ஜி.எஸ்.டி., சீர்திருத்தத்தால் முதலீட்டு செலவு குறையும்! கோவை தொழில்துறையினர் மனம் திறந்த வரவேற்பு
ஜி.எஸ்.டி., சீர்திருத்தத்தால் முதலீட்டு செலவு குறையும்! கோவை தொழில்துறையினர் மனம் திறந்த வரவேற்பு
ADDED : செப் 05, 2025 06:37 AM

கோவை: 'ஜி.எஸ்.டி., சீர்திருத்தம் காரணமாக, மூலப்பொருள் கொள்முதல் செலவு உட்பட முதலீட்டு செலவினங்கள் குறையும். அமெரிக்க வரி விதிப்பால், நெருக்கடிக்கு ஆளான துறைகள் மீட்சி பெறும்' என, தொழில் அமைப்புகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளன.
வலுவான பொருளாதார முன்னெடுப்பு
ராஜேஷ் லுந்த், தலைவர், இந்திய தொழில் வர்த்தக சபை கோவை: ஜி.எஸ்.டி., சீர்திருத்தத்தை வரவேற்கிறோம். வரி சீரமைப்பு நாட்டின் ஒட்டுமொத்த தொழில்சூழலை மேம்படுத்தி, பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கச் செய்யும் விதத்தில் உள்ளது. 5, 18 சதவீதம் என இரு பிரிவுகளை எளிமைப்படுத்தியிருப்பது, சிக்கல்களைத் தவிர்க்கும். காகிதம், தோல் பொருட்கள் துறையின் நுகர்வும் வளர்ச்சியும் அதிகரிக்கும்.
வேளாண் இடுபொருள் மீதான வரி குறைப்பு வேளாண் ஏற்றுமதியை ஊக்குவிக்கும். ஜவுளித்துறையின் ஒட்டுமொத்த மதிப்புச் சங்கிலியும் வலுவடையும். ஏற்றுமதியில் போட்டியிடும் திறனை மேம்படுத்தும். நுகர்வும் வளர்ச்சியும் அதிகரித்து பொருளாதார நடவடிக்கைகள் துாண்டப்படும். ஜி.எஸ்.டி., சீர்திருத்தங்களால், வர்த்தக சூழலை உகந்ததாக மாற்றியமைத்துள்ள மத்திய அரசுக்கு நன்றி.
உள்நாட்டு நுகர்வு அதிகரிக்கும்
சுந்தரராமன், தலைவர், சைமா: செயற்கை இழை ஜவுளி மதிப்புச் சங்கிலியில் வரலாற்றுச் சிறப்புமிக்க வரி சீர்திருத்தை அமல்படுத்திய பிரதமர் மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மத்திய அரசுக்கு நன்றி.
செயற்கை இழை மூலப்பொருட்களின் கட்டமைப்பு பிரச்னைக்கு தீர்வு, 7 நாட்களுக்குள், 90 சதவீத உள்ளீட்டு வரியை திரும்ப பெற வழிவகை, ஒட்டுமொத்த ஜவுளித்துறையையும் 5 சதவீத வரிவிதிப்புக் கீழ் கொண்டு வந்து, நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றியிருப்பது பெரும் பாராட்டுதலுக்குரியது. அமெரிக்காவின் வரிவிதிப்பு நெருக்கடி ஏற்பட்டுள்ள சரியான நேரத்தில், பிரதமர் எடுத்திருக்கும் துணிச்சலான முடிவு இது.
இதனால், மிகக் குறுகிய காலத்தில் உள்நாட்டு நுகர்வு 7 முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்கும். நுகர்வு அதிகரித்து, அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். அமெரிக்க வரிவிதிப்பு சவாலை எதிர்கொண்டுள்ள ஜவுளித்துறைக்கு, எளிதில் சமாளிக்க ஒரு வழிகாட்டலாக இருக்கும்.
