sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

ரவுடிகளில் நாலு வகை; அன்பில் செப்பேடு மாயமான கதை

/

ரவுடிகளில் நாலு வகை; அன்பில் செப்பேடு மாயமான கதை

ரவுடிகளில் நாலு வகை; அன்பில் செப்பேடு மாயமான கதை

ரவுடிகளில் நாலு வகை; அன்பில் செப்பேடு மாயமான கதை

4


ADDED : டிச 17, 2024 03:07 AM

Google News

ADDED : டிச 17, 2024 03:07 AM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

“தமிழகத்தில் கொலைகள் குறைந்து வருகின்றன. ரவுடிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மீது, தனிக்கவனம் செலுத்தப்படுகிறது. வரலாற்று சிறப்புமிக்க அன்பில் செப்பேடு என்ன ஆனது என்றே தெரியவில்லை,” என, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் தெரிவித்தார்.

நம் நாளிதழுக்கு, அவர் அளித்த சிறப்பு பேட்டி:


கஞ்சா, மது உள்ளிட்ட போதையால், அதிகம் கொலைகள் நடக்கின்றன; ஆதாய கொலைகளும் அதிகரித்து வருகின்றன. அவற்றை தடுக்க புது திட்டம் ஏதேனும் உள்ளதா?

கடந்த 2019ல், 1,678 கொலை வழக்குகள் பதிவாகின. அதுவே 2023ல், 1,598 ஆக குறைந்தன. நடப்பாண்டில், அக்., வரை, 1,298 கொலை வழக்குகள் பதிவாகி உள்ளன. ஆண்டுதோறும், கொலை வழக்குகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கஞ்சா, மது உள்ளிட்ட போதையால், கொலைகள் அதிகம் நடப்பதாக கூறுவது, அறிவியல் ரீதியாக அடிப்படை ஆதாரமற்றது.

கொலைகளுக்கான காரணங்கள், 18 வகைகளாக பிரிக்கப்படுகின்றன. ரவுடிகளை பொறுத்தவரை, நான்கு வகையான பிரிவுகளில், 27,666 ரவுடிகள் இருந்தனர். தற்போது, 26,462 பேர் மட்டும் இருப்பதும், மற்றவர்கள் செயல்படாமலும், குறைந்த செயல்பாடுகளுடன் இருப்பது தெரியவந்துள்ளது. ரவுடிகளை கண்காணிக்க, அனைத்து போலீஸ் நிலையங்களிலும், போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிய குற்றவியல் சட்ட விதிகளை பயன்படுத்தி, ரவுடிகளின் சொத்துக்களை முடக்கவும், பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது, 41 ரவுடிகளின் நிதி குறித்து விசாரணை நடக்கிறது.

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் 'போக்சோ' சட்டத்தில் முதியோர் அதிகம் கைதாகின்றனரே, காரணம் என்ன?

குழந்தைகள் பெரும்பாலும் தங்களுக்கு நன்கு தெரிந்த, அறிமுகமான அல்லது குடும்ப உறுப்பினர்களால் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த, போக்சோ வழக்குகள், இரு வகையாக கையாளப்படுகின்றன.

மேலும், 18 வயது நிரம்பாத, பள்ளி, கல்லுாரி மாணவியர் காதல் வயப்பட்டு, படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு, காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறுதல்; சட்டத்தால் அங்கீகரிக்கப்படாத திருமண உறவில் ஈடுபடுதல்; 12 வயதிற்கும் கீழ் உள்ள குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் ஆகியவை குறித்து, தீவிரமாக விசாரிக்கப்படுகிறது.

அறிமுகமான நபர்களால் பாலியல் தொல்லைக்கு உள்ளாகும் குழந்தைகள், அறியாமை, பயம் காரணமாக வெளியில் சொல்லாமல் இருந்து விடுகின்றனர். இதை குற்றவாளிகள், தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர். இத்தகையை குற்றவாளிகளில் பெரும்பாலானோர் முதியோராக உள்ளனர். விழிப்புணர்வு காரணமாக, தற்போது போக்சோ வழக்குகள் எண்ணிக்கை இரு மடங்காகி உள்ளது.

