சேலத்தில் ரூ.60 கோடி சொத்து அபகரிப்பு! வருவாய், பதிவுத்துறை அதிகாரிகள் உடந்தை
சேலத்தில் ரூ.60 கோடி சொத்து அபகரிப்பு! வருவாய், பதிவுத்துறை அதிகாரிகள் உடந்தை
ADDED : அக் 21, 2024 04:33 AM

சேலத்தைச் சேர்ந்த, அமெரிக்கவாழ் இந்தியரின், 60 கோடி ரூபாய் மதிப்பிலான காபி எஸ்டேட் உள்ளிட்ட சொத்துக்களை, போலி ஆவணங்கள் வாயிலாக அபகரித்த மோசடி கும்பலுக்கு வருவாய்த்துறை மற்றும் பதிவுத்துறை அதிகாரிகள் துணைபோயிருக்கும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. திட்டமிட்ட இக்குற்றத்தின் தன்மை கருதி, இவ்வழக்கின் விசாரணையை சேலம் மாநகர போலீசாரிடம் இருந்து சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்ற வேண்டும் என, பல தரப்பினரும் வலியுறுத்துகின்றனர்.
சேலம் மாவட்டம், ஓமலுாரைச் சேர்ந்தவர் நாகராஜ் சர்மா, 70. அமெரிக்க குடியுரிமை பெற்று அங்கேயே 'செட்டில்' ஆனவர். இவரது தந்தை ஐ.ஆர்.எஸ்., அதிகாரியாகவும், மாமனார் ஐ.ஏ.எஸ்., அதிகாரியாகவும் பணியாற்றி மறைந்தவர்கள். கடந்தாண்டில், அமெரிக்காவிலிருந்து சேலம் வந்த நாகராஜ்சர்மாவுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
அவருக்குரிய பூர்வீக சொத்துக்களில், ஏறத்தாழ, 60 கோடி ரூபாய் மதிப்புடைய ஏற்காட்டிலுள்ள மிளகு, காபி எஸ்டேட், வீடு உள்ளிட்ட சில சொத்துகள், போலி ஆவணங்களின் வாயிலாக அபகரிக்கப்பட்டிருந்தன. திடுக்கிட்ட இவர், போலி ஆவண மோசடி நடந்திருப்பது சேலம் மாநகர எல்லைக்குள் உள்ள பதிவுத்துறை அலுவலகத்தில் என்பதால், மாநகர போலீசில் புகார் அளித்தார்; ஆனால், வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.
அதேவேளையில், இவ்விவகாரத்தை கிளற வேண்டாமென நாகராஜ் சர்மாவிற்கு பல்வேறு இடங்களில் இருந்தும் தொலைபேசியில் கொலை மிரட்டல் வரத்துவங்கின. மிரட்டிய நபர்கள் சேலம் அரசியல் பிரமுகர், பிரபல ஜவுளிக்கடை உரிமையாளர் உள்ளிட்ட பலரின் பின்புலத்தைக்கூறி புகாரை வாபஸ் பெற நெருக்கடி கொடுத்தனர்; நாகராஜ் சர்மா பணியவில்லை. மாறாக, மாநில டி.ஜி.பி.,யிடம் புகார் அளித்தார்.
இவ்விவகாரம் 'சீரியஸ்' ஆக எடுத்துக்கொள்ளப்பட்டு சேலம் மாநகர போலீசார், நாகராஜ் சர்மாவின் உறவினர் சுதர்சன் உள்ளிட்ட நபர்கள் மீது கூட்டுச்சதி, போலி ஆவணம் தயாரித்தல், மோசடி செய்தல் உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ், செப்., 12ல் எப்.ஐ.ஆர்., பதிவு செய்தனர். இந்த துணிகர மோசடியில் தோண்டத்தோண்ட பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிகாரிகளே துணை
நாகராஜ் சர்மாவுக்கு சேலம், ஒமலுார், மேட்டூர் அணை பகுதிகளில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பரம்பரைச் சொத்துக்கள் உள்ளன. இவரது தந்தை ஐ.ஆர்.எஸ்., அதிகாரி சுப்பராவின், இளைய சகோதரர் ஹனுமந்தராவ், 2007ல் மறைந்தார்.
