மதுரை மேயர் தேர்வில் தி.மு.க., திணறல்: மா.கம்யூ.,க்கு யோகம்
மதுரை மேயர் தேர்வில் தி.மு.க., திணறல்: மா.கம்யூ.,க்கு யோகம்
ADDED : அக் 17, 2025 01:23 AM

மதுரை: அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன் இடையே ஒற்றுமை இல்லாததால், மதுரைக்கு புதிய மேயரை தேர்வு செய்வதில் தி.மு.க., திணறுகிறது. இதனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டைச் சேர்ந்த துணை மேயர் நாகராஜனுக்கு, 'பொறுப்பு' மேயராகும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
மதுரை தி.மு.க.,வில் அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன், மாநகரச் செயலர் தளபதி எம்.எல்.ஏ., என கட்சி நிர்வாகிகள் பிரிந்து கிடக்கின்றனர். அமைச்சர் தியாகராஜனின் ஆதரவாளரான இந்திராணி கடந்த 2022ல் மேயரானார்.
தலையீடு
மாநகராட்சி நிர்வாகத்தில் மேயரின் கணவர் பொன் வசந்த் தலையீடு அதிகரித்ததால், தியாகராஜன் கண்டித்தார்.
ஆனால், தியாகராஜனுக்கு எதிரான அரசியல் போக்கை பொன் வசந்த் கையில் எடுத்ததால், அவரை அமைச்சர் தியாகராஜன் கழற்றி விட்டார். இதற்கிடையே, மதுரை மாநகராட்சியில், 150 கோடி ரூபாய் சொத்து வரி முறைகேடு விவகாரத்தில் மேயரின் கணவர் பொன் வசந்த் கைதானார்.
அரசியல் அழுத்தம் காரணமாக, மேயர் பதவியை இந்திராணி நேற்று முன்தினம் ராஜினாமா செய்தார்.
இதையடுத்து, புதிய மேயரை தேர்வு செய்வதில் அமைச்சர்கள் இருவருக்கும் இடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.
அமைச்சர் மூர்த்தி, முன்னாள் மண்டல தலைவர் வாசுகிக்கு ஆதரவு தெரிவிக்கிறார்; தியாகராஜன் எதிர்ப்பு தெரிவிக்கிறார்.
மாநகரப் பகுதியைச் சேர்ந்த கவுன்சிலர்களை நியமிக்க தியாகராஜன் பரிந்துரைத்தால், மூர்த்தி தரப்பு ஏற்க மறுக்கிறது.
மூர்த்தியும், தியாகராஜனும் சேர்ந்து கவுன்சிலர் லட்சிகா ஸ்ரீயை மேயர் பதவிக்கு சிபாரிசு செய்தால், மாநகரச் செயலர் தளபதி முட்டுக்கட்டை போடுகிறார். மூவரும் சேர்ந்து ஒருவரை புதிய மேயராக தேர்வு செய்ய முடியவில்லை. இதனால், தி.மு.க., தலைமை திணறுகிறது.
அவசர கூட்டம்
இந்நிலையில், மா.கம்யூ.,வைச் சேர்ந்த துணை மேயர் நாகராஜன் தலைமையில், மாநகராட்சி அவசரக் கூட்டம் இன்று நடக்கிறது. இதில், மேயர் இந்திராணி ராஜினாமா ஏற்கப்படுகிறது. அமைச்சர்களுக்குள் உடன்பாடு ஏற்பட்டால், இக்கூட்டத்திலேயே புதிய மேயர் தேர்வு செய்யப்படுவார்.
ஆனால், 'கூட்டத்தில் பங்கேற்று மேயர் ராஜினாமாவை ஏற்பதாக மட்டும் கையெழுத்து போட்டுவிட்டு வெளியேறுங்கள்.
கூடுதல் பொறுப்பு
'ராஜினாமா ஏற்புக்கு பின், துணை மேயர் ஏதாவது மக்கள் பிரச்னை குறித்து பேசி கூட்டத்தை நீட்டித்தால், தி.மு.க., கவுன்சிலர்கள் உள்ளே இருக்க தேவையில்லை' என ஆளுங்கட்சி சார்பில் தி.மு.க., கவுன்சிலர் களிடம் அறிவுறுத்தப் பட்டுள்ளது.
இதனால், புதிய மேயர் தேர்வு தள்ளிப்போகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, தி.மு.க., கவுன்சிலர்கள் கூறியதாவது:
மேயர் இல்லாத நிலையில், துணை மேயருக்கு கூடுதல் பொறுப்பு வழங்க வாய்ப்புள்ளது.
அப்படியென்றால், வெறும் நான்கு கவுன்சிலர்களை வைத்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், 69 கவுன்சிலர்களை கொண்ட தி.மு.க.,வை வழி நடத்துமா? அமைச்சர்கள் தங்களுக்குள் உள்ள 'ஈகோ'வால் கட்சியை சேதப்படுத்தலாமா.
ஏற்கனவே கூட்டணியில் இருந்தாலும், பல சமயங்களில் எதிர்த்து அரசியல் செய்யும் மா.கம்யூ.,க்கு பொறுப்பு மேயர் பதவி கிடைத்தால், கூட்டணிக்குள் தேவையில்லாத மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, உடனடியாக புதிய மேயரை தேர்வு செய்ய, தி.மு.க., தலைமை முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.