சமீபத்தில், பள்ளி, கல்லுாரிகள், மருத்துவமனைகள், விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் அதிகம் வருவதற்கு காரணம் என்ன; பின்னணியில் இருக்கும் கும்பல் எது; சதி செயல் தான் அவர்களின் நோக்கமா?

இ - மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் குற்றவாளிகள், இணையதள தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதாலும், பெரும்பான்மை மிரட்டல்கள், வெளிநாட்டில் இருந்து அனுப்பப்படுவதாலும், இவற்றை ஆய்வு செய்து, புலன் விசாரணை செய்வதில் சிரமங்கள் உள்ளன.

சென்னை மாநகர போலீஸ் மற்றும் மாநில சைபர் குற்றப் பிரிவு சார்பில், தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தொடர் விசாரணை நடக்கிறது.

தேசிய புலனாய்வு முகமையான என்.ஐ.ஏ., கைது நடவடிக்கையை தீவிரப்படுத்தி வரும் நிலையில், தமிழக 'கியூ' பிரிவு முக்கிய வழக்குகளில் ஈடுபடுவதாக தெரியவில்லையே?

நடப்பு ஆண்டில், கியூ பிரிவு போலீசார், தஞ்சாவூர், சிவகங்கை, ஈரோடு மாவட்டங்களில், மோசடியாக இந்திய பாஸ்போர்ட் பெற்ற, ஆறு இலங்கைத் தமிழர்கள் உட்பட, 23 பேரை கைது செய்தனர். கடந்த, 2021 மற்றும் 2022ல், சென்னை, சேலத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பு ஆதரவாளர்களின் நடவடிக்கைகளை கண்டறிந்தனர். இவ்வழக்குகள் என்.ஐ.ஏ.,க்கு மாற்றப்பட்டன.

வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்ட சிலைகளில் எத்தனை கோவில்களில் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. மாயமான அன்பில் செப்பேடு எங்கு உள்ளது; சன்மானம் அறிவித்தும் அதை மீட்பதில் என்ன சிக்கல்?

கடந்த, 2014 - 2024 வரை, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து, 24 சிலைகள் மீட்கப்பட்டன. அவற்றில், 22 சிலைகள், சம்பந்தப்பட்ட கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டன. இரண்டு சிலைகள், கும்பகோணம் நாகேஸ்வர சுவாமி கோவிலில் உள்ள, அறநிலையத் துறை மையத்தில் உள்ளன.

அன்பில் செப்பேடு மாயமானது தொடர்பாக, சென்னை அரசு அருங்காட்சியக இயக்குனர் எஸ்.ஏ.ராமன் கடிதம் வாயிலாக அளித்த புகாரின்படி, சிலை திருட்டு தடுப்பு பிரிவில், 2023, ஜன., 5ல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தீவிர விசாரணையில், சுந்தரசோழனின் நான்காவது ஆட்சி காலத்தில் வெளியிடப்பட்ட அன்பில் செப்பேடுகள், சுந்தரசோழர் ஆண்ட, திருச்சி மாவட்டம், லால்குடி தாலுகா, அன்பில் கிராமத்தில், நட்சத்திரம் என்பவர், 1900ம் ஆண்டில் வீடு கட்ட பூமியை தோண்டும்போது, ஒரு வளையத்தில் மாட்டப்பட்ட, 16 செப்பு தகடுகள் கிடைத்ததாக தெரியவந்தது.

அவற்றை சுந்தரராஜ பெருமாள் கோவிலில் திருப்பணி செய்து வந்த, லட்சுமண செட்டியாரிடம் ஒப்படைத்ததாகவும், அவர், தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத அய்யரிடம் கொடுத்ததாகவும் தெரியவந்துள்ளது.

உ.வே.சாமிநாத அய்யர், சென்னை தொல்லியல் துறையில் பணிபுரிந்த, டி.ஏ.கோபிநாத் ராவ் என்பவரிடம் மொழிபெயர்ப்பு செய்ய கொடுத்ததாகவும், அதன்பின், கோபிநாத் ராவ் பணிமாறுதலில் கேரளா சென்றதும், தற்போது உயிருடன் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.

கோபிநாத் ராவ் மொழி பெயர்ப்பு செய்தது குறித்து, 'Epigraphia Indica' என்ற நுாலில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். ஆனால், மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட செப்பேடுகள் எங்கு உள்ளன என்பதை அறிய முடியவில்லை. இது தொடர்பாக, எந்த ஆவணமும் இதுவரை கிடைக்கவில்லை.

அன்பில் செப்பேடுகள் குறித்து, கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகம் காப்பாளர் கோவிந்தராஜை, 2021, ஆக., 18ல், கர்நாடக மாநிலம் மைசூருக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தப்பட்டது. அவரால், 2022, ஜன., 11ல், புதுடில்லியில் உள்ள இந்திய தொல்லியல் துறை கல்வெட்டியல் பிரிவு தலைமை இயக்குனரை சந்தித்து, காணாமல்போன அன்பில் செப்பேடுகள் குறித்த, அனைத்து ஆவணங்களும் கோரப்பட்டது. அவர்கள் ஆவணங்களை ஆராய்ந்து, பதில் அளிப்பதாக உறுதி அளித்துள்ளனர். எனினும், இச்செப்பேடுகள் எங்கு உள்ளன என்ற விபரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

தகவல் தருவோருக்கு சன்மானம் அறிவிக்கப்பட்டும், எவ்வித தகவலும் இதுவரை கிடைக்கவில்லை. சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில், இந்த செப்பேடுகள் இருந்ததற்கான சொத்துப் பதிவேடுகள் அல்லது அது தொடர்பான ஆவணங்கள் ஏதும் அளிக்கப்படவில்லை.

அன்பில் செப்பேடுகள் எந்த காலகட்டத்தில் திருடப்பட்டன; இச்செப்பேடுகளை கோபிநாத் ராவ் ஆய்வு செய்த பின், மீண்டும் அன்பில் கிராமத்தில் உள்ள சிவன் கோவிலுக்கு கொடுத்து விட்டாரா அல்லது சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் கொடுத்து விட்டாரா என்பதும் தெரியவில்லை.

கர்நாடகா மாநிலம், மைசூரு தொல்லியல் துறை கல்வெட்டு பிரிவினர், 1956 - 1957ம் ஆண்டுகளில் இச்செப்பேடுகளை லால்குடி சிவன் கோவிலுக்கு வந்து பதிவெடுத்து சென்றது விசாரணையில் தெரிய வருகிறது.

அந்த குழுவில் இருந்தவர்கள் யாரும் தற்போது உயிருடன் இல்லாததால், அன்பில் செப்பேடுகள் தற்போது இருக்கும் இடம் குறித்து, எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. இந்தியாவில் உள்ள அனைத்து அருங்காட்சியகங்களிலும் தேட, அருங்காட்சியகங்களின் ஆணையர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

மீண்டும் கள்ளச்சாராய விற்பனை தலைதுாக்கி விட்டதே; இதை ஒழிப்பதில் அரசியல்வாதிகளின் குறுக்கீடுகள் உள்ளதா?

அரசியல்வாதிகளின் தலையீடு இல்லை. கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு பின், மாநிலம் முழுதும் மூன்று மாதங்களில், 1,112 கள்ளச்சாராய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 142 கள்ளச்சாராய குற்றவாளிகள், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மெத் ஆம்பெட்டமைன் உள்ளிட்ட, 'சிந்தட்டிக்' போதை பொருள் புழக்கம் அதிகம் உள்ளதே; தமிழகம் சர்வதேச போதை பொருள் கடத்தல்காரர்களின் புகலிடமாக மாறி விட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து என்ன சொல்கிறீர்கள்?

