வீட்டுக்கு வீடு பரிசு: வாக்காளர்களை வளைக்கும் அமைச்சர்
வீட்டுக்கு வீடு பரிசு: வாக்காளர்களை வளைக்கும் அமைச்சர்
ADDED : நவ 23, 2025 12:53 AM

தஞ்சாவூர்: வாக்காளர்களை கவர அமைச்சர் கோவிசெழியன் சார்பில், தஞ்சை மாவட்டம், திருவிடைமருதுார் சட்டசபைத் தொகுதி முழுதும் பரிசு பொருட்கள் வினியாகம் செய்யப்பட்டு வருகிறது.
திருவிடைமருதுார் சட்டசபை தொகுதியில், 2.50 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இந்த தொகுதியில் தான், கடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.,வாகி உயர் கல்வித் துறை அமைச்சராகவும் உள்ளார் கோவி செழியன்.
வரும் 2026 சட்டசபைத் தேர்தலிலும், இதே தொகுதியில் போட்டியிட விரும்புகிறார் செழியன். இதையடுத்து, தொகுதியில் ஒட்டுமொத்த வாக்காளர்களையும் கவர்ந்து வெற்றி பெறும் வகையில் கனகச்சித மாக வேலை செய்து வருகிறார்.
இதற்காக, தொகுதி முழுதும், டிராக்டர்களில், சில்வர் டிரம் மற்றும் புடவையை எடுத்துச் சென்று வாக்காளர்களுக்கு தி.மு.க., பிரமுகர்கள் வாயிலாக, வீட்டுக்கு வீடு வழங்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக, திருவிடைமருதுார் தொகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
திருவிடைமருதுார் தொகுதி முழுதும், வாக்காளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் செழியன் படம் அச்சடிக்கப்பட்ட ஸ்டிக்கர்கள் ஒட்டி, சில்வர் பாத்திரம் மற்றும் புடவை, கடந்த இரு மாதங்களாக வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக, பல கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணம் எங்கிருந்து வந்தது என்பதை, வருமான வரித் துறையினர் சோதனை நடத்த வேண்டும். முறைகேடு கண்டறியப்பட்டால், நடவடிகை எடுக்க வேண்டும்.
தேர்தலில் செழியன் போட்டியிடும்போது, இது தொடர்பாக தேர்தல் கமிஷனும் கேள்வி எழுப்ப வேண்டும். இந்த பரிசுப் பொருட்கள், தொகுதியில் இருக்கும் 90 சதவீத வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு விட்டது.
இதில் என்ன வேடிக்கை என்றால், இந்தப் பரிசுப் பொருட்களை அ.தி.மு.க., உள்ளிட்ட எதிர்கட்சியினரும் வாங்கியுள்ளனர். பெறாதவர்கள், தி.மு.க.,வினரை அணுகி, பரிசுப் பொருட்களை கேட்டு வருகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