அதற்கு முன், 2005ல் அவர், தனக்கு வாரிசுகள் இல்லாததால் ஏற்காடு, ஒமலுார் மற்றும் மேட்டூர் அணை பகுதியிலுள்ள தனது சொத்துக்களை, தன்னுடன் பிறந்த சகோதரர்களான சேஷகிரிராவ், சுப்பாராவ் ஆகியோருக்கு பிரித்து வழங்குவதாகவும்; உடன் பிறந்த சகோதரி சாரதாவிற்கு 50 ஆயிரம் வழங்குவதாகவும், கையெழுத்து பிரதியாக உயில் எழுதி, சேலம் மேற்கு சார் பதிவாளர் அலுவலகத்தில் ரகசிய ஆவணமாக வைத்திருந்தார். அவரது மறைவுக்குப்பிறகு அந்த உயில், 2008ல் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், 1972ம் ஆண்டிலேயே ஹனுமந்தராவ் எழுதி வைத்ததாக கூறி போலி உயில் ஒன்று தயாரிக்கப்பட்டு அது, சேலம் சார் பதிவாளர் அலுவலக ஆவணங்களுக்கிடையே மோசடியாக செருகி இணைக்கப்பட்டது.
இவ்வாறு இணைக்கப்பட்டது கூடுதலாக வெளியில் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக, ஏற்கனவே அங்கிருந்த ஒரு ஆவணம் கிழித்தெறியப்பட்டது. இவை அனைத்தும் பதிவுத்துறை அதிகாரிகளின் துணையுடன்தான் நடந்திருக்கிறது. இதை செய்தவர், ஹனுமந்தராவின் சகோதரி மகன் சுதர்சன், 70, என்பது குற்றச்சாட்டு.
இந்த போலி உயிலை அடிப்படையாகக் கொண்டுதான், 60 கோடி ரூபாய் மதிப்பிலான ஏற்காட்டிலுள்ள மிளகு, காபி உள்ளிட்ட எஸ்டேட் நிலங்கள் மற்றும் கட்டடங்களுக்கு பட்டா பெயர் மாற்றம் செய்து கொடுத்து மோசடிக்கு உறுதுணையாக இருந்துள்ளனர் வருவாய்த்துறையினர்.
நில அபகரிப்புக்கான முயற்சிகள் திட்டமிட்டு நடத்தப்பட்டு, இறுதிக்கட்டமாக அடுத்தடுத்து மூவருக்கு விற்பனையும் செய்யப்பட்டு பத்திரப்பதிவும் செய்யப்பட்டிருக்கிறது என்பது தான், ஹைலைட்டான விஷயம்.
விசாரணையில் 'பகீர்'
மோசடி குறித்து ஒருபுறம் போலீஸ் விசாரிக்க, மறுபுறம் பதிவுத்துறையும் களமிறங்கியது. சேலம் மேற்கு மாவட்ட பதிவாளராக, கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்த கனகராஜ் விசாரணை மற்றும் கள ஆய்வு நடத்தி, பதிவுத்துறை தலைவருக்கு 2023, அக்., 19ல் விரிவான விசாரணை அறிக்கை (கடித எண்: 7475இ4/2023, நாள்: 19.10.2023) சமர்ப்பித்தார்.
அதில், 'ஓமலுார் சார் பதிவாளர் அலுவலக ஆவணங்களை ஆய்வு செய்ததில், 'சுதர்சன் என்பவரால், பாலமுருகன் என்பவருக்கு நிலம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. பத்திரப்பதிவு செய்யப்பட்டபோது, மூலஆவணமாக கடந்த, 1972ம் ஆண்டில் ஹனுமந்தராவ் எழுதியதாக கூறப்படும் உயில் (ஆவண எண்: 151/1972) பரிசீலிக்கப் பட்டுள்ளது.
அதன்படியே வருவாய்த்துறை ஆவணங்களிலும் பட்டா பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. அந்த உயிலில் கைரேகை மற்றும் கையெழுத்து பதிவுகள் காணப்படவில்லை. தவிர, அலுவலக முத்திரை (சீல்) மாறியிருக்கிறது.
