தி.மு.க., கூட்டணிக்கு குடைச்சல் கொடுக்கிறதா காங்., - வி.சி., கட்சிகள்?
தி.மு.க., கூட்டணிக்கு குடைச்சல் கொடுக்கிறதா காங்., - வி.சி., கட்சிகள்?
ADDED : அக் 26, 2024 04:54 AM

'காமராஜர் ஆட்சி அமைப்பது தான் எங்கள் நோக்கம்' என, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையும், 'நடிகர் விஜய் சரியான திசையில் பயணிக்கிறார்' என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் கூறியுள்ளதால், தி.மு.க., கூட்டணியில் மீண்டும் புகைச்சல் கிளம்பி உள்ளது.
சமீபத்தில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, சேலத்தில் நிருபர்களிடம் கூறுகையில், 'தி.மு.க., கூட்டணியில் உள்ள கட்சிகள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்த துவங்கி உள்ளன.
விரிசல் கிடையாது
கடந்த 41 மாதங்களாக மவுனமாக இருந்த கூட்டணி கட்சித் தலைவர்கள், தற்போது தி.மு.க., ஆட்சியை விமர்சனம் செய்கின்றனர் என்றால், அது விரிசல் ஏற்பட்டிருப்பதாக தானே அர்த்தம்' என்றார்.
சென்னையில் நடந்த திருமண விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், 'தி.மு.க., கூட்டணியில் விவாதங்கள் இருக்குமே தவிர விரிசல் கிடையாது' என, பழனிசாமி புகாரை மறுத்தார்.
இந்த சூழலில், செல்வப்பெருந்தகையும், திருமாவளவனும் இப்படி பேசியிருப்பது, ஆளும் கூட்டணியில் பல சந்தேகங்களை கிளப்பி உள்ளது.
இது தொடர்பாக, ஆளும் கூட்டணி வட்டாரத்தில் கூறப்படுவதாவது:
தி.மு.க., கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக, பழனிசாமி கூறியது போலவே, அடுத்தடுத்து நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன.
முரசொலி செல்வம் படத்திறப்பு விழாவின்போது, முதல்வர் ஸ்டாலின், தி.க., தலைவர் வீரமணி, திருமாவளவன், நடிகர் சத்யராஜ் ஆகியோர் தனி அறையில் அமர்ந்து பேசினர்.
அப்போது, தி.மு.க., கூட்டணியில் திருமாவளவன் நீடிக்க வேண்டும் என்றும், மாயவலையில் சிக்கி விடக் கூடாது என்றும், அவரிடம் வீரமணி, சத்யராஜ் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர். அவர்களிடம் திருமாவளவன், 'நாங்கள் தி.மு.க., கூட்டணியில் தான் இருப்போம்' என்றார்.
நெருக்கடி
இதற்கிடையில், புதுச்சேரியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், 'விஜய் சரியான திசையில் பயணிக்க துவங்கியுள்ளார். சமூக நீதி பார்வைக் கொண்டவராக அரசியல் களத்தில் அடியெடுத்து வைக்கிறார்.
விளிம்பு நிலை மக்களுக்காக, ஒரு இயக்கத்தை துவங்கியிருக்கிறார் என நம்ப முடிகிறது. அவருக்கு என்னுடைய வாழ்த்துகள்' என கூறியுள்ளார்.
விஜய் கட்சியை தி.மு.க., தலைமை விரும்பவில்லை. அதனால் தான், விஜய் கட்சித் துவங்குவதாக அறிவித்தப் பின், அது குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் அமைதி காக்கிறது தி.மு.க., அப்படியிருக்கும்போது, தி.மு.க., கூட்டணியில் நீடிக்கிற திருமாவளவன் எப்படி விஜய்க்கு வாழ்த்து சொல்லலாம் என்ற கேள்வி எழுகிறது.
அதேபோல், திருப்பத்துாரில் நடந்த மருது சகோதரர்கள் நினைவு தினத்தில் பங்கேற்ற செல்வப்பெருந்தகை, 'நாங்கள் சத்திரம், சாவடி நடத்த கட்சி நடத்தவில்லை. நாங்களும் ஆட்சிக்கு வர முயற்சி எடுத்து வருகிறோம். தமிழகத்தில் காமராஜர் ஆட்சி அமைப்பதுதான் எங்களுடைய நோக்கம்' என்றார்.
இப்படி இரு தலைவர்களும் நெருக்கடி அளிக்கும் வகையில் பேசியிருப்பதை, ஆளும் தலைமை ரசிக்கவில்லை.
இவ்வாறு அந்த வட்டாரத்தில் கூறப்படுகிறது.
- நமது நிருபர் -