ஐ.எஸ்., அமைப்புக்கு ஆள் சேர்க்க ஜாபர் சாதிக் நிதியுதவி அளித்தாரா? என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை
ஐ.எஸ்., அமைப்புக்கு ஆள் சேர்க்க ஜாபர் சாதிக் நிதியுதவி அளித்தாரா? என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை
ADDED : மார் 07, 2024 04:59 AM

சென்னை : சர்வதேச போதை பொருள் கடத்தல்காரர் ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர்கள், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்குஆட்களை சேர்க்க, அரபிக்கல்லுாரி முன்னாள் பேராசிரியர் மற்றும் மாணவர்களுக்கு நிதியுதவி அளித்தனரா என்பது குறித்து, என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
சென்னை சாந்தோம் அருளானந்தம் தெருவில் வசிப்பவர் ஜாபர் சாதிக், 36. தி.மு.க.,வில் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்தார்.
சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவராக செயல்பட்ட இவரையும், இவரின் சகோதரர்கள் முகமது சலீம், மைதீன் ஆகியோரையும், டில்லியை சேர்ந்த மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
மூவரும் வெளிநாடுகளுக்கு தப்பி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.ஜாபர் சாதிக்கின் எட்டு வங்கி கணக்குகள், முகமது சலீம் மற்றும் மைதீனின் ஆறு வங்கி கணக்குளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அதில், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களை சேர்க்க, மூவரும் நிதியுதவி செய்ததாக கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
அவர்கள் கூறியதாவது: கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன், 2022ல், குண்டு வெடிப்பு நடத்திய, ஐ.எஸ்., பயங்கரவாதி ஜமேஷா முபின் பலியானார். இவரது தலைமையில், 12க்கும் மேற்பட்டோர் தற்கொலை படையினராக மாறி தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்தனர்.
இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக, தமிழகம் முழுவதும் பல கட்டங்களாக சந்தேக நபர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை செய்யப்பட்டது.
அப்போது சிக்கிய ஆவணங்களை ஆய்வு செய்ததில், மூளைச்சலவை செய்யப்பட்ட வாலிபர்களுக்கு, சென்னை, கோவையில் உள்ள அரபிக்கல்லுாரியில் பயங்கரவாத பயிற்சி அளிக்கப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக, அரபிக் கல்லுாரிகளின் பேராசிரியர், முன்னாள் மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களின் வங்கி கணக்கை ஆய்வு செய்வதில், சில பண பரிவர்த்தனைகள் எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தின. அதுபற்றிய விபரத்தை, டில்லியைச் சேர்ந்த மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தோம்.
அவர்கள் தற்போது போதை பொருள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வரும், ஜாபர் சாதிக், அவரது சகோதரர்கள் முகமது சலீம், மைதீன் ஆகியோரின் வங்கி கணக்குளை ஆய்வு செய்து, பண பரிவர்த்தனை குறித்து நாங்கள் கொடுத்த தகவல்களுடன் ஒப்பிட்டு பார்த்துள்ளனர்.
அதில், ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர்கள் அரபிக்கல்லுாரி பேராசியர் மற்றும் முன்னாள் மாணவர்கள் வாயிலாக, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களை சேர்க்க, ஆயுத பயிற்சி அளிக்க நிதியுதவி செய்து இருப்பது தெரியவந்துள்ளது.
இதனால், ஜாபர் சாதிக் மற்றும் அவரது கூட்டாளிகள் மற்றும் சகோதரர்கள் முகமது சலீம், மைதீன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
போலி பாஸ்போர்ட்
ஜாபர் சாதிக் வீட்டில் கைப்பற்றிய ஆவணங்களை, மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, வெவ்வேறு பெயர்களில் மூன்றுக்கும் மேற்பட்ட போலி பாஸ்போர்ட்டுகளை ஜாபர் சாதிக் பயன்படுத்தி வந்தது தெரியவந்துள்ளது.