மேலும், அந்த உயிலில் இணை சார் பதிவாளர் A. சவுந்திரபாண்டியன் என குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த கையெழுத்துகளும் மாறுபட்டுள்ளன. மோசடியாக ஒரு உயில் ஆவணம் தயாரிக்கப்பட்டு இடைசெருகலாக இணைக்கப்பட்டிருப்பது புலனாகிறது' என, தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, போலியாக உயில் ஆவணம் தயாரித்து, பதிவுத்துறை அலுவலக ஆவணங்களில் இணைத்த சுதர்சன் உள்ளிட்டோர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்யுமாறு சேலம் மாவட்ட எஸ்.பி.,க்கும், விசாரணை அதிகாரியான கனகராஜ் பரிந்துரைத்திருந்தார். ஆனாலும், போலீசார் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.
லஞ்சமாக 10 ஏக்கர்
போலி ஆவணம் தயாரித்தல், பதிவுத்துறை அலுவலக ஆவண புத்தகங்களில் அதை இடைசெருகல் செய்தல், ஏற்கனவே இருந்த அரசு ஆவணத்தை கிழித்து அழித்தல், போலி உயில் ஆவண அடிப்படையில் பட்டா பெயர் மாற்றம் செய்தல், போலி ஆவணங்கள் என்று தெரிந்தே மோசடியாக பத்திரப்பதிவு செய்தல் என்ற எண்ணற்ற தகிடுதத்தங்களை செய்து அபகரிப்புக்கு துணைபோயுள்ளனர் வருவாய்த்துறை மற்றும் பதிவுத்துறை ஊழியர்கள், அதிகாரிகள்.
இந்த மோசடிக்கு, சாதாரணமாக ஊழியர்கள் மட்டத்தில் மட்டும் துணைபோயிருப்பதாக கருத முடியாது. உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பிருக்க வாய்ப்புள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது. மோசடிக்கு துணைபோன இரு துறைகளின் அதிகாரிகளுக்கும் தலா, 10 ஏக்கர் எஸ்டேட் நிலம், 50 லட்சம் லஞ்சமாக தரப்பட்டிருப்பதாக புகார்தாரர் தரப்பில் சந்தேகிக்கப்படுகிறது.
மோசடியாக அபகரிக்கப்பட்ட எஸ்டேட், கட்டடங்கள் உள்ளிட்டவற்றின் மொத்த மதிப்பு, 60 கோடி ரூபாயாக இருப்பதால், அவற்றில் கமிஷன் தொகையை 'சதவீதமாக பேசி' அதிகாரிகள் பங்கு பெற்றிருப்பதாகவும் தெரிகிறது.
பெயர் குறிப்பிட விரும்பாத போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நிலம் அபகரிப்பு பின்னணியில் அரசியல் பிரமுகரும், பிரபல ஜவுளிக்கடை உரிமையாளரும் இயங்குவதாக சொல்லப்படுகிறது. மோசடி செய்யப்பட்டிருக்கும் சொத்தின் மதிப்பு ஏறத்தாழ 60 கோடி. வெவ்வேறு பத்திரப்பதிவு அலுவலகங்களில் போலி ஆவணங்கள் அடிப்படையில் பத்திரப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
சொத்துக்களை அபகரிக்க திட்டமிட்டு பலர், பல நிலைகளில் இயங்கியுள்ளனர். அரசியல், அதிகார பின்னணி சொல்லப்படுவதால் இந்த வழக்கை, 'லோக்கல்' போலீசார் கையாளுவது சரியாக இருக்காது என்றே கருதுகிறோம்.
இந்த மோசடி நன்கு திட்டமிட்ட, 'ஆர்கனைஸ்டு க்ரைம்' என்பதால், இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி., விசாரிப்பதே பொருத்தமாக இருக்கும்; அதற்கான உத்தரவை டி.ஜி.பி., அலுவலகமோ அல்லது மனு விசாரணை அடிப்படையில் உயர்நீதிமன்றமோ தான் முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
- நமது சிறப்பு நிருபர் -