ரூ.37 கோடி செலவு செய்த பின்னும் 'டிஜிட்டல்' முறைக்கு மாறாத வனத்துறை
ரூ.37 கோடி செலவு செய்த பின்னும் 'டிஜிட்டல்' முறைக்கு மாறாத வனத்துறை
ADDED : ஜன 13, 2025 12:39 AM

சென்னை: வனத்துறையில் நிர்வாக பணிகளை, 'டிஜிட்டல்' முறைக்கு மாற்ற, 37 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட போதிலும், அதற்கான நடவடிக்கைகள் இன்னும் முழுமை பெறவில்லை என்று கூறப்படுகிறது.
பொதுவாக வனத்துறையின் பணிகள் என்றால், காடு வளர்ப்பு, வன உயிரினங்கள் பாதுகாப்பு என்று மட்டுமே தெரிகிறது. நிர்வாக ரீதியான பணிகள் குறித்து, பெரும்பாலும் வெளியில் தெரிவதில்லை.
துறையின் தலைமையகத்தில் இருந்து கடைநிலையில் களத்தில் இருக்கும் பணியாளர் வரை, அனைவருக்குமான நிர்வாகம் சார்ந்த பணிகள், 'மேனுவல்' முறையிலேயே மேற்கொள்ளப்பட்டு வந்தன.
பணிகள் தாமதம்
களநிலையில் எந்த பணியை மேற்கொள்வதாக இருந்தாலும், மேலதிகாரிகளிடம் எழுத்துப்பூர்வ உத்தரவு பெறுவது கட்டாயம்.
துறை சார்ந்த பணிகள் மட்டுமல்லாது, வனத் துறையின் தங்குமிடங்களை பயன்படுத்த வேண்டும் என்றாலும், எழுத்துப்பூர்வ அனுமதி அவசியமாக இருந்தது.
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்துள்ள நிலையில், எழுத்துப்பூர்வ ஆவணங்களை பயன்படுத்துவதால், பணிகள் தாமதமாகும் நிலை ஏற்படுகிறது.
அதனால், நிர்வாக ரீதியான பணிகளை, 'ஆன்லைன்' முறையில், மிக விரைவாக மேற்கொள்ள, வனத்துறை முடிவு செய்தது. நிர்வாக பணிகள் அனைத்தையும், டிஜிட்டல் முறைக்கு மாற்றும் நடவடிக்கைகளும் துவக்கப்பட்டு உள்ளன.
கடந்த, 2022ல் இப்பணிகளுக்காக, 37 கோடி ரூபாய் செலவிட, தமிழக அரசு ஒப்புதல் அளித்தது. அதன் அடிப்படையில், நிர்வாக பணிகளை டிஜிட்டல் முறைக்கு மாற்றும் பணிகள் இன்னும் முழுமை பெறாத நிலை உள்ளது.
இதுகுறித்து, வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நிர்வாக பணிகள், வனத்துறை - அரசு; வனத்துறை - மக்கள்; வனத்துறை - வணிகம் என, மூன்று தலைப்புகளில் பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி, வனத்துறையில் இருந்து அரசுக்கும், பிற துறைகளுக்கும் இடையிலான தொடர்பு கோப்புகள், இன்றும், 'மேனுவல்' முறையிலேயே உள்ளன.
வனத்துறை - மக்கள் இடையிலான விவகாரங்கள் தொடர்பான கோப்புகள், 50 சதவீத அளவுக்கு டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்டுள்ளன.
ஆன்லைனுக்கு மாற்றம்
வனத்துறை - வணிகம் தலைப்பில் வரும் பணிகளும், 50 சதவீதம் வரையே டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்டுள்ளன. வனத்துறையின் சூழலியல் சுற்றுலா தலங்களில் முன்பதிவு செய்வது உள்ளிட்ட அனைத்து பணிகளும், ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளன.
தனியார் நிலத்தில் மரம் வெட்டுதல் போன்ற பணிகளுக்கு, ஆன்லைன் முறையில் அனுமதி வழங்கப்படும் அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
எஞ்சிய பணிகளை படிப்படியாக, ஆன்லைன் முறைக்கு மாற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.