ADDED : ஜன 10, 2024 04:07 AM

நன்மைகளை வாரி வழங்கி, தீமைகளைத் தீர்த்து வைக்கும், மேச்சேரி பத்ரகாளியம்மன் குடிகொண்டிருக்கும் மேட்டூர், மக்களைக் காக்கும் மூக்காரெட்டிப்பட்டி வீரபத்திரசாமி மற்றும் காணியம்மன் குடி கொண்டிருக்கும் பாப்பிரெட்டிபட்டி, மழவர் நாடு என்ற, 2,000 ஆண்டுகள் வரலாற்றை உடைய அரியூர் என்று அழைக்கப்படும் அரூர், வர்ணீஸ்வரர் கோவில், தென்பெண்ணை ஆற்றங்கரை வேடியப்பன் சுவாமி, தீர்த்தகிரீஸ்வரர் குடிகொண்டிருக்கும் தீர்த்தமலை, சித்தேரிமலைகள் என்ற சிறப்புகள் பெற்ற அரூர் ஆகிய மூன்று சட்டசபைத் தொகுதிகளிலும் பாதயாத்திரை பயணம் மிகச் சிறப்பாக நடந்தேறியது.
மேட்டூர்
இங்கே அமைந்துள்ள மேட்டூர் அணை வாயிலாக, 17 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பல எதிர்ப்புகளைக் கடந்து, 1934ல் கட்டப்பட்ட மேட்டூர் அணைதான் டெல்டா மாவட்டங்களுக்கு தண்ணீர் கொடுக்கிறது. தமிழகம் பசுமையாகவும் செழுமையாகவும் இருக்க முக்கிய காரணம் மேட்டூர் அணை.
கடந்த 2022ல் மேட்டூர் அணையில் தண்ணீர் தேக்கி வைக்க போதிய கொள்ளளவு இல்லாமல், 500 டி.எம்.சி., தண்ணீர், அதாவது, 14 லட்சம் கோடி லிட்டர் கடலில் வீணாக கலந்தது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், தமிழக அரசின் நீர்வளத் துறை சமர்ப்பித்த அறிக்கையில், மேட்டூர் அணையை துார்வாரினால் கூடுதலாக 30 டி.எம்.சி., தண்ணீர் அணையில் தேக்கி வைக்க முடியும் என்றும், அதற்கு 3,000 கோடி ரூபாய் செலவாகும் என்றும் கூறியிருந்தனர்.
கடலில் கலக்கும் நீரை, மேட்டூர் அணையில் சேமித்து வைத்தால், விவசாயிகளுக்குப் பலன் கிடைக்கும் என்பதற்காகத் தான், இந்த துார்வாரும் திட்டம். ஆனால், அரசிடம் நிதி இல்லை என்று கூறி, இப்பாசனக் குடிநீர் திட்டத்தை நிராகரித்து விட்டது தி.மு.க., அரசு.
மாறாக, மக்களுக்குப் பயன் இல்லாத அறிவுப்புகளாக, பல பயனற்றத் திட்டங்களை வீண் ஆடம்பர, வெட்டி விளம்பரத்திற்காகச் செயல்படுத்துகின்றனர்.
மேட்டூரில் 'தோனி மடுவு' திட்டத்தின் கீழ், ஒரே ஒரு தடுப்பணை கட்டினால், மேட்டூர் தொகுதி உட்பட்ட கொளத்துார் மற்றும் அந்தியூர் பகுதிகளில், மேலும் 1,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். ஆனால், பல ஆண்டுகளாக இந்த கோரிக்கை நிறைவேற்றப்படாமல் இருக்கிறது.
பாப்பிரெட்டிபட்டி
இருபதாயிரம் ஏக்கரில், இங்கு மரவள்ளிக்கிழங்கு சாகுபடி நடைபெறுகிறது. ஆனால், இந்த சாகுபடி பரப்பை அதிகரிக்கவோ, இதை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு நன்மை விளைவிக்கவோ, அரசுத் தரப்பில் எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை.
பிரதமர் மோடி, கடந்த ஒன்பதாண்டுகளில், தமிழகத்தில் மருத்துவக் கல்வி இடங்களை இரட்டிப்பாக்கி இருக்கிறார். இதனால், தமிழகத்தில் இருந்து அதிகமான மருத்துவர்கள் உருவாகும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கூடவே, மருத்துவக் கல்வி வாய்ப்பு, அனைவருக்கும் சமமாக வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு அரசு மருத்துவக் கல்லுாரி என்பதே, பிரதமர் விருப்பம். இதைத் தடுத்து, தனியார் மருத்துவக் கல்லுாரிகள் உருவாக்கவே, 'நீட்' எதிர்ப்பு இயக்கம் நடத்திக் கொண்டிருக்கிறது தி.மு.க.,
இதை வலியுறுத்தி, பாப்பிரெட்டிபட்டியில் நடந்த பாதயாத்திரையில் பேசும்போது, கூடியிருந்த மக்கள் அனைவரும் அதை ஆமோதித்தனர்.
அரூர்
தமிழகத்திற்கும் ராமருக்கும் சம்பந்தமில்லை என்று சொல்கிறவர்கள் அறிவரா? ராமபிரான் சிவபெருமானை இரண்டு இடங்களில் பிரதிஷ்டை செய்து, சிவபூஜை செய்துள்ளார் என்று. அதில் ஒன்று ராமேஸ்வரம், மற்றொன்று தீர்த்தங்கள் நிறைந்த தீர்த்தகிரிமலை.
ராமபிரானை வேண்டி, இங்குள்ள தீர்த்தக் குளத்தில் ராமஜெயம் என்று சொல்லி நீராடினால் புண்ணியம் கிடைக்கும் என்று சொல்வர். அயோத்தி ராமர் கோவிலும், ராமர் வழிபட்ட அரூர் கோவிலும் ஒன்றுதான்.
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசிக்கு, மத்திய அரசு வழங்கிய நிதி 34,019 கோடி ரூபாய். மாநில அரசின் பங்கு 3,189 கோடி ரூபாய்.
ரேஷன் கடைகளில் மக்களுக்கு வழங்கப்படும் 1 கிலோ அரிசியின் விலை 35 ரூபாய். அதில், 32 ரூபாய் மத்திய அரசு வழங்குகிறது. 3 ரூபாய் மட்டுமே, மாநில அரசின் பங்கு.
ஆனால், இங்கே மாநில அரசு ரேஷனில் இலவச அரிசிக் கொடுப்பது போல பேசிக் கொண்டுள்ளனர்.
இப்படியெல்லாம் மாநிலங்களுக்கு பார்த்து பார்த்து எல்லா உதவிகளையும் செய்யும் பிரதமர் மோடி வேண்டாம்; வேறு பிரதமர் வேண்டும் என, தி.மு.க., தேடிக் கொண்டிருக்கிறது. அந்த பிரதமர் யார்? தமிழக மக்கள் பலியாகி விடக் கூடாது.

