/
செய்திகள்
/
ப்ரீமியம்
/
ராகுல் மீண்டும் 'கிச்சுகிச்சு'.. 25 லட்சம் ஓட்டுகள் திருடப்பட்டதாக புகார்: ஹரியானாவில் வெற்றியை தட்டி பறித்ததாக பா.ஜ., மீது குற்றச்சாட்டு
/
ராகுல் மீண்டும் 'கிச்சுகிச்சு'.. 25 லட்சம் ஓட்டுகள் திருடப்பட்டதாக புகார்: ஹரியானாவில் வெற்றியை தட்டி பறித்ததாக பா.ஜ., மீது குற்றச்சாட்டு
ராகுல் மீண்டும் 'கிச்சுகிச்சு'.. 25 லட்சம் ஓட்டுகள் திருடப்பட்டதாக புகார்: ஹரியானாவில் வெற்றியை தட்டி பறித்ததாக பா.ஜ., மீது குற்றச்சாட்டு
ராகுல் மீண்டும் 'கிச்சுகிச்சு'.. 25 லட்சம் ஓட்டுகள் திருடப்பட்டதாக புகார்: ஹரியானாவில் வெற்றியை தட்டி பறித்ததாக பா.ஜ., மீது குற்றச்சாட்டு
ADDED : நவ 06, 2025 06:25 AM

பீஹாரில் இன்று தேர்தல் நடக்கும் சூழலில், தேர்தல் ஆணையம் மீது காங்., - எம்.பி., ராகுல் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார். 2024ல் நடந்த ஹரியானா சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு கிடைக்க வேண்டிய வெற்றியை, பா.ஜ.,வுக்கு சாதகமாக தேர்தல் ஆணையம் மாற்றிவிட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
'தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உட்பட ஒன்பது மாநிலங்கள், மூன்று யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி நடத்தப்படும்' என, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஓட்டுப்பதிவு
இந்தச் சூழலில் ஓட்டு திருட்டு குற்றச்சாட்டு மீண்டும் எழுந்துள்ளது.
லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரும், காங்., - எம்.பி.,யுமான ராகுல், ஓட்டு திருட்டு குற்றச்சாட்டை நேற்று மீண்டும் எழுப்பினார்.
டில்லியில் உள்ள காங்., தலைமையகத்தில், 'ஹெச் பைல்ஸ்' என்ற பெயரில், 2024 ஹரியானா சட்டசபை தேர்தலில், 25 லட்சம் ஓட்டுகள் திருடப்பட்டதாக ராகுல் புகார் எழுப்பியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
ஹரியானாவில் நடந்த சட்டசபை தேர்தலில், 25 லட்சம் ஓட்டுகள் திருடப்பட்டுள்ளன.
அதில், 5.21 லட்சம் பேர் போலி வாக்காளர்கள், 93,174 பேர் தகுதியற்ற வாக்காளர்கள், 19.26 லட்சம் பேர் ஒரே பெயரில் பல இடங்களில் ஓட்டுப்பதிவு செய்துள்ளனர். ஹரியானாவில், எட்டு வாக்காளர் களில் ஒருவர் போலியானவர்.
இந்த ஓட்டு திருட்டு தனியாக ஒரு தொகுதியில் மட்டும் நடக்கவில்லை. மாநில மற்றும் தேசிய அளவில் நடந்துள்ளது.
ஹரியானாவில் உள்ள ராய் ஓட்டுச்சாவடியில், ஒரு போலி வாக்காளர், 22 முறை ஓட்டளித்துள்ளார். இத்தனைக்கும் அவர் இந்தியர் கூட அல்ல; பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாடல் மேத்யூஸ் பெரேரோவின் பெயரில் கள்ள ஓட்டு போடப்பட்டுள்ளது.
அதே போல் ஹரியானா வாக்காளர் பட்டியலில், 223 இடங்களில் ஒரே பெண்ணின் பெயர் இடம் பெற்றுள்ளது. உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பா.ஜ., தலைவர்கள் சிலர், ஹரியானா சட்டசபை தேர்தலில் ஓட்டளித்து உள்ளனர்.
வாக்காளர் பட்டியலில் இருந்த போலி வாக்காளர்களின் பெயர்களை தேர்தல் ஆணையம் ஏன் நீக்கவில்லை? ஏனெனில், பா.ஜ., வெற்றி பெற வேண்டும். அதற்காகவே தேர்தல் ஆணையம் உதவி செய்து இருக்கிறது.
கவலை வேண்டாம்
ஹரியானாவில் நடத்தப்பட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில், காங்., மாபெரும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பா.ஜ., வெற்றி பெற்றது.
கடந்த 2024, அக்., 6ம் தேதி ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி பேசிய வீடியோவில், 'மாநிலத்தில் பா.ஜ., ஆட்சி அமைப்பதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார்; கவலை வேண்டாம்' என கூறியிருக்கிறார்.
சைனி குறிப்பிட்ட ஏற்பாடுகள் என்ன; அதை குறிப்பிடும்போது அவரது முகத்தில் ஒரு மர்ம புன்னகை பூத்தது. அதற்கான அர்த்தம் என்ன?
ஹரியானாவில் மொத்தம் இரண்டு கோடி வாக்காளர்கள் உள்ளனர். எனினும், 28 லட்சம் போலி வாக்காளர்களின் உதவியுடன், கடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது.
ஹரியானா மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் இருந்து காங்., வாக்காளர், 3.50 லட்சம் பேரை தேர்தல் ஆணையம் நீக்கி இருக்கிறது. இவர்களில் பெரும்பாலானோர், 2024 லோக்சபா தேர்தலில் ஓட்டளித்தவர்கள்.
தேர்தல் நடக்கும் பீஹாரிலும் ஓட்டு திருட்டு நடக்கும். அதைப்பற்றி பின்னர் விளக்குகிறோம். கடைசி நேரத்தில் தான் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி நடந்தது. இதனால், எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை.
நம் நாட்டின் அரசமைப்பு சட்டம் மற்றும் ஜனநாயகத்தை படுகொலை செய்வதற்காகவே, இந்த முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .
இவ்வாறு அவர் கூறினார்.
-- நமது சிறப்பு நிருபர் -

