பள்ளி மேலாண்மை குழு ஆசிரியர்களின் தீபாவளி கனவை தகர்த்த கல்வித்துறை
பள்ளி மேலாண்மை குழு ஆசிரியர்களின் தீபாவளி கனவை தகர்த்த கல்வித்துறை
ADDED : அக் 17, 2025 01:13 AM

: பள்ளி மேலாண்மை குழுவால் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்காமல், அவர்களின் தீபாவளி கனவை தகர்த்துள்ளது, ப ள்ளி கல்வித்துறை.
தமிழக பள்ளி கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, 'டெட்' எனும் தகுதி தேர்வு பிரச்னையால் கடந்த மூன்றாண்டுகளாக பதவி உயர்வு வழங்கப்படவில்லை. இதனால், 10,000க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இந்நிலையில், காலிப் பணியிடங்களுக்கு தற்காலிக அடிப்படையில், பள்ளி மேலாண்மை குழு வாயிலாக, ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அதில், முதுகலை ஆசிரியர்களுக்கு 18,000 ரூபாய்; பட்டதாரி ஆசிரியர்களுக்கு 15,000 ரூபாய்; இடைநிலை ஆசிரியர்களுக்கு 12,000 ரூபாய் மாத ஊதியமாக வழங்கப்படுகிறது.
ஆனால், நிரந்தர ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவதுபோல், ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் இவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுவதில்லை. அதாவது, கடந்த ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், ஒரு மாத சம்பளம் மட்டுமே, இதுவரை வழங்கப்பட்டுள்ளது.
பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, ஆசிரியர் படிப்புகளை முடித்து, தற்காலிக பணியாளராக சேர்ந்துள்ள இவர்களுக்கான சம்பளமே மிகவும் குறைவு என்ற நிலையில், கடந்த மூன்று மாதங்களாக, அதையும் வழங்காமல் உள்ளனர்.
தீபாவளிக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ளன. இன்று மட்டுமே வங்கிகள் செயல்படும். இந்நிலையில், மூன்று மாதங்களாக சம்பளத்துக்காக காத்திருக்கும் தற்காலிக ஆசிரியர்களின் குடும்பங்களில், தீபாவளி மத்தாப்பு சிரிக்குமா அல்லது புஸ்வாணமாகுமா என்பது, இன்று மாலைக்குள் ஊதியம் கிடைப்பதில் தான் உள்ளது.
- நமது நிருபர் -