ஹரியானா தேர்தல்: கவனத்தை ஈர்த்துள்ள மாயாவதி - சவுதாலா கூட்டணி
ஹரியானா தேர்தல்: கவனத்தை ஈர்த்துள்ள மாயாவதி - சவுதாலா கூட்டணி
ADDED : ஆக 29, 2024 12:42 AM

ஹரியானா சட்டசபை தேர்தலில், தேசிய கட்சிகளான பா.ஜ., - காங்., - ஆம் ஆத்மி ஆகியவை எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்காத நிலையில், அங்கு உருவாகியுள்ள இரண்டு புதிய கூட்டணிகள், கவனத்தை ஈர்த்துள்ளன.
ஹரியானாவில் 90 சட்டசபை தொகுதிகளுக்கு, அக்., 1ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. தற்போது ஆளும் பா.ஜ.,வை தவிர, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மியும் நேரடியாக களமிறங்கியுள்ளன.
அதே நேரத்தில் முன்னாள் துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலாவின் ஜனநாயக ஜனதா கட்சி மற்றும் சந்திரசேகர ஆசாதின் ஆசாத் சமாஜ் கட்சி ஆகியவை கூட்டணி அமைத்துள்ளன. சவுதாலாவின் கட்சி 70 இடங்களிலும், ஆசாத் சமாஜ் கட்சி 20 தொகுதிகளிலும் போட்டியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உத்தரவு
மாநிலத்தில், தலித் மக்கள் தொகை 21 சதவீதமாக உள்ளது. கிட்டத்தட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கக்கூடிய இடத்தில் தலித்துகள் உள்ளனர். இங்கு, 17 தொகுதிகள் எஸ்.சி., பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ், இந்திய தேசிய லோக் தளம், அதில் இருந்து பிரிந்து உருவான ஜனநாயக ஜனதா கட்சி ஆகியவை தலித் மக்களின் ஆதரவை பெறுவதற்காக, இதற்கு முன், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியை நம்பியிருந்தன. தற்போது மாயாவதியின் கட்சி, உத்தர பிரதேசத்திலேயே செல்வாக்கை இழந்துவிட்டது.
இந்நிலையில், பீம் சேனா தலைவராக இருந்த சந்திரசேகர ஆசாத் துவக்கிய ஆசாத் சமாஜ் கட்சி தற்போது அந்த இடத்தை நிரப்பி வருகிறது. சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், சந்திரசேகர ஆசாத், உத்தர பிரதேசத்தின் நாகினாவில் வென்றார். தலித் மக்களின் முகமாக தன்னை அவர் முன்னிறுத்தி வருகிறார்.
சவால்
கடந்த சட்டசபை தேர்தலில், 10 இடங்களில் வென்று ஜனநாயக ஜனதா கட்சி, கிங் மேக்கராக இருந்தது. பா.ஜ.,வுக்கு ஆதரவு அளித்து, ஆட்சியிலும் பங்கேற்றது. துஷ்யந்த் சவுதாலா, துணை முதல்வராக இருந்தார். ஆனால், லோக்சபா தேர்தலுக்கு முன், கூட்டணி உடைந்தது. இதன்பின், கட்சியில் இருந்து ஏழு எம்.எல்.ஏ.,க்கள் வெளியேறிவிட்டனர்.
இதனால், கட்சி கலகலத்துள்ளது. அதனால், முந்திக் கொண்டு, ஆசாத் சமாஜ் கட்சியுடன், ஜனநாயக ஜனதா கட்சி கூட்டணியை அமைத்துள்ளது. இதற்கிடையே ஓம்பிரகாஷ் சவுதாலாவின் இந்திய தேசிய லோக் தளமும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்துள்ளன. இந்த இரண்டு கூட்டணிகளும், பா.ஜ., - காங்., மற்றும் ஆம் ஆத்மிக்கு பெரும் சவாலாக இருக்கும் என்று பேசப்படுகிறது.
- நமது சிறப்பு நிருபர் -

