கல்லத்தி மரத்தில் தர்கா கொடியை அகற்றாவிட்டால் பக்தர்கள் திரண்டு அகற்றும் நிலை ஏற்படும்: எச்.ராஜா
கல்லத்தி மரத்தில் தர்கா கொடியை அகற்றாவிட்டால் பக்தர்கள் திரண்டு அகற்றும் நிலை ஏற்படும்: எச்.ராஜா
UPDATED : ஜன 13, 2026 05:26 AM
ADDED : ஜன 13, 2026 05:21 AM

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கோயிலுக்கு சொந்தமான கல்லத்தி மரத்தில் தர்கா கொடியை அகற்றாவிட்டால், முருக பக்தர்கள் திரண்டு அகற்றும் நிலை ஏற்படும்,'' என பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா எச்சரிக்கை விடுத்தார்.
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த அவர் கூறியதாவது:
பிரதமர் மோடி ஜன., 23ல் தமிழகம் வருகிறார். அன்றைய தினம் தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசாரத்தை அவர் முறைப்படி துவக்கி வைக்கிறார்.
தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வேண்டி திருப்பரங்குன்றம் முருகப் பெருமானிடமும், காசி விஸ்வநாதரிடமும் ஆசி பெறுவதற்காக வந்திருக்கிறேன்.
நீதிமன்றம் வழங்கிய உத்தரவின்படி, தீபத்துாணில் தீபம் ஏற்றப்பட்டிருக்க வேண்டும். அன்று நான் இங்கு வந்திருந்தேன். அப்போது ஒரு போலீஸ் அதிகாரி யார் என்று ஞாபகம் இல்லை, அவர் 'என்ன... ஒன் மோர் கன்டம்ப்ட்' என சொன்னார். எனவே கோர்ட்டை அவமதித்த கலெக்டர், கமிஷனர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விடுதலை சிறுத்தைகள் நிர்வாகி ஒருவர், பிரதமர் மோடி மதுரைக்கு வரும்போது அவரது வாகனத்தை தாக்குவேன் என்று கூறியிருக்கிறார். அந்த தீய சக்தியை கைது செய்யவில்லை. மாவட்ட நிர்வாகம் ஹிந்துக்களுக்கு எவ்வளவு துாரம் விரோதமாக உள்ளது.
கோயிலுக்கு சொந்தமான கல்லத்தி மரத்தில் உள்ள தர்கா சந்தனக்கூடு கொடியை உடனடியாக அகற்றாவிட்டால், முருக பக்தர்கள் திரண்டு வந்து அதை அகற்றும் நிலை ஏற்படும் என எச்சரிக்கிறேன்.
ஹிந்துக்களின் புனிதமான தீபத்துாண் குறித்து, சட்டமே தெரியாத சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, பிணம் எரிக்கும் இடத்தில் தான் பிணத்தை எரிப்பார்கள் என சொல்லியிருக்கிறார்.
தைப்பூசம், கார்த்திகை நட்சத்திரம் வரும். அதற்குள் தீபம் ஏற்ற வேண்டும். அப்படி இல்லையென்றால் இது தேர்தல் பிரச்னையாக மாறி தி.மு.க., கூட்டணியை வீட்டுக்கு அனுப்ப ஹிந்துக்கள் முடிவு செய்வார்கள்.கல்லத்தி மரத்தில் அவர்கள் கொடி கட்டும்போது காவல்துறை என்ன செய்து கொண்டிருந்தது.
வைகோவிற்கு நடை பயணம் ஒரு பழக்கம். அது இல்லாமல் அவரால் இருக்க முடியாது. முன்பு பஞ்சாப் மாநிலம் போதைப்பொருட்களுக்குப் பெயர் பெற்றிருந்தது, தற்போது தமிழகம் அந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
பள்ளிகள், கடைகளுக்கு அருகே போதைப்பொருள் தாராளமாகக் கிடைக்கிறது. அடுத்த தலைமுறையை காக்க இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு கூறினார்.

