மதுரையில் பத்தையும் 'கொத்தாக' அள்ள அமைச்சர் மூர்த்திக்கு 'கிரீன் சிக்னல்' ; அமைச்சர் தியாகராஜன் சிபாரிசுக்கு 'செக்'
மதுரையில் பத்தையும் 'கொத்தாக' அள்ள அமைச்சர் மூர்த்திக்கு 'கிரீன் சிக்னல்' ; அமைச்சர் தியாகராஜன் சிபாரிசுக்கு 'செக்'
ADDED : ஆக 25, 2025 05:20 AM

மதுரை : மதுரை மாநகராட்சி மேயர் மாற்றம் 'பஞ்சாயத்து' எதிரொலியாக மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளிலும் தி.மு.க.,வை வெற்றி பெற வைக்கும் பொறுப்பை அமைச்சர் மூர்த்திக்கு அளிக்க தலைமை கிரீன் சிக்னல் வழங்கியுள்ளது. இதற்காக மூர்த்தி பரிந்துரை செய்தவருக்கு மேயர் பதவி அளிக்க வாய்ப்புள்ளது. இதன் மூலம் அமைச்சர் தியாகராஜனின் மேயர் சிபாரிசு கேள்விக்குறியாகி உள்ளது.
மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி. இவர் அமைச்சர் தியாகராஜனின் தீவிர ஆதரவாளர். தி.மு.க.,வில் தியாகராஜன் 'பவர்புல்'ஆக இருந்தபோது அவரது ஆதரவாளர்களுக்கு மேயர், மண்டலத் தலைவர், வரிவிதிப்புக் குழு தலைவர் என பதவிகள் அளிக்கப்பட்டன. அப்போது அமைச்சர் மூர்த்தியின் முயற்சிகள் முறியடிக்கப்பட்டன.
இந்நிலையில், மதுரை மாநகராட்சியில் ரூ.பல கோடியில் நடந்த சொத்துவரி முறைகேடு அரசியலில் புயலைக் கிளப்பியது. அரசுக்கு ஏற்பட்ட நெருக்கடியால் முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி ஆளுங்கட்சியின் 5 மண்டல தலைவர்கள், 2 நிலைக் குழுத் தலைவர்கள் பதவி விலகியது தமிழக அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக சொத்துவரி முறைகேட்டில் ஈடுபட்டதாக வரிவிதிப்புக் குழு தலைவரின் கணவர், மாநகராட்சி உதவி கமிஷனர்கள், ஓய்வு பெற்ற அதிகாரிகள், பில் கலெக்டர்கள் என 19 பேர் கைது செய்யப்பட்டனர். மாநகராட்சி அலுவலர்கள் பலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
மேயருக்கு நெருக்கடி இதன் தொடர்ச்சியாக மேயரின் கணவர் பொன்வசந்தும் கைது செய்யப்பட்டார். இதையடுத்து இந்திராணி மேயர் பதவியில் நீடிக்க அரசியல் ரீதியான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் மேயரை மாற்றும் முடிவில் தி.மு.க., தலைமை உள்ளது.
இந்நிலையில் அமைச்சர் மூர்த்தி, தி.மு.க., தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தரப்பில் புதிய மேயராக 5வது வார்டு கவுன்சிலர் வாசுகிக்கும் (முன்னாள் மண்டல தலைவர்), அமைச்சர் தியாகராஜன், நகர் தி.மு.க., செயலாளர் தளபதி ஆகியோர் 61 வது வார்டு கவுன்சிலர் செல்விக்கும் சிபாரிசு செய்கின்றனர்.
முதல்வர் ஸ்டாலின் திருமண நாளன்று சென்னையில் அமைச்சர் நேரு வீட்டில் மதுரை மேயர் 'பஞ்சாயத்து' பல மணிநேரம் நடந்தது. அப்போது 'மாநகராட்சியின் அதிக வார்டுகள் தெற்கு, வடக்கு மாவட்டங்களில் தான் உள்ளன. நாங்கள் சிபாரிசு செய்தவருக்கு தான் பதவி வேண்டும்' என மூர்த்தியும், 'நகர் மாவட்டம் எங்களுக்கு உட்பட்டது. ஏற்கனவே மத்திய தொகுதியில் இருந்து தான் மேயர் தேர்வு செய்யப்பட்டார். அதே சமூகத்தை சேர்ந்தவருக்கு பதவி கொடுத்தால் பிரச்னை இருக்காது' என தியாகராஜன் தரப்பும் முறையிட்டது.
மூர்த்திக்கு கிரீன் சிக்னல்
இதுகுறித்து தி.மு.க.,வினர் கூறியதாவது: அமைச்சர் மூர்த்தியின் வடக்கு மாவட்ட தி.மு.க., எல்லைக்குள் நகர்ப் பகுதியான மேற்கு சட்டசபை தொகுதி இணைக்கப்பட்டது முதல் மூர்த்தியை மாநகராட்சி பகுதிக்குள் ஆதிக்கம் செலுத்திவிடக் கூடாது என நகர் செயலாளர் தளபதி, அமைச்சர் தியாகராஜன் தரப்பு காய் நகர்த்துகிறது. அமைச்சர் மூர்த்தி ஆதரவாளர் மேயராக வந்துவிட்டால் மாநகராட்சி கட்டுப்பாடும் அவரிடம் சென்றுவிடும் என அத்தரப்பு அச்சத்தில் உள்ளது.
சொத்துவரி முறைகேட்டை அடுத்து மதுரை புதிய மேயர் தேர்வு குறித்து தலைமை தற்போது தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இந்நிலையில் அமைச்சர் தியாகராஜன் தரப்பு சிபாரிசு கவுன்சிலருக்கு கல்வித் தகுதி எதிர்பார்க்கும் அளவுக்கு இல்லை. இதனால் மீண்டும் மேயர் தேர்வில் சர்ச்சை வந்துவிடக்கூடாது என கட்சி கவனமாக உள்ளது. இந்நிலையில், வரும் சட்டசபை தேர்தலில் மாவட்டத்தின் 10 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுத்தருவதாகவும், அதற்காக மேயர் பதவிக்கு தான் சிபாரிசு செய்யும் கவுன்சிலருக்கு வழங்க வேண்டும் எனவும் அதிரடியாக மூர்த்தி தரப்பு தெரிவித்துள்ளது. இதற்கு தி.மு.க., தலைமையும் 'கிரீன் சிக்னல்' கொடுத்துள்ளது. இதன் மூலம் தியாகராஜன் தரப்பு சிபாரிசுக்கு 'செக்' வைக்கப்பட்டுள்ளது என்றனர்.