முன்னாள் எம்.எல்.ஏ.,க்களுக்கு 'வீ தி லீடர்ஸ்' அண்ணாமலை வலை
முன்னாள் எம்.எல்.ஏ.,க்களுக்கு 'வீ தி லீடர்ஸ்' அண்ணாமலை வலை
ADDED : செப் 28, 2026 05:29 AM

சென்னை: 'வீ தி லீடர்ஸ்' அமைப்பை வலுப்படுத்த, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பலருக்கும், அதன் தலைவர் அண்ணாமலை வலைவீசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
பா.ஜ., தமிழக முன்னாள் தலைவர் அண்ணாமலை, அக்கட்சியில் இருந்து விலகி, 'வீ தி லீடர்ஸ்' அமைப்பை நடத்தி வருகிறார்.
இதன் சார்பில், போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த அமைப்பில், இதுவரை 20.19 லட்சம் பேர் இணைந்து உள்ளனர். இந்நிலையில், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் சிலரிடம், அண்ணாமலை பேச்சு நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து 'வீ தி லீடர்ஸ்' வட்டாரம் கூறியதாவது: அண்ணாமலை பா.ஜ., தமிழக தலைவராக இருந்தபோது, அ.தி.மு.க., உட்பட பல கட்சிகளின் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் 15க்கும் மேற்பட்டோரை, பா.ஜ.,வில் இணைத்தார். அவர்களில் ஒரு சிலர் தவிர, பலருக்கும் கட்சிப்பதவி கூட கிடைக்கவில்லை. தற்போது, சொந்தமாக தனி அமைப்பை அண்ணாமலை உருவாக்கி உள்ளார்; இங்கு அவர் வைத்ததுதான் சட்டமாக இருக்கும்.
எனவே, தன்னை நம்பி பா.ஜ.,வுக்கு வந்தவர்களிடம் தற்போது அண்ணாமலை மீண்டும் பேச்சு நடத்துகிறார். பெரிதாக சர்ச்சையில் சிக்காமல், ஊழல் புகார் இல்லாமல், ஓரளவுக்கு மக்கள் செல்வாக்கு கொண்ட, அ.தி.மு.க., - தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் நிர்வாகிகளிடம் பேச்சு நடக்கிறது.
கொங்கு மண்டலத்தில் 'வீ தி லீடர்ஸ்' அமைப்பு வலுவாக உள்ளது. ஆனால், தென் மாவட்டங்களில் மிக பலவீனமாக உள்ளதால், அப்பகுதிகளில் உள்ள, 'மாஜி'க்களை தான் அண்ணாமலை எதிர்பார்க்கிறார். தன்னை நம்பி வருவோருக்கு, அமைப்பில் மாநில பொறுப்புகளை வழங்க உள்ளார். இவ்வாறு அவ்வட்டாரங்கள் கூறின.
