சிவில் பிரச்னையில் கட்டப்பஞ்சாயத்து கூடாது; போலீசுக்கு உயர்நீதிமன்றம் கண்டிப்பான உத்தரவு
சிவில் பிரச்னையில் கட்டப்பஞ்சாயத்து கூடாது; போலீசுக்கு உயர்நீதிமன்றம் கண்டிப்பான உத்தரவு
UPDATED : நவ 06, 2025 08:18 AM
ADDED : நவ 06, 2025 08:07 AM

மதுரை: சிவில் பிரச்னையில் போலீஸ் அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ளக்கூடாது. மீறினால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
சிவில் வழக்குகளில் விசாரணை என்ற பெயரில் போலீசார் தொந்தரவு செய்யக்கூடாது என உத்தரவிடக்கோரி சில வழக்குகள் தாக்கலாகின.
நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவு: இவ்வகையான பிரச்னைகளை தீர்க்க சிவில் நீதிமன்றங்கள் உள்ளன. இருப்பினும், தனி நபர்கள் போலீசில் புகார் அளிப்பதன் மூலம் தங்களுக்கு சேர வேண்டிய பணத்தை வசூலிக்க ஒரு எளிதான வழிமுறையை கண்டுபிடித்துள்ளனர்.
சிவில் வழக்குகளை போலீசார் விசாரிப்பதை காவல்துறை நிலை ஆணை தடை செய்கிறது. சிவில் தகராறுகளை போலீசார் விசாரிக்கக்கூடாது என உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் பல உத்தரவுகள் பிறப்பித்துள்ளன. இதனடிப்படையில் டி.ஜி.பி.,சுற்றறிக்கை வெளியிட்டார். இது சிவில் பிரச்னையை போலீசார் விசாரிப்பதை தடை செய்கிறது.
சிவில் பிரச்னையில் மத்தியஸ்தம் செய்யவோ, விசாரணை என்ற பெயரில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு சம்மன் அனுப்பவோ போலீஸ் அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை என ஏ.டி.ஜி.பி., சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.
காகித விசாரணை
அரசு தரப்பில்,' இதில் ஒவ்வொரு வழக்கும் தனியார் நிதி பரிவர்த்தனைகள் அல்லது விற்பனை ஒப்பந்தங்களுடன் தொடர்புடையவை. இருப்பினும், மக்களிடமிருந்து பெறப்பட்ட புகார்களை அதிகாரிகள் பரிந்துரைத்ததன் பேரில் 'காகித சரிபார்ப்பு' என்ற பெயரில் விசாரணை நடக்கிறது. வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை,' என தெரிவித்தது.
மோசடி, துஷ்பிரயோகம் அல்லது மிரட்டல் போன்ற குற்ற அம்சங்களை வெளிப்படுத்தும் வகையில் முதல் பார்வை நோக்கில் புகார் இல்லாதவரை, முற்றிலும் சிவில் வழக்குகளில் போலீசார் தலையிடக்கூடாது. தற்போதைய வழக்குகளில் அத்தகைய அம்சங்கள் எதுவும் இல்லை. இதையும் மீறி, போலீசார் 'காகித விசாரணை' நடைமுறையை மேற்கொண்டுள்ளனர்.
போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிப்பதற்கு பதிலாக, நேரடியாக உயரதிகாரிகளிடம், அதாவது எஸ்.பி., போலீஸ் கமிஷனரிடம் அளிக்கப்படுகிறது. புகார்களை போலீசார் விசாரிக்க முடியுமா அல்லது பிரச்னைக்கு சிவில் நீதிமன்றங்களில் தீர்வு காண வேண்டுமா என்பதை உறுதிப்படுத்தாமல், அவர்கள் தபால்காரர்களைப் போல இயந்திரத்தனமாக அனுப்பி வைக்கின்றனர்.
ஏஜன்ட்கள் போல்
சிவில் விவகாரங்களில் போலீஸ் அதிகாரிகள் தனிநபர்களை தொந்தரவு செய்வதாகக்கூறி பல மனுக்கள் இந்நீதிமன்றத்தில் மீண்டும், மீண்டும் தாக்கலாகிறது. போலீசார் பொறுப்பு, கடமைகளை மறந்து இதுபோன்ற கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபடுவது தெரிகிறது. இம்மனுக்களை பரிசீலிப்பது என்பது, சீருடையிலுள்ள போலீசார் நிதி பரிவர்த்தனைகளில் சொத்துக்களை மீட்கும் ஏஜன்ட்கள்போல் செயல்படுவது வருத்தமளிக்கிறது.
மீறினால் நடவடிக்கை
மாநிலம் முழுவதும் கீழ்க்கண்ட ஒரே மாதிரியான வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும். பணம், சொத்து அல்லது ஒப்பந்தங்கள் போன்ற சிவில் பிரச்னையில் போலீஸ் அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ளக்கூடாது. 'காகித விசாரணை' நடைமுறைக்கு எவ்வித சட்டப்பூர்வ அங்கீகாரமும் இல்லை. அதை உடனடியாக நிறுத்த வேண்டும்.
வழக்கு (எப்.ஐ.ஆர்.,) பதிவு செய்த பின்னரே சம்மன் அல்லது நோட்டீஸ் அனுப்ப வேண்டும். ஆரம்பகட்ட அல்லது மனு மீதான விசாரணையின்போது ஒருபோதும் வழங்கக்கூடாது. ஒரு புகாரில் முதல் பார்வை நோக்கில் குற்றவியல் நடவடிக்கைக்குரிய குற்றத்தை வெளிப்படுத்தினால், போலீசார் உடனடியாக வழக்கு பதிந்து விசாரணையை தொடர வேண்டும்.
மற்ற எல்லா வழக்குகளிலும் புகார்தாரர்களிடம் தகுந்த சிவில் நீதிமன்றம் அல்லது அமைப்பை அணுகுமாறு அறிவுறுத்த வேண்டும். இந்த உத்தரவு, ஏற்கனவே வெளியிட்ட சுற்றறிக்கைகளை காவல்துறையின் அனைத்து பிரிவுகளுக்கும் டி.ஜி.பி.,அனுப்ப வேண்டும். இந்த வழிகாட்டுதல்களை எந்தவொரு போலீஸ் அதிகாரியும் மீறினால், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
அனைத்து மனுக்களும் பைசல் செய்யப்படுகின்றன. சிவில் பிரச்னையில் போலீசார் விசாரணை என்ற போர்வையில் மனுதாரர்கள் அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு சம்மன் அனுப்ப அல்லது தொந்தரவு செய்யவோ கூடாது. இவ்வாறு உத்தரவிட்டார்.

