UPDATED : ஆக 02, 2026 06:21 AM
ADDED : ஆக 02, 2026 06:20 AM

திருப்பூரின் பல்லாயிரம் தொழிற்சாலைகளில் தினமும் தயாராவது ஆடைகள் மட்டுமல்ல... ஆயுள் முழுவதும் நீடிக்கும் நட்புகளும்தான்.
என்னைக் காத்த கடவுள் அவன்
அவிநாசிலிங்கம்பாளையத்தைச் சேர்ந்த பழக்கடை உரிமையாளர் சிவக்குமார்:
வேலையில்லாமல் ஊர்ல சும்மா சுத்திட்டிருந்தேன். அப்போ சென்னைல வேலை வாங்கிக் கொடுத்து, தங்க இடமும் மூணு வேளை சாப்பாடும் பார்த்துக்கிட்டது சபியுல்லாதான். இன்னைக்கு நான் நல்லா இருக்கேன்னா அதுக்கு காரணம் அவன்தான். எனக்கு நண்பன் மட்டும் இல்ல... என்னைக் காத்த கடவுளே அவன்தான்.
அவன் சொன்னா... கிளம்பிடுவேன்
அம்மாபாளையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் மோகன பாரதி:
நானும் நவீன்குமாரும் வழக்கறிஞர்கள்தான். இந்தியாவுல பாதி இடங்களை சேர்ந்து சுற்றியிருப்போம். அவன் இல்லாம நான் எந்த டிரிப்புக்கும் போனதே இல்ல. 'கிளம்பலாமா?'ன்னு அவன் கேட்டா, அடுத்த நிமிஷமே நான் ரெடி. உலகம் முழுக்க சேர்ந்து சுத்தணும்ன்னு இன்னும் ஆசை இருக்கு.
ஒவ்வொரு முடிவிலும்... அவன்
அவிநாசியைச் சேர்ந்த சலுான் கடை ஊழியர் பிரபு:
எந்த விஷயமா இருந்தாலும் முதல்ல நாங்க ரெண்டு பேரும் பேசிப்போம். சந்தோஷமோ, கஷ்டமோ... எல்லாத்தையும் ஒருத்தர்கிட்ட இன்னொருத்தர் பகிர்ந்துக்குவோம். எந்த புதிய முயற்சியையும் பிரகாஷ் இல்லாம நான் தொடங்கவே மாட்டேன். என் நண்பன் மட்டுமல்ல... என் ஒவ்வொரு முடிவுக்கும் பின்னாடி இருக்கிற நம்பிக்கை அவன்தான்.
---
நண்பனா வந்தார்... குருவா மாறிட்டார்
மாஸ்கோ நகரைச் சேர்ந்த டெய்லர் அருள்பாண்டியன்:
ஊர்ல ரொம்ப கஷ்டப்பட்டுட்டு இருந்தப்போ, திருப்பூருக்கு கூட்டிட்டு வந்து டெய்லரிங் தொழில் கற்றுக்கொடுத்தவர் ஏழுமலை அண்ணன். இன்னைக்கு சொந்த ஊர்ல வீடு கட்டி சந்தோஷமா வாழ்றேன்னா அதுக்கு காரணம் அவர்தான். எனக்கு நண்பர் மட்டும் இல்ல... குருநாதர்.
அவள்தான் என் குடும்பம்
பாலமுருகன் நகரைச் சேர்ந்த பின்னலாடை நிறுவன ஊழியர் சுகுணா:
வாழ்க்கையில கஷ்டப்பட்ட நேரத்துல, சொந்த தங்கச்சி மாதிரி வீட்டிலேயே வச்சு பார்த்துக்கிட்டா விஜிஷா. எனக்கு அப்பா, அம்மா இல்லாத குறையே தெரியாம பாத்துக்கிட்டா. தோழின்னு சொல்றதைவிட, அவதான் என் குடும்பம்னு சொன்னா அது மிகையில்ல.
நட்பு இருந்தா... பயமே இல்லை
பிச்சம்பாளையத்தில் வசிக்கும் மாணவி காயத்ரி:
நானும் இந்துமதியும் ரெண்டு பேரும் எங்க போனாலும் சேர்ந்துதான் போவோம். வேலை கூட சேர்ந் துதான் செய்வோம். என் வீட்டுல பிரச்னைன்னா அவ எனக்காக நிப்பா; அவ வீட்டுல பிரச்னைன்னா நான் அவளுக்காக நிற்பேன். சண்டை வரும்... ஆனா அது கொஞ்ச நேரம்தான். எங்க நட்பு அதையெல்லாம் தாண்டி நிற்கும்.
எப்பவும் என் பக்கம் நிற்பான்
அவிநாசியைச் சேர்ந்த மொபைல்போன் கடை மேலாளர் கருப்பசாமி:
எவ்வளவு பெரிய பிரச்னை வந்தாலும் என்னை விட்டுக் கொடுக்க மாட்டான் முரளி. என் கல்யாணத்துல எல்லா வேலையையும் இழுத்துப் போட்டு செய்தான். நல்ல நண்பன் இருக்குறது பெரிய பலம். எனக்கு அந்த பலம் முரளிதான்.
