ADDED : ஜூன் 08, 2025 12:18 AM

புதுடில்லி: சமீபத்தில், அனைத்து அமைச்சர்களையும் ஆலோசனை கூட்டத்திற்கு அழைத்தார் பிரதமர் மோடி. 30 கேபினட் அமைச்சர்கள், தனி பொறுப்பில் உள்ள ஐந்து இணை அமைச்சர்கள் மற்றும் 36 இணை அமைச்சர்கள் என, 71 பேரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
கேபினட் செயலர் சோமநாதன் கூட்டத்தை துவக்கி வைக்க, மோடி பேச துவங்கினார். சக அமைச்சர்களுக்கு அறிவுரை, எச்சரிக்கை என, கிட்டத்தட்ட 3 மணி நேரம் பேசினாராம் பிரதமர்.
'கடந்த 11 ஆண்டுகளாக எந்தவித ஊழல் குற்றச்சாட்டும் இல்லாமல் ஆட்சி நடத்துகிறோம்; இனிமேலும் ஊழல் குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 'ஏஐ' எனப்படும் செயற்கை நுண்ணறிவு வாயிலாக நமக்கு எதிராக பல விஷயங்கள் நடக்கும்; எனவே அனைத்திலும் கவனமாக இருங்கள்.
'டிவி'க்களில் அதிகம் பேச வேண்டாம். அப்படி பேசும் சமயங்களில் உளறாதீர்கள். பலரும் தங்கள் இஷ்டப்படி, கட்சியின் நலன் கருதாமல் கண்டதையும் பேசி வருவதுடன், 'எக்ஸ்' தளத்திலும் பதிவிடுகிறீர்கள். இதையெல்லாம் செய்யக் கூடாது' என, ஒரு தலைமை ஆசிரியர் வகுப்பு நடத்துவதை போல், அமைச்சர்கள் கூட்டத்தை நடத்தினாராம் மோடி.
இறுதியாக, 'ஆப்பரேஷன் சிந்துாரில் நாம் பெற்ற வெற்றியை, நாட்டின் மூலை முடுக்குகளுக்கு நீங்கள் கொண்டு செல்ல வேண்டும்' என, உத்தரவிட்டுள்ளாராம். கூட்டம் முடிந்ததும் அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டதுடன், அமைச்சர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டாராம் பிரதமர் மோடி.