அ.தி.மு.க.,விலிருந்து வந்தவர்களுக்கு பதவி; த.வெ.க., நிர்வாகிகள் கடும் அதிருப்தி
அ.தி.மு.க.,விலிருந்து வந்தவர்களுக்கு பதவி; த.வெ.க., நிர்வாகிகள் கடும் அதிருப்தி
UPDATED : செப் 28, 2026 05:50 AM
ADDED : செப் 28, 2026 05:49 AM

சென்னை: அ.தி.மு.க.,வில் இருந்து வந்தவர்களுக்கு பதவிகளை கொடுத்தது, த.வெ.க., நிர்வாகிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
த.வெ.க., மாவட்ட செயலர்கள் சிலர் கூறியதாவது: திருப்பூர் தெற்கு மாவட்ட செயலர் திருமலை பொறுப்பில், உடுமலைப்பேட்டை, மடத்துக் குளம் என இரு தொகுதிகள் இருந்தன.
மடத்துக்குளத்தை, அ.தி.மு.க.,வில் இருந்த வந்த, முன்னாள் எம்.எல்.ஏ., மகேந்திரனுக்கும், உடுமலைப்பேட்டையை, முன்னாள் அமைச்சர் ராதாகிருஷ்ணனுக்கும் கொடுத்ததால், அதிகாரம் இல்லாத மாவட்ட செயலராகி விட்டார், திருமலை.
எம்.எல்.ஏ., சத்தியபாமாவின் திருப்பூர் வடக்கு தொகுதி, முன்னாள் அமைச்சர் ஆனந்தன் வசம் சென்றுள்ளது. த.வெ.க., அமைச்சர் ராஜ்குமாரின் கடலுார் தொகுதி, முன்னாள் அமைச்சர் சம்பத் வசமாகி உள்ளது.
'அ.தி.மு.க., மாஜிக்களுக்கு ஒதுக்கிய தொகுதிகளை, இனி அவர்கள் பார்த்துக் கொள்வர்' என, கட்சி தலைமையில் இருந்து உத்தரவு வந்துள்ளது. அ.தி.மு.க.,வில் இருந்து வந்தவர்களுக்கு, துணை பொதுச்செயலர் பதவி கொடுத்ததை கூட ஏற்றுக் கொள்ளலாம்.
ஆனால், தொகுதிகளையும் தாரை வார்ப்பதை ஏற்க முடியாது. ஏற்கனவே, எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்தவர்களுக்கும், மாற்று கட்சியில் இருந்து வந்து, த.வெ.க.,வில் எம்.எல்.ஏ., ஆன 27 பேருக்கும், அந்தந்த தொகுதியை தலைமை கொடுத்தது. இதனால், ரசிகர் மன்றத்தில் இருந்து வந்த 10க்கும் மேற்பட்ட மா.செ.,க்கள் பதவிகளை இழந்தனர்.
இந்நிலையில், புதிதாக வந்தவர்களுக்கு பதவிகளை வாரி வழங்கினால், கட்சிக்காக உழைத்தவர்கள் எங்கே செல்வோம்? இது குறித்து பொதுச்செயலர் ஆனந்திடம் கேட்டால், 'பொறுமையாக இருங்கள்' என்று மட்டும் சொல்கிறார். இவ்வாறு அவர்கள் கூறினர்.
