போட்டியே இல்லாத போட்டியில் நான் போட்டியிடவில்லை; அண்ணாமலை பேட்டியால் பா.ஜ.,வினர் குழப்பம்
போட்டியே இல்லாத போட்டியில் நான் போட்டியிடவில்லை; அண்ணாமலை பேட்டியால் பா.ஜ.,வினர் குழப்பம்
UPDATED : ஏப் 05, 2025 07:26 AM
ADDED : ஏப் 05, 2025 02:42 AM

கோவை: ''பா.ஜ., மாநில தலைவர் போட்டியில் நான் இல்லை,'' என, கோவையில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி:
பார்லிமென்டில் ஒரு சரித்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. இரு சபைகளிலும் தனிப்பெரும்பான்மையுடன் வக்ப் போர்டு திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
சட்டம் கொண்டு வருவதற்கு முன், மசோதா தொடர்பாக ஒரு கோடி பேர் கருத்து தெரிவித்துள்ளனர். 13 மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு, மசோதாவை நிறைவேற்றியுள்ளது மத்திய அரசு. ஏழை முஸ்லிம்களுக்கு, வக்ப் திருத்தச் சட்டம் ஒரு வரப்பிரசாதம்.
இதில் எதுவும் புதியது இல்லை. ஆனால், தமிழகத்தில் இருப்போர், இதை குற்றஞ்சாட்டுகின்றனர்.
கடந்த 2013 முதல் 2023 வரை, வக்ப் போர்டில் இருந்த சொத்து 18 லட்சம் ஏக்கர். 2023 முதல் 2025 வரை, 21 லட்சம் ஏக்கர் சேர்க்கப்பட்டுள்ளது. வக்ப் போர்டு வசம் 39 லட்சம் ஏக்கர் உள்ளது.
இதில் நிறைய குழப்பங்கள் உள்ளன. தனிப்பட்ட சொத்தையும் வக்ப் போர்டு எடுத்துக்கொள்ள முடியும். அரசின் சொத்தையும், பிரிவு 40ன்படி எடுத்துக் கொண்டால், அதற்கு எந்தத் தீர்வும் இல்லை. இதை சரி செய்யத்தான், வக்ப் திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக, நேர்மையான முறையில் அரசு சொத்து காக்கப்பட்டுஉள்ளது. வக்ப் போர்டுக்கு சொத்து யாரெல்லாம் கொடுக்கலாம் என வரையறுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே உள்ள ஷியா, சன்னி முஸ்லிம் பிரிவுகளுடன், மேலும் இரு பிரிவுகள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. முஸ்லிம் மதத்தில் உள்ளவர்கள் மட்டுமே இருப்பது, வக்ப் போர்டு அல்ல. வக்ப் போர்டு சொத்தை நிர்வகிப்பவர்கள் முஸ்லிம் ஆக இருக்கலாம்.
ஆனால், அதற்கு கீழ் உள்ளவர்கள் முஸ்லிம் மதத்தைச் சாராதவர்களாக இருக்கலாம். இந்த வக்ப் திருத்தச் சட்டத்தை தி.மு.க., எதிர்க்கிறது; ஆனால், கிறிஸ்துவர்கள் ஆதரித்து, பாராட்டிஉள்ளனர்.
எதற்காக போராட்டம்?
வக்ப் சட்டத்தில், பிரிவு 40 மற்றும் 108 ஆகியவை திருத்தச் சட்டத்தில் நீக்கப்பட்டுள்ளன. இதனால், இவர்களுக்கு பயன் கிடைக்கும். எல்லா மக்களும் ஏற்றுக் கொண்ட சட்ட திருத்தத்திற்கு, தேசிய ஜனநாயக கூட்டணியில் இல்லாத கட்சிகளும் ஆதரவாக ஓட்டளித்துள்ளன.
இந்த சட்டத் திருத்தத்தால், சிறுபான்மை சமூகத்தவருக்கு வலிமை ஏற்பட்டுள்ளது. சிறுபான்மையினரிடையே பயத்தை ஏற்படுத்தி, அதன் வாயிலாக அவர்களை தங்கள் பக்கமே வைத்துக் கொள்வதை தி.மு.க., வழக்கமாகