ADDED : நவ 06, 2025 08:16 AM

நமது சிறப்பு நிருபர்
வந்தே மாதரம்' தேசியப் பாடலின் 150வது ஆண்டு விழா நாளை (நவ. 7) துவங்குகிறது.
இந்தியாவின் தேசியப்பாடலான 'வந்தே மாதரம்' பாடலை இயற்றியவர் கவிஞர் பங்கிம் சந்திர சட்டர்ஜி. முதல் இரண்டு வரிகள் சமஸ்கிருதத்திலும், அடுத்த வரிகள் வங்க மொழியிலும் எழுதப்பட்டன. 1882ல் இவரின் 'ஆனந்தமடம்' நாவலில் இப்பாடல் இடம் பெற்றது. இதை முதன்முதலாக 1896ல் கோல்கட்டா காங்., மாநாட்டில் வங்க கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் இசையமைத்து பாடினார்.
இப்பாடல் சுதந்திர போராட்ட களத்தில் உத்வேகம் அளித்தது. சுதந்திரத்துக்குப்பின் 1950 ஜன. 24ல் அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு தேசியப்பாடலாக அமலுக்கு வந்தது. தேசிய கீதமான 'ஜன கண மன' பாடலுக்கு நிகராக மதிக்கப்படுகிறது. சுதந்திரம், குடியரசு தினம், விளையாட்டு, ராணுவ நிகழ்ச்சிகளில் பாடப்படுகிறது.
கவிதை ஆர்வம்
'வந்தே மாதரம்' பாடலை எழுதிய பங்கிம் சந்திர சட்டர்ஜி 1838 ஜூன் 26ல் மேற்கு வங்க தலைநகர் கோல்கட்டா அருகே நைஹாட்டியில் பிறந்தார். இவரது தந்தை சப் கலெக்டராக பணியாற்றியவர்.இவருக்கு மூன்று சகோதரர்கள். படிக்கும் போதே கவிதைகள் எழுதினார். 1859ல் பி.ஏ., 1869ல் சட்டப் படிப்பு முடித்தார். அரசுப்பணியில் சேர்ந்தார். இவர் எழுதிய முதல் நாவல் 'துர்கேஷ் நந்தினி' 1865ல் வெளியானது.
பின் ஆனந்த மடம், கபால குண்டலா, பிஷ்பிரிக்சா உள்ளிட்ட பல்வேறு கதை, கட்டுரை, கவிதைகளை இயற்றினார். இலக்கியத்தின் வாயிலாக இந்திய கலாசாரத்தின் பெருமைகளை மக்களுக்கு உணர்த்தினார். 1872ல் 'வங்க தர்ஷன்' இதழை தொடங்கினார். இவரது படைப்புகள் பல்வேறு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டன. 1894ல் காலமானார். இவர் வசித்த மாளிகை 'பங்கிம் பவன்' என்ற பெயரில் சீரமைக்கப்பட்டது. இதில் நுாலகம், ஆய்வகம், கூட்ட அரங்கம் உள்ளன.
ஆங்கிலேயருக்கு அச்சம்
பங்கிம் சந்திர சட்டர்ஜி ஒரு முறை துர்கா பூஜை விடுமுறையில் கோல்கட்டாவில் இருந்து சொந்த ஊருக்கு (கந்தலபதா) ரயிலில் சென்றார். தேச சிந்தனையில் ஆழ்ந்திருந்த அவர் மனதை பசுமையான வயல்வெளி, நதிகள் கொள்ளை கொண்டன. அத்தருணத்தில் அவருக்கு தோன்றியதுதான் 'வந்தே மாதரம் ஸுஜலாம், ஸுபலாம்' என தொடங்கும் பாடல்.
இது முதன் முதலில் 1875ல் அவரது 'பங்க தர்ஷன்' நாளிதழில் வெளியானது.
* மத ரீதியாக மக்களை பிரிக்கும் நோக்கில் ஆங்கிலேயர் 1905ல் வங்காளத்தை இரண்டாக பிரிக்கும் 'வங்கப்பிரிவினை'யை அறிவித்தனர். இதை எதிர்த்து கோல்கட்டா டவுன்ஹாலில் ஒன்றிணைந்த 40 ஆயிரம் பேர் 'வந்தே மாதரம்' பாடி போராட்டம் நடத்தினர். இதைக்கண்டு அஞ்சிய கவர்னர் கர்சன், பாடலை பாடிய அனைவரையும் கைது செய்ய உத்தரவிட்டார். 'வந்தே மாதரம்' பாடவும் தடை விதித்தார்.
மந்திர சொல்
* மகாத்மா காந்தி எழுதும் கடிதங்களின் தலைப்பில் 'வந்தே மாதரம்' என குறிப்பிட தொடங்கினார்.
* 'ஆனந்த மடம்' நாவலை முதலில் (1906ல்) ஆங்கிலத்தில் (தி அபே ஆப் பிளிஸ்) மொழி பெயர்த்தவர் கோல்கட்டாவின் நரேஷ் சந்திர சென் குப்தா.
* 'வந்தே மாதரம்' என்பது தேசபக்தியை ஊக்குவிக்கும் மந்திர சொல் என்ற ஸ்ரீ அரவிந்தர், 1909ல் இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.
* 1905ல் ஹிரலால் சென் இயக்கிய 'வங்கப்பிரிவினை எதிர்ப்பு, சுதேசி இயக்கம்' தொடர்பான ஆவணப்படம், 'வந்தே மாதரம்' பாடலுடன் முடிவடையும்.
* 'வந்தே மாதரம்' பெயரில் 1939, 1985ல் தெலுங்கு 1948ல் மராத்தியில் படங்கள் வெளியாகின.
* 50வது சுதந்திர தினத்தில் (1997) ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான 'மா துஜே சலாம்' (தமிழில் 'தாய் மண்ணே வணக்கம்) பாடலில் 'வந்தே மாதரம்' வார்த்தை இடம் பெற்றது.

