ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளாகியும் நெசவாளர்களுக்கான திட்டங்களை மேற்கொள்வதில் அரசு அலட்சியம்
ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளாகியும் நெசவாளர்களுக்கான திட்டங்களை மேற்கொள்வதில் அரசு அலட்சியம்
ADDED : ஏப் 08, 2025 05:50 AM

காஞ்சிபுரம் :தி.மு.க., அரசு ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளான நிலையில், காஞ்சிபுரத்தில் கைத்தறி நெசவாளர்களுக்கான திட்டங்கள் செயல்படுத்துவதிலும், அறிவிப்புகளை நிறைவேற்றுவதிலும், இன்று வரை சுணக்கம் ஏற்பட்டிருப்பதாக நெசவாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். கூலி உள்ளிட்ட வாழ்வாதார பிரச்னைக்கு தீர்வு கிடைக்காததால், நெசவாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், பட்டு நெசவுக்கு பெயர் பெற்றது. வீடுகளில், பட்டு மற்றும் பருத்தி துணிகளுக்கான கைத்தறி பணிகளை, ஆயிரக்கணக்கானோர் செய்கின்றனர்.
கைத்தறி கூட்டுறவு சங்கங்களிலும், தனியாரிடமும் 10,000க்கும் மேற்பட்ட நெசவாளர்கள், பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் நெய்யும் பட்டு சேலை, தனியார் மற்றும் கைத்தறி கூட்டுறவு சங்கங்களில் ஆண்டுதோறும் 300 கோடி ரூபாய்க்கு மேலாக விற்பனை செய்யப்படுகிறது.
ஆயிரக்கணக்கான நெசவாளர்கள், பல தலைமுறையாக கைத்தறி தொழிலில் ஈடுபட்டு வரும் நிலையில், அதை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை என, நெசவாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
தி.மு.க., ஆட்சிக்கு வரும் முன், நெசவாளர்களுக்காக ஏராளமான வாக்குறுதிகளை அளித்தது. ஆட்சியை பிடித்து நான்கு ஆண்டுகளான நிலையில், பல திட்டங்கள் நடைமுறை வரவில்லை எனவும், பல திட்டங்கள் பயனாளிகளை சென்றடையவில்லை என, நெசவாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு நடுவே, அவர்களுக்கு ரொக்கமாக வழங்கப்பட்டு வந்த கூலி தொகையையும், வங்கியில் வரவு வைப்பதாக, கைத்தறி துறை தெரிவித்துள்ளது இது, அவர்களிடம் மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
திட்டங்கள் செயல்பாட்டுக்கு வருவதில் உள்ள பிரச்னை மற்றும் குளறுபடிகள் குறித்து நெசவாளர்கள் கூறியதாவது:
விலைவாசி உயர்வுக்கு ஏற்ப நெசவாளர்களின் கூலி உயர்வு இல்லை. பட்டு சேலை விற்பனை குறைவாக நடக்கும்போதெல்லாம், பணி முடக்கம் ஏற்படுகிறது.
தனியார் நெசவாளர்களுக்கு வழங்கப்படும் கூலி விவகாரத்தில், வரையறை என்பதே இல்லை. தனியார் உற்பத்தியாளர்கள் நிரந்தரமாக ஒரே ஊதியம் வழங்காமல், சொற்ப தொகையையே வழங்குகின்றனர்.
மழைக்காலத்தில் நெசவாளர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என, தி.மு.க., தேர்தல் வாக்குறுதியாக அளித்தது. இன்று வரை, எந்த உதவித்தொகையும் அளிக்கவில்லை.
நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம் பெறும் திட்டத்தில் விண்ணப்பம் அளித்தால், விசாரணை செய்து உத்தரவு வழங்க ஆறு மாதம் இழுத்தடிக்கப்படுகிறது. அதிகாரிகள் அலைக்கழிப்புக்கு ஆளாக்குகின்றனர்.
பட்டு சேலைக்கு அரசு வழங்கும் கழிவுத்தொகை, 200 ரூபாயாகவே பல ஆண்டுகளாக தொடர்கிறது. இந்த தொகையை உயர்த்தி வழங்க பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
ஜவுளி ஏற்றுமதி மையம் காஞ்சிபுரத்தில் அமைக்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்து இரு ஆண்டுகளான நிலையில், இதுவரை ஏற்றுமதி மையம் அமைக்கப்படவில்லை.
நெசவாளர்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தில், தனியார் நெசவாளர்கள் பயன்பெற முடியவில்லை. அவர்களுக்கு உரிய இடம் கிடைக்க வேண்டும்.
கைத்தறி சங்கங்களில் வழங்கப்படும் கூலி, ரொக்கமாக தான் வழங்க வேண்டும். வங்கியில் வரவு வைப்பதை நெசவாளர்கள் யாரும் விரும்பவில்லை. மேலும், அலைச்சலாக உள்ளது.
நெசவாளர் சேவை மையத்தில் வாயிலாக, காஞ்சிபுரம் நெசவாளர்கள் பயன்பெறுவது குறைவு. நிதி இல்லை என்ற பதிலே கிடைக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கைத்தறி துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'மழைக்கால உதவித்தொகை வழங்குவது, ஜவுளி ஏற்றுமதி மையம் அமைப்பது உள்ளிட்ட திட்டங்கள் அரசின் முடிவு சம்பந்தப்பட்டது. வெளியிடப்படும் திட்டங்களை தான், நாங்கள் அமல்படுத்தி வருகிறோம்' என்கின்றனர்.
தனியார் நெசவாளர்களுக்கு கூலியை வரையறை செய்ய, பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. அதேபோல், மாநில அரசின் சார்பில், மருத்துவ காப்பீடு அட்டை தருவதாக தெரிவித்தனர்; இதுவரை வழங்கவில்லை. நெசவாளர் சேவை மையத்திலும், நெசவாளர்களால் சரியாக பயன்பெற முடியவில்லை. வெளியூர் நெசவாளர்கள் அதிகளவில் பயன்பெறுகின்றனர். வீடு கட்ட 4 லட்சம் ரூபாய் மானியம் பெறும் திட்டத்திலும், தனியார் நெவாளர்கள் புறக்கணக்கப்படுகின்றனர்.
ஏ.பலராமன்,
தலைவர்,
வீரசிவாஜி பட்டு கைத்தறி நெசவாளர் சங்கம், காஞ்சிபுரம்
நெசவாளர்களுக்கான கூலியை, ரொக்கமாக வழங்குவதை கேட்டு வருகிறோம். அதேபோல், பட்டு நெசவாளர்களுக்கான பணி முடக்கம் என்பது அடிக்கடி ஏற்படுகிறது. இதுமட்டுமல்லாமல், பட்டு சேலைக்கான கழிவு என்பது 200 ரூபாயிலிருந்து உயர்த்த பல ஆண்டுகளாக கேட்டும் நடவடிக்கை இல்லை. எங்களின் பல கோரிக்கைளை அரசு நிறைவேற்றும் என எதிர்பார்த்துள்ளோம்.
எஸ்.வி.சங்கர்,
தலைவர்,
ஏ.ஐ.டி.யூ.சி., காஞ்சிபுரம்.