ADDED : மார் 21, 2025 04:06 AM

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நாளை காலை நடக்கிறது.
ம.நீ.ம., வட்டாரங்கள் கூறியதாவது:
ஜூலை மாதத்தில் நடக்கவுள்ள ராஜ்யசபா தேர்தலில், தி.மு.க., சார்பில், ம.நீ.ம., தலைவர் கமல் ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட உள்ளார். நாளை நடக்கும் கூட்டத்தில், சட்டசபை தேர்தலில் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள், வேட்பாளர்கள் தேர்வு குறித்து ஆலோசிக்கிறார்.
அதாவது, கட்சிக்கு குறைந்தபட்சம் 30,000 ஓட்டு வங்கி உள்ள தொகுதிகளை தேர்வு செய்து, அந்த பட்டியலை தி.மு.க.,விடம் கொடுத்து, தொகுதி உடன்பாடு செய்ய கமல் திட்டமிட்டுள்ளார்.
இதற்கிடையில், த.வெ.க., தலைவர் விஜய், தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். அவர் செல்லும் இடங்களுக்கு எல்லாம் சென்று, அவரது பேச்சுக்கு எதிராகவும், தி.மு.க.,வுக்கு ஆதரவாகவும் பேசுமாறு, கமலுக்கு ஆளும் தரப்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதற்கான பயணத் திட்டமும், நாளைய கூட்டத்தில் வகுக்கப்பட உள்ளது.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.