sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

காற்றை தடுக்காதீர்கள்; தடுத்தால் புயலாக மாறும்: த.வெ.க., தலைவர் விஜய் ஆவேசம்

/

காற்றை தடுக்காதீர்கள்; தடுத்தால் புயலாக மாறும்: த.வெ.க., தலைவர் விஜய் ஆவேசம்

காற்றை தடுக்காதீர்கள்; தடுத்தால் புயலாக மாறும்: த.வெ.க., தலைவர் விஜய் ஆவேசம்

காற்றை தடுக்காதீர்கள்; தடுத்தால் புயலாக மாறும்: த.வெ.க., தலைவர் விஜய் ஆவேசம்

33


UPDATED : மார் 29, 2025 07:12 AM

ADDED : மார் 29, 2025 05:04 AM

Google News

UPDATED : மார் 29, 2025 07:12 AM ADDED : மார் 29, 2025 05:04 AM

33


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ''இதுவரை சந்திக்காத வித்தியாசமான ஒரு தேர்தலை, தமிழகம் அடுத்தாண்டு சந்திக்கும். த.வெ.க., மற்றும் தி.மு.க., ஆகிய இரண்டு கட்சிகளுக்கு இடையே மட்டுமே போட்டி இருக்கும்,'' என, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பேசினார்.

சென்னை திருவான்மியூரில், அக்கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. அதில், விஜய் பேசியதாவது:

ஒவ்வொரு குடும்பமும் நன்றாக வாழ வேண்டும் என்பது அரசியல். ஆனால், ஒரே ஒரு குடும்பம் மட்டும், தமிழகத்தை சுரண்டி நன்றாக வாழ்வது, அரசியல் கிடையாது.

எல்லாருக்கும் நல்லது நடக்க வேண்டும் என்பது, த.வெ.க., அரசியல். காட்சிக்கு திராவிடம்; ஆட்சிக்கு திராவிட மாடல் என்று கூறி, மக்கள் பிரச்னைகளை மடைமாற்றி, மக்கள் ஆட்சியை மன்னர் ஆட்சி போல நடத்துகின்றனர். த.வெ.க., மாநாட்டில் ஆரம்பித்து, பொதுக்குழு வரைக்கும் தடை போடுகின்றனர்.

மன உளைச்சல்


இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை நடத்த, சென்னை நகருக்குள் கல்யாண மண்டம் தரவில்லை. அத்தனை தடைகளையும் தாண்டி, கட்சியினர் சந்திப்பு நிகழ்ச்சிகள், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடக்கும்.

மாண்புமிகு மன்னர் ஆட்சி முதல்வர் அவர்களே... முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே...

நீங்கள் பெயரை மட்டும் வீராப்பாக சொன்னால் பத்தாது. செயலிலும், ஆட்சியிலும் அதை காட்ட வேண்டும். மத்திய அரசின் பாசிச ஆட்சி என, அடிக்கடி அறிக்கை வெளியிடும் நீங்களும், அதற்கு கொஞ்சம் கூட குறைவில்லாத பாசிச ஆட்சியை நடத்துகிறீர்கள்.

கட்சி தலைவர் என்ற முறையில், ஜனநாயக முறைப்படி, தொண்டர்களையும், தமிழக மக்களையும் சந்திக்க, எனக்கு தடை போடுவதற்கு நீங்கள் யார்? தடையை மீறி மக்களை பார்க்க வேண்டும் என்றால் போய் தீருவேன். சட்டத்தை மதிக்க வேண்டும் என்பதற்காக, அமைதியாக இருக்கிறேன்.

நேற்று வந்தவன் முதல்வர் ஆக வேண்டும் என, பகல் கனவு காண்பதாக சொல்கிறீர்கள். அது நடக்கவே நடக்காது என்கிறீர்கள். அப்புறம் ஏன், எந்த கட்சிக்கும் இல்லாத நெருக்கடியை எங்களுக்கு தருகிறீர்கள்? அணை போட்டு ஆற்றை தடுக்கலாம்; காற்றை தடுக்க முடியாது. அதையும் மீறி தடுக்க நினைத்தால், சாதாரணமாக இருக்கும் காற்று சூறாவளியாக மாறும்; சக்திமிக்க புயலாக மாறும்.

தமிழகத்தில் பல பகுதிகளில் இருந்து வரும் செய்திகளை கேட்கும்போது, மன உளைச்சல் ஏற்படுகிறது. சட்டம் - ஒழுங்கு என்று ஒன்று இருப்பதாக தெரியவில்லை. இதற்கு ஊழல் ஆட்சிதான் காரணம். இந்த நிலைமை மாற வேண்டும்.

உண்மையான மக்கள் ஆட்சி வர வேண்டும் என்றால், இவர்களை மாற்ற வேண்டும். அதற்கு கட்சியினர், தினமும் ஒவ்வொரு தெருவிற்கும், வீட்டிற்கும் சென்று, மக்களை பார்க்க வேண்டும்; அவர்களின் பிரச்னைகளை தீர்ப்பதற்கு யோசிக்க வேண்டும்.

'சீக்ரெட் ஓனர்'


அப்படி ஒரு ஆழமான நம்பிக்கையை விதைத்து விட்டு, அதன்பின் தலை நிமிர்ந்து பாருங்கள். ஒவ்வொரு வீட்டு உச்சியிலும், இரட்டை போர் யானை, வாகை மலர் கொடி தானாக பறக்கும். மன்னர் ஆட்சி முதல்வருக்கு அவரது ஆட்சியை பற்றி கேட்டால், கோபம் வருகிறது.

நீங்கள் ஒழுங்காக ஆட்சி நடத்தியிருந்தால், பெண்கள் பாதுகாப்பு ஒழுங்காக இருந்திருக்கும். சட்டம் - ஒழுங்கு சரியாக இருந்திருக்கும்.

பச்சைப் பிள்ளைகள், படிக்கும் பெண்கள், வீட்டில் இருக்கும் பெண்கள், வேலைக்கு போகும் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளை சொல்ல முடியவில்லை.

இதில், உங்களை அப்பா என்று கூப்பிட வேண்டும் என சொல்கிறீர்கள். நாள்தோறும் உங்கள் கொடுமைகளை அனுபவிக்கும் தமிழக பெண்கள்தான், உங்கள் ஆட்சிக்கு முடிவு கட்டப் போகின்றனர்.

உங்கள் அரசியல் வாழ்க்கைக்கு முடிவு கட்டப் போகின்றனர். நீங்கள்தான் இப்படி என்றால், அங்கே உங்கள் 'சீக்ரெட் ஓனர்' அதுக்கும் மேலாக உள்ளார்.

ஓட்டுக்காக காங்கிரஸ் கட்சியுடன் தேர்தல் கூட்டணி, கொள்ளை அடிப்பதற்கு பா.ஜ.,வுடன் மறைமுக அரசியல் கூட்டணி. மோடி பெயரை சொல்லி, மக்களை ஏமாற்றுகின்றனர்.

இப்படி, கரப்ஷன், கபடதாரிகளுக்கு மறைமுகமாக உதவும் மோடிஜிக்கு, தமிழகம், தமிழர்கள் என்றால் 'அலர்ஜி!'

தமிழகத்தில் இருந்து வரும் ஜி.எஸ்.டி., வரியை வாங்கிக் கொள்கின்றனர்.

தமிழகத்திற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க மறுக்கின்றனர். இங்கு படிக்கும் குழந்தைகளுக்கு நிதி ஒதுக்கவில்லை. ஹிந்தி மொழியை திணிக்கின்றனர். தொகுதி மறுவரையறை என்ற பெயரில், லோக்சபா தொகுதி எண்ணிக்கையில் கைவைக்க பார்க்கின்றனர்.

மோடி சார்... கவனம்!


'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என அறிவித்தபோதே உங்கள் திட்டம் புரிந்து விட்டது, பிரதமர் சார். உங்களிடம் நாங்கள் சொல்வது ஒன்றே ஒன்றுதான். தமிழகத்தை கொஞ்சம் கவனமாக கையாளுங்கள். ஏனென்றால், தமிழகம் பல பேருக்கு தண்ணி காட்டிய மாநிலம். இதை மறந்து விடாதீர்கள்.

பொதுக்குழு வழியாக, ஒரு உத்தரவாதத்தை மக்களுக்கு கொடுக்க போகிறோம். த.வெ.க., தலைமையிலான பெரும்பான்மை பெற்ற ஆட்சி, அதே சமயத்தில் அதிகார பகிர்வுடன் கூடிய ஆட்சி அமைந்ததும், பெண்கள் பாதுகாப்பை, 100 சதவீதம் உறுதி செய்வோம். சட்டம் - ஒழுங்கை முறையாக வைத்திருப்போம்.

ஆழமான நம்பிக்கையுடன், 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மாபெரும் அரசியல் மாற்றத்தை கொண்டு வந்து, மக்கள் சக்தியுடன் மக்கள் விரும்பும் நல்லரசை அமைப்பதில், உறுதியாக இருக்கிறோம். அதை தடுப்பதற்கு சில பேர் பகல் கனவு காண்கின்றனர்.

அவர்கள் எல்லாருக்கும் சொல்வது, காற்று, மழை, வெயில், இயற்கையை யாராலும் தடுக்க முடியாது. இது கடவுளால் உருவாக்கப்பட்டவை. அதேபோல, மக்களுக்கான எங்களது அரசியலையும் யாராலும் தடுக்க முடியாது. அரசியல் சூறாவளியையும், தேர்தல் சுனாமியையும் தடுப்பார் எவர்?

அதுபோல, எங்கள் வெற்றியை தடுக்க முடியாது. தடுக்க நினைப்பவர்கள் கனவு, ஒருநாளும் மெய்ப்படாது. இதுவரை சந்திக்காத வித்தியாசமான ஒரு தேர்தலை, தமிழகம் அடுத்தாண்டு சந்திக்கும். த.வெ.க., மற்றும் தி.மு.க., ஆகிய இரண்டு கட்சிகளுக்கு நடுவில் மட்டுமே போட்டி இருக்கும்.

இவ்வாறு விஜய் பேசினார்.






      Dinamalar
      Follow us