கொங்குமண்டலத்தில் தி.மு.க., வெற்றி எப்படி? நேர்காணலுக்கு வந்தவர்களிடம் ஸ்டாலின் கேள்வி
கொங்குமண்டலத்தில் தி.மு.க., வெற்றி எப்படி? நேர்காணலுக்கு வந்தவர்களிடம் ஸ்டாலின் கேள்வி
ADDED : மார் 20, 2026 06:12 AM

- நமது நிருபர் -
கொங்கு மண்டல தொகுதிகளில், தி.மு.க.,வுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என, வேட்பாளர் நேர்காணலுக்கு வந்த தி.மு.க.,வினரிடம், முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். இதையடுத்து, 'அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டுமானால், கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்க வேண்டாம்' என, நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், வரும் 30ம் தேதி துவங்குகிறது. எனவே, கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சை நடத்தி வருவதோடு, தி.மு.க., சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம், தி.மு.க., தலைமை நேர்காணல் நடத்தி வருகிறது.
புதுச்சேரியில், ஏப்.,9ல் தேர்தல் நடப்பதால், முதலில், அம்மாநிலத்தில் இருந்து விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, தென் மாவட்டங்களில் உள்ள 22 தொகுதிகளுக்கு நேர்காணல் நடந்தது. நேற்று மூன்றாம் நாளாக, கொங்கு மண்டலத்தை சேர்ந்த கரூர், நாமக்கல், ஈரோடு, கோவை, நீலகிரி மாவட்ட தொகுதிகளுக்கு, வேட்பாளர் நேர்காணல் நடந்தது.
நேர்காணலுக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமை வகித்தார். தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன், பொருளாளர் பாலு, முதன்மை செயலர் நேரு, அமைப்பு செயலர் பாரதி மற்றும் அந்தந்த மாவட்ட பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.
நேர்காணலில் பங்கேற்றவர்களிடம், “அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி அமைந்த பின், கொங்கு மண்டலத்தில் தி.மு.க., வெற்றி எப்படி இருக்கிறது; நடிகர் விஜயின் த.வெ.க., வரவினால், தி.மு.க., வெற்றிக்கு பாதிப்பு உண்டா; கரூர் உயிரிழப்பு சம்பவத்திற்கு பின், தொகுதிகளின் நிலவரம் எப்படி உள்ளது; இளைஞர்கள் ஓட்டுகள், தி.மு.க., வுக்கு சாதகமாக உள்ளதா'' என, சரமாரியான கேள்விகளை, முதல்வர் ஸ்டாலின் கேட்டுள்ளார்.
இதையடுத்து, அவருக்கு பதிலளித்த கட்சியினர் மற்றும் நிர்வாகிகள், “கொங்கு மண்டலத்தில், அ.தி.மு.க., - பா.ஜ., போட்டியிடும் தொகுதிகளில், த.வெ.க.,வும் போட்டியிடுவதால், தி.மு.க.,வுக்கு சாதகமாக இருக்கும் என கருதக் கூடாது. பாதகமாக அமைய வாய்ப்பு உள்ளது. எனவே, அ.தி.மு.க., - பா.ஜ., வை எதிர்த்து, தி.மு.க., தான் போட்டியிட வேண்டும். கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கக் கூடாது,” என வலியுறுத்தி உள்ளனர்.

