'எய்ம்ஸ்' மருத்துவமனையில் இருந்து கொத்து கொத்தாக வெளியேறும் டாக்டர்கள்
'எய்ம்ஸ்' மருத்துவமனையில் இருந்து கொத்து கொத்தாக வெளியேறும் டாக்டர்கள்
UPDATED : ஆக 16, 2025 02:00 AM
ADDED : ஆக 15, 2025 11:57 PM

புதுடில்லி: நாடு முழுதும் கடந்த இரு ஆண்டுகளில், 'எய்ம்ஸ்' மருத்துவமனையில் இருந்து, 429 டாக்டர்கள் ராஜினாமா செய்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர், தனியார் மருத்துவமனையில் வேலைக்கு சேர்ந்து உள்ளனர்.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில், நாடு முழுதும் 20க்கும் மேற்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன.
ராஜினாமா தமிழகத்தின் மதுரையிலும், எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகள் முழு வீச்சில் நடக்கின்றன.
தனியார் மருத்துவமனைகளை போல, குறைந்த செலவில் அதிநவீன வசதிகளுடன் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப் படுகிறது.
இந்நிலையில், 2022 - 24 வரையிலான காலத்தில், நாடு முழுதும் எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து, 429 டாக்டர்கள் ராஜினாமா செய்ததாக, பார்லி.,யில் மத்திய அரசு சமீபத்தில் தெரிவித்தது.
அதிகபட்சமாக, டில்லி எய்ம்சில் 52; ரிஷிகேஷ் எய்ம்சில் 38; ராய்ப்பூர் எய்ம்சில் 35; பிலாஸ்பூர் எய்ம்சில் 32; மங்களகிரி எய்ம்சில் 30; போபால் எய்ம்ஸ் மருத்துவமனையில், 27 டாக்டர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானோர், தனியார் மருத்துவமனைகளில் வேலைக்கு சேர்ந்துள்ளனர். ராஜினாமா செய்தவர்களில், எய்ம்ஸ் மருத்துவமனையில் உயர் பதவிகளை வகித்தவர்களும் அடங்குவர்.
டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற டாக்டர் ரந்தீப் குலேரியா, தற்போது ஹரியானாவின் குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்.
இதயவியல் துறை முன்னாள் தலைவர் டாக்டர் ஷிவ் சவுத்ரி ராஜினாமா செய்து, போர்டிஸ் எஸ்கார்ட் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்.
நரம்பியல் அறுவை சிகிச்சை துறையின் முன்னாள் தலைவர் டாக்டர் ஷஷாங்க் ஷரத் காலே, அப்பல்லோ மருத்துவமனையில் பணிபுரிகிறார்.
இது போல உயர் பதவி வகித்த டாக்டர்கள் பலர், ராஜினாமா செய்து தனியார் மருத்துவ மனைகளில் பணியாற்றி வருகின்றனர்.
எய்ம்ஸ் மருத்துவ மனையில் பணியாற்றும் ஒரு மூத்த டாக்டருக்கு, மாத ஊதியம், 2.5 லட்சம் ரூபாய். இதை விட 4 - 10 மடங்கு வரை தனியார் மருத்துவமனைகளில் அதிகம் வழங்கப்படுகிறது.
என்ன காரணம்? கடந்த ஆண்டு ராஜினாமா செய்து, தனியார் மருத்துவமனையில் சேர்ந்த டாக்டர் ஒருவர் கூறியதாவது:
ராஜினாமாவுக்கு ஊதியம் காரணமல்ல. பணம் தான் முக்கியம் என்றிருந்தால், தனியார் மருத்துவமனையில் எப்போதோ சேர்ந்திருப்பேன். டில்லி எய்ம்ஸ் இயக்குநர், திறமையற்ற பணிச் சூழலை உருவாக்கி உள்ளார். அவருக்கு தலைமைப் பண்பு இல்லை.
என் துறைக்கான முடிவுகளைக் கூட எடுக்க முடியாத அளவுக்கு நெருக்கடி தரப்பட்டது. அன்றாட செயல்பாடு மிகவும் கடினமாக இருந்தது. இதனால், பலரைப் போலவே நானும் ராஜினாமா முடிவை எடுத்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அனுபவம் இல்லாதவர்களுக்கு முன்னுரிமை, பணிச்சுமை, பதவி உயர்வில் தாமதம் போன்றவற்றால் ராஜினாமா செய்ததாக சில டாக்டர்கள் குறிப்பிடுகின்றனர்.
எனவே, டில்லி எய்ம்ஸ் உட்பட நாடு முழுதும் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகளில் காலி இடங்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.