sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

மருந்தின் 'பிராண்ட்' பெயர் எழுத டாக்டர்களுக்கு தடை!: 'ஜெனரிக்' மருந்துகளை மட்டுமே பரிந்துரைக்க உத்தரவு

/

மருந்தின் 'பிராண்ட்' பெயர் எழுத டாக்டர்களுக்கு தடை!: 'ஜெனரிக்' மருந்துகளை மட்டுமே பரிந்துரைக்க உத்தரவு

மருந்தின் 'பிராண்ட்' பெயர் எழுத டாக்டர்களுக்கு தடை!: 'ஜெனரிக்' மருந்துகளை மட்டுமே பரிந்துரைக்க உத்தரவு

மருந்தின் 'பிராண்ட்' பெயர் எழுத டாக்டர்களுக்கு தடை!: 'ஜெனரிக்' மருந்துகளை மட்டுமே பரிந்துரைக்க உத்தரவு

11


ADDED : மே 03, 2025 12:17 AM

Google News

ADDED : மே 03, 2025 12:17 AM

11


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: 'டாக்டர்கள் மருந்துகளை பரிந்துரைக்கும் போது, 'பிராண்ட்' பெயர்களை குறிப்பிடாமல், 'ஜெனரிக்' மருந்துகளின் பெயர்களை மட்டுமே பரிந்துரைக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் மருந்துகளில், 'பிராண்டட்' மருந்துகள், 'ஜெனரிக்' மருந்துகள் என இரு வகைகள் உள்ளன. இந்த, 'பிராண்டட்' வகை மருந்துகள், உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பெரு நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டு சந்தைப்படுத்தப்படுகின்றன.

அதே, பிராண்டட் மருந்துகளில் உள்ள மருத்துவ மூலப்பொருட்களை உடைய மருந்துகள், பல்வேறு சிறு நிறுவனங்களால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டு, வேறு பெயர்களில் விற்பனை செய்யப்படுகின்றன. இவை, ஜெனரிக் மருந்துகள் என்று அழைக்கப்படுகின்றன.

மருத்துவ செலவு

உதாரணத்திற்கு, 'பாராசிட்டமால்' என்பது, பிராண்ட் பெயர் அல்ல. அது, மருத்துவ மூலப்பொருளை குறிக்கும் பொதுவான பெயர். ஆனால், 'டோலோ 650, குரோசின், மெடாசின்' போன்றவை, பிராண்ட்களின் பெயர்கள்.

பிராண்டட் மருந்துகளை விட, ஜெனரிக் மருந்துகள் பன்மடங்கு விலை குறைவாக விற்கப்படுகின்றன. ஒருசில உடல்நலக் கோளாறுகளுக்கு, குறிப்பாக புற்றுநோய் போன்ற தீவிரமான நோய்களுக்கு சந்தையில் விற்கப்படும் மருந்துகள் அதிக விலை உடையவை.

அதுவே, ஜெனரிக் மருந்தாக வாங்கினால், அவை குறைவான விலையில் கிடைக்கின்றன. இதனால், ஜெனரிக் மருந்துகளை மக்கள் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது.

மேலும், பல கோடி முதலீடு செய்யும் மருத்துவ பெரு நிறுவனங்கள், தங்கள் பிராண்ட்களை சந்தைப்படுத்த அதிரடியான மார்க்கெட்டிங் உத்திகளை செயல்படுத்துகின்றன.

மருந்து நிறுவனங்களின் நெறிமுறையற்ற சந்தைப்படுத்துதல் நடைமுறைகளை ஒழுங்குபடுத்தக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், 'டாக்டர்களுக்கு மருந்து நிறுவனங்கள் லஞ்சம் கொடுத்து, அதிகப்படியான மருந்துகளை எழுத அழுத்தம் கொடுக்கின்றன. அதிக விலை உடைய மருந்து பிராண்ட்களை பரிந்துரைக்கவும் வலியுறுத்துகின்றன. இது சாதாரண மக்களுக்கு மருத்துவ செலவுகளை அதிகரிக்கின்றன.

'அதுமட்டுமின்றி அவர்களுக்கு எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்துகிறது. எனவே, மருந்து நிறுவனங்களில் சந்தைப்படுத்துதல் நடைமுறைகளை ஒழுங்குபடுத்த வேண்டும்' என, குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் விக்ரம் நாத், சஞ்சய் கரோல் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், 'பிரபல காய்ச்சல் மருந்தான டோலோ 650ஐ, டாக்டர்களுக்கு இலவசமாக வினியோகிக்க, மருந்து தயாரிப்பு நிறுவனம் 1,000 கோடி ரூபாய் செலவிட்டதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது' என, குறிப்பிட்டார்.

ஒத்தி வைப்பு

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

ஜெனரிக் மருந்துகளை டாக்டர்கள் பரிந்துரைக்க ஓர் சட்டப்பூர்வ ஆணை அவசியம். அது இருந்தால், டாக்டர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக கூறப்படும் மருந்து நிறுவனங்கள் தொடர்பான பிரச்னை தீர்க்கப்படும்.

அது மட்டுமின்றி, மருந்துகளின் பிராண்ட் பெயர்களை குறிப்பிடாமல், ஜெனரிக் மருந்துகளின் பெயர்களை மட்டுமே டாக்டர்கள் பரிந்துரைக்க வேண்டும்.

ராஜஸ்தானில், ஒவ்வொரு டாக்டரும், ஜெனரிக் மருந்தை மட்டுமே பரிந்துரைக்க வேண்டும் என்ற நிர்வாக உத்தரவு அமலில் உள்ளது.

அவர்கள் எந்த நிறுவனத்தின் பெயர்களையும் பரிந்துரைக்க முடியாது. இந்த உத்தரவு நாடு முழுதும் செயல்படுத்தப்பட்டால், மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். இந்த விவகாரத்தில் மேலும் பல கருத்துகள் கேட்கப்பட உள்ளதால், விசாரணை ஜூலை மாதத்துக்கு ஒத்திவைக்கப்படுகிறது.

இவ்வாறு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us