தமிழகத்தின் முக்கிய பிரச்னையாக கஞ்சா பரவல் உள்ளது. மற்ற போதைப்பொருட்கள், முக்கிய நகர்ப்புற மையங்களில் ஓரளவுக்கு பரவலாக உள்ளன. கடந்த ஏழு ஆண்டுகளாக, கஞ்சா சாகுபடி இல்லாத மாநிலமாக தமிழகம் உள்ளது.

ஆந்திரா, ஒடிசா, தெலுங்கானா மற்றும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து, தமிழகத்திற்கு கஞ்சா கடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டு செப்., வரை, 7,517 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 12,141 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து, 16,513 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இது தவிர, ஒரு லட்சத்து, 3,452 போதை மாத்திரைகள் மற்றும் 411 கிலோ எடையுள்ள மெத் ஆம்பெட்டமைன் உள்ளிட்ட இதர போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மாநிலத்தில் முதன்முறையாக, போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட, குற்றவாளிகளுக்கு எதிராக நீதி விசாரணை நடத்தப்பட்டு, 48 பேரின், 19.17 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகள், 55 லட்சம் ரூபாய் இருப்பு உள்ள, 9,428 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில், ஒன்பது மாதத்தில் சைபர் குற்றவாளிகள், 1,100 கோடி ரூபாயை மோசடி செய்த நிலையில், இக்குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய முடியவில்லையே ஏன்?

சைபர் குற்றவாளிகள் பெரும்பாலும் வெளிநாடுகளில் வசிக்கின்றனர். அவர்கள் பயன்படுத்திய ஐ.பி., முகவரி, வியட்நாம், கம்போடியா, மியான்மர், சீனா போன்ற நாடுகளிலிருந்து பயன்படுத்தப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்டோர் வங்கி கணக்குகளில் இருந்து அனுப்பப்படும் பணம், இரண்டு மணி நேரத்திற்குள்ளாக எதிரிகளால் சுருட்டபட்டு விடுகிறது.

இதனால், சந்தேகத்திற்குரிய வங்கி கணக்கில் இருந்து, சைபர் குற்றவாளிகள் பணத்தை எடுக்க முடியாமல், 48 மணி நேரத்திற்கு தடை விதிக்க வேண்டும். சட்ட அமலாக்க முகமைகள், சந்தேகத்திற்குரிய வங்கிக் கணக்குகளை உடனடியாக முடக்க வேண்டும், ஆனால், வங்கி அதிகாரிகளின் செயல்பாடுகளால் தாமதமாகிறது.

'வாட்ஸாப், டெலிகிராம், பேஸ்புக், மெட்டா' மற்றும் பிற சமூக வலைதள அதிகாரிகள், சரியான நேரத்தில் தகவல்களை வழங்குவதில்லை. அவர்கள் இந்திய சட்டத்தை மதிக்கவில்லை.

ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார், கட்டாயம் துப்பாக்கி, லத்தி எடுத்து செல்ல வேண்டும் என, உத்தரவிட்ட நிலையில், கடைசியாக எத்தனை லத்திகள் வாங்கப்பட்டன; எத்தனை பேருக்கு துப்பாக்கிகள் தரப்பட்டுள்ளன?

ரவுடிகளை சோதனைகளை செய்யும்போது, காவல் துறையினர் தாக்கப்படும் சம்பவங்களை தவிர்க்க, ரோந்து பணி செய்யும் எஸ்.ஐ., மற்றும் இன்ஸ்பெக்டர்கள், கைத்துப்பாக்கியை பயன்படுத்தவும், காவலர் முதல் ஏட்டு வரை, 410 மஸ்கட், 303 ரைபிள் ஆகியவற்றை பயன்படுத்தவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

சட்டம் ஒழுங்கு போலீஸ் நிலையங்களில் ரோந்து செல்லும் எஸ்.ஐ., மற்றும் இன்ஸ்பெக்டர்களுக்கு, போதுமான கைத்துப்பாக்கி மற்றும் குண்டுகள் வழங்கப்பட்டுள்ளன. ஜனவரி மாதம், 8,126 லத்திகள் புதிதாக வாங்கி போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us