அரசியலில் 30 நாளை தாண்ட மாட்டார்; விஜய்க்கு ராஜேந்திர பாலாஜி சாபம்
அரசியலில் 30 நாளை தாண்ட மாட்டார்; விஜய்க்கு ராஜேந்திர பாலாஜி சாபம்
ADDED : அக் 19, 2024 06:48 AM

''இன்றைக்கு சுள்ளான்கள் எல்லாம் வந்து, அடுத்த எம்.ஜி.ஆர்., நான்; அடுத்த முதல்வர் நான் தான் என, சொல்கின்றனர். அவர்கள் சொல்வது ஒரு காலமும் நடக்காது,'' என, நடிகர் விஜயை விமர்சித்து, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார்.
விருதுநகர் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி சார்பில், அ.தி.மு.க.,வின் 53வது ஆண்டு விழா பொதுக்கூட்டம் திருத்தங்கலில் நடந்தது.
அதில், ராஜேந்திர பாலாஜி பேசியதாவது: லட்சக்கணக்கான தொண்டர்களின் வியர்வையிலும், ரத்தத்திலும் வளர்ந்த மலர் தான் அ.தி.மு.க., இயக்கம். ஆனால், தி.மு.க.,வில் உழைப்பவர்களும் இல்லை; உழைப்பவர்களுக்கு மரியாதையும் இல்லை. அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்ட தி.மு.க., ஆட்சி வேண்டுமா என்பதை, மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
இன்றைக்கு சுள்ளான்கள் எல்லாம் வந்து, அடுத்த எம்.ஜி.ஆர்., நான் தான் என்கின்றனர்; அடுத்தது நான் தான் முதல்வர் என்கின்றனர். அதெல்லாம் ஒரு காலமும் நடக்காது. அடுத்த முதல்வர் பழனிசாமி தான்.
இது திராவிட பூமி. சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கும், தி.மு.க.,வுக்கும் இடையே தான் போட்டியே இருக்கும். பா.ஜ., காங்கிரஸ் கட்சிகள் கூட சீனில் கிடையாது. அப்படி இருக்கையில், புதிதாக வந்தவரெல்லாம் உள்ளே நுழைய முடியுமா?
அரசியலுக்கு புதிதாக வரக்கூடியவர்கள் எல்லாம், 30 நாட்களை தாண்ட முடியாது. அவர்களால் பிரச்னையை சந்திக்க முடியாது. மக்கள் கேட்கிற கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது.
தி.மு.க.,வில் மன்னர் ஆட்சி போல் பரம்பரை பரம்பரையாக, ஒரு குடும்பமே ஆதிக்கம் செலுத்துகிறது. முதல்வர் ஸ்டாலினை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்; பழனிசாமியை கோட்டைக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
- நமது நிருபர் -

