கூட்டணி அமையாவிட்டால் காங்.,கை உடைக்க தி.மு.க., திட்டம்?
கூட்டணி அமையாவிட்டால் காங்.,கை உடைக்க தி.மு.க., திட்டம்?
ADDED : மார் 03, 2026 05:57 AM

சென்னை: தி.மு.க.,வுடனான கூட்டணி முறிந்து காங்கிரஸ் வெளியேறினால், அக்கட்சியை உடைக்க தி.மு.க., திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
கடந்த 2004 முதல் 22 ஆண்டுகளாக, தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் உள்ளது. ஆனாலும், காங்கிரசுடன் சுமுகமாக தொகுதி பங்கீட்டை முடிக்க முடியாமல் தி.மு.க., திணறி வருகிறது.
தி.மு.க.,வுடன் தொகுதி பங்கீட்டை முன்கூட்டியே முடித்து, தேர்தல் களத்தில் இறங்கி விட வேண்டும் என, ராகுலிடம் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரீஷ் ஷோடங்கர் வலியுறுத்தினார். அதை தொடர்ந்து, கடந்த நவம்பர் 22ம் தேதியே ஐவர் குழுவை, காங்கிரஸ் தலைவர் கார்கே அமைத்தார்.
குறைத்து மதிப்பீடு
முன்கூட்டியே பேசினால் அதிக தொகுதிகளை கேட்டு, காங்கிரஸ் பிடிவாதம் பிடிக்கும். கடைசி வரை இழுத்துக் கொண்டே சென்றால், வேறு வழியின்றி கொடுக்கும் தொகுதிகளை பெற்றுக் கொள்ளும் என தி.மு.க., திட்டமிட்டது. ஆனால், 41 தொகுதிகள், இரண்டு ராஜ்யசபா எம்.பி., பதவி, ஆட்சியில் பங்கு என்பதில் காங்கிரஸ் உறுதியாக நின்றது.
முதல்முறையாக கடந்த மாதம் 28ல் நடந்த பேச்சில், 2021ல் தந்த 25 தொகுதிகள், ஒரு ராஜ்யசபா எம்.பி., பதவி தருவதாக தி.மு.க., கூறி உள்ளது. இதை ஏற்க மறுத்த கிரீஷ் ஷோடங்கர், 'குறைந்தது 30 தொகுதிகளையாவது தர வேண்டும். இதை தர மறுப்பது, காங்கிரசை குறைத்து மதிப்பிடும் செயல்' என கூறி உள்ளார்.
ஒரு தொகுதியைக்கூட அதிகமாக தர தி.மு.க., மறுப்பதால் கோபமடைந்த கிரீஷ், பேச்சு விபரங்களை வெளிப்படையாக போட்டு உடைத்தார்.
இது தொடர்பாக, தி.மு.க., நிர்வாகி ஒருவர் கூறியதாவது: கடந்த 1971 சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணி 205 இடங்களில் வென்றது. இந்த சாதனையை, வரும் தேர்தலில் முறியடிக்க வேண்டும் என ஸ்டாலின் நினைக்கிறார். கருணாநிதியால் தொடர்ந்து இரண்டு தேர்தல்களில் வெல்ல முடியவில்லை.
ராகுலுக்கு தகவல்
இதை முறியடிக்க, இதை விட்டால் வாய்ப்பு கிடைக்காது என்பது ஸ்டாலினின் கணக்கு. காங்கிரசுக்கு 25 தொகுதிகளுக்கு மேல் கொடுக்க மறுப்பதற்கு, இது தான் காரணம். இவ்வாறு அவர் கூறினார்.
காங்கிரசுக்கு அதிக தொகுதிகள் கொடுத்தால், வி.சி., போன்ற கட்சிகளுக்கு கூடுதல் தொகுதிகளை கொடுக்க வேண்டியிருக்கும். இது, கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி விடும் என ஸ்டாலின் கருதுவதாக கூறப்படுகிறது.
அதனால், கூட்டணி அமையாவிட்டால், காங்கிரசில் உள்ள தி.மு.க., ஆதரவாளர்களை ஒன்று சேர்த்து, கடந்த 1996 சட்டசபை தேர்தல் போல அக்கட்சியை உடைக்க தி.மு.க., திட்டமிட்டு வருவதாக, கிரீஷ் ஷோடங்கர் வாயிலாக ராகுலுக்கு தகவல் சென்றுள்ளது.
இதனால் ஏற்பட்ட கோபத்தில் தான், ஸ்டாலினை, சகோதரர் என குறிப்பிடாமல், ராகுல் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் என, காங்கிரஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