வரவேற்கத்தக்க சீர்திருத்தம்
கார்த்திகேயன், தலைவர், கொடிசியா: நீண்ட கால எதிர்பார்ப்புகள் அறிவிப்பாகியுள்ளன. தனிநபர் காப்பீடு, மருத்துவக் காப்பீடுகளுக்கு வரி ரத்து மிகவும் வரவேற்கத்தக்கவை. சோலார் மீதான வரி குறைப்பு தொழில்துறையை வளர்ச்சியடையச் செய்யும்.
ஒட்டுமொத்தமாக தொழில்துறைக்கு நன்மை. அறிவிப்புகளின் மொத்த அம்சங்களும் முழுமையாக வெளியான பிறகு, இதுகுறித்து பேசுவது உசிதமாக இருக்கும்.
ஆட்டோமொபைல் துறைக்கு உந்துதல்
மிதுன் ராம்தாஸ், தலைவர், சீமா: வரவேற்கிறோம். புதிய விண்ணப்பங்களுக்கு ஒற்றைச் சாளர முறை ஒப்புதல் வர்த்தகம் செய்வதை எளிதாக்கும். எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்கல் பொருட்கள் மீதான வரி குறைப்பு வரவேற்கத்தக்கதும், தேவையான ஒன்றுமாகும். ஆட்டோமொபைல் மீதான வரி 40ல் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டிருப்பது, கோவையின் ஆட்டோ உதிரிபாக உற்பத்தித் துறைக்கு உந்துதலை அளிக்கும்.
தேவை அதிகரிப்பதால், பவுண்டரிகள் மற்றும் ஜாப் ஒர்க் நிறுவனங்கள் பயனடையும். அதேசமயம், எதிர்பார்க்கப்பட்ட அம்சமான விவசாய பம்ப்களுக்கு, 5 சதவீத ஜி.எஸ்.டி., அறிவிக்கப்பட வில்லை. ஜி.எஸ்.டி., கவுன்சில் மற்றும் மத்திய நிதியமைச்சர், இதுதொடர்பாக மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
மூலப்பொருள் செலவு குறையும்
அருள்மொழி, தலைவர், ஓஸ்மா: பாலியஸ்டர் விஸ்கோஸ் செயற்கை இழை மீதான வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டிருப்பது ஓ.இ., மில்களின் மூலப்பொருள் கொள்முதல் செலவைக் குறைக்கும். ஜவுளி துணி உற்பத்தியாளர்களுக்கும் பயனளிக்கும். வரும் நாட்களில் விஸ்கோஸ் பாலியஸ்டர் ஜவுளி ரகங்களின் உற்பத்தி அதிகரித்து, ஏற்றுமதி உயர்வுக்கு வழிவகுக்கும். அமெரிக்க வரிவிதிப்பால் தேக்கமடைந்த ஜவுளித்துறை மீண்டும் புத்துயிர் பெறும். இத்தகு பெருமாற்றத்தைக் கொண்டுவந்த பிரதமர் மோடி, மத்திய அரசுக்கு மனமார்ந்த நன்றி.
முதலீடு குறைவதால் நிம்மதி
ஜெயபால், தலைவர், ஆர்.டி.எப்.,: உணவு, உடை இரண்டையும் 5 சதவீத வரிவிதிப்புக்குள் கொண்டு வந்தது மகிழ்ச்சி. சிமென்ட், வேளாண் பொருட்களுக்கான வரிகுறைப்பு கட்டுமானத் துறையினர், வேளாண் துறையினருக்கு மனநிறைவை அளிக்கும். ஜவுளித்துறையில் பாலியஸ்டர் விஸ்கோஸ் மூலப்பொருட்களுக்கு 18, செயற்கை இழை நூலுக்கு 12 சதவீத வரிவிதிப்பால் மூலதனம் முடங்கி, பலர் தொழிலே செய்யாமல் வெளியேறினர்.
தற்போதைய வரி சீர்திருத்தத்தால், ரூ.1 லட்சத்துக்கு ரூ.13,000 வரை முதலீடு குறைந்து, தொழில்முனைவோருக்கு நிம்மதி அளித்துள்ளது. மின் கட்டணம் பெரும் சுமையாக உள்ள நேரத்தில், சோலார் மீதான வரி குறைப்பு தொழில்துறையினர் இடையே புதிய உத்வேகத்தை அளித்துள்ளது.
போட்டித்திறன் அதிகரிக்கும்
பிரபு தாமோதரன், கன் வீனர், ஐ.டி.எப்.,: பெரும்பான்மையான பொருட்களுக்கு ஜி.எஸ்.டி., குறைப்பு, வரி மாறுபாட்டை நீக்குதல் மற்றும் எளிதாக்கப்பட்ட நடைமுறைகள் நுகர்வை அதிகரிக்கவும், தொழில்துறையின் போட்டித்திறனை வலுப்படுத்தவும் உதவும்.
அனைத்து ஏற்றுமதி சந்தைகளிலும், இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதியில் பருத்தி உடைகளின் பங்கு 10-12 சதவீதம் என்ற அளவில் இருப்பினும், செயற்கை இழை உடைகளில் வெறும் 2-3 சதவீதம் மட்டுமே உள்ளது. மிகப்பெரிய வளர்ச்சி வாய்ப்புள்ள இந்த துறையில் வரி சீர்திருத்தம் செய்யப்படுவதால், இந்திய செயற்கை இழை ஆடை துறையின் போட்டித்திறன் பெரிதும் அதிகரிக்கும். இந்த தீர்க்கமான சீர்திருத்தங்களுக்கு அரசுக்கும், ஜி.எஸ்.டி., கவுன்சிலுக்கும் மனமார்ந்த நன்றி.
முதலீட்டு செலவு குறையும்
பிரதீப், தலைவர், டேக்கா: காகிதம், காகித அட்டைகள் போன்றவற்றின் மீதான வரி குறைப்பு, தொழில்துறையின் சிப்பமிடல் செலவுகளை வெகுவாகக் குறைக்கும். தொழில்துறையினர் மின் உற்பத்தியில் கவனம் செலுத்தி வரும் நிலையில், சோலார் பேனல், பி.வி., செல், காற்றாலைகளின் மீதான வரிகுறைப்பு உத்வேகம் அளிக்கும். இத்துறையில் முதலீட்டு செலவு 7 முதல் 8 சதவீதம் வரை குறையும். பசுமை எரிசக்தித் துறை வளர்ச்சி பெறும். பல்வேறு பொருட்கள் மீதான வரி குறைப்பு மக்களின் வாங்கும் திறனை அதிகரிக்கும் என்பதால், 2-3 சதவீத கூடுதல் பொருளாதார வளர்ச்சியை எதிர்பார்க்கலாம். ஒட்டுமொத்தமாக வரவேற்கிறோம்.
விவசாயிகளுக்கு மகிழ்ச்சி
பெருமாள், தேசிய துணைத்தலைவர், பாரதீய கிசான் சங்கம்: வேளாண் பயன்பாட்டுக்கான டிராக்டர் டயர்கள், டிராக்டர், உயிரி பூச்சிக்கொல்லி, நுண்ணுாட்ட சத்து உள்ளிட்ட இடுபொருட்கள், சொட்டுநீர், தெளிப்பு நீர் பாசன அமைப்பு, இயந்திரங்கள் மற்றும் கருவிகளுக்கான வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டிருப்பது பெரு மகிழ்ச்சிக்குரியது.
விவசாயி, உள்ளீட்டு வரியை எடுக்க இயலாது என்பதால், வேளாண் சார் மற்றும் இடுபொருட்களுக்கு ஜி.எஸ்.டி.,யை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.