ஜெ., அறையில் கிடைத்த ரகசிய ஆவணங்களை நானே எரித்தேன்: தினகரன்
ஜெ., அறையில் கிடைத்த ரகசிய ஆவணங்களை நானே எரித்தேன்: தினகரன்
ADDED : நவ 07, 2025 04:37 AM

சென்னை: “ஜெயலலிதா மறைவுக்கு பின், அவரது அறையில் இருந்து, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்களின் ரகசிய ஆவணங்களை கைப்பற்றினோம்,” என, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி:
அ.தி.மு.க., கடந்த காலங்களில் பிளவை சந்தித்தபோது, தன்னை விமர்சித்தவர்களை ஜெயலலிதா மீண்டும் அரவணைத்து வழிநடத்தினார்; அதுபோல தலைமை இருக்க வேண்டும்.
பழனிசாமிக்கு தலைவருக்கான தகுதி இல்லை. கடந்த 2017ல், பழனிசாமி ஆட்சி அமைக்க நாங்கள் தான் காரணம். அவருடைய துரோகத்தால் அ.ம.மு.க., உருவானது.
ஜெயலலிதா மறைவுக்கு பின், அவரது அறையில் இருந்து, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்களின் ரகசிய ஆவணங்களை கைப்பற்றினோம்.
அதை படித்துவிட்டு நானே தீயிட்டு எரித்தேன். அதுபோன்ற ரகசிய ஆவணங்கள், கோடநாட்டிலும் இருக்கலாம் என்ற எண்ணத்தில், பழனிசாமி தேடினார்.
அதை வைத்து நாங்கள் மிரட்டுவோம் என்ற பயத்தில், அங்கு பூட்டை உடைத்து பல சம்பவங்களை அரங்கேற்றி உள்ளனர்.
பழனிசாமியை வீழ்த்தாமல் ஓயமாட்டேன். ஒருபோதும் பழனிசாமியுடன் சேர மாட்டேன். பழனிசாமி தலைமையிலான கூட்டணி, வரும் தேர்தலில் விஜயால் மூன்றாவது இடத்துக்கு செல்லும்; தேர்தலில், தி.மு.க., - த.வெ.க., இடையே தான் போட்டி இருக்கும்.
விஜய் தலைமையில் சரியான கூட்டணி அமைந்தால், அது கடுமையான போட்டியாக இருக்கும்.
பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள், எங்களிடம் கூட்டணிக்காக அணுகினர். எங்களை தவிர்த்து விட்டு, எந்த கூட்டணியும் வெற்றி பெற முடியாது. எங்களை தி.மு.க.வின், 'பி டீம்' என விமர்சிக்கின்றனர். உண்மையில், எங்களை இயக்குவதே பழனிசாமிதான்.
இவ்வாறு அவர் கூறினார்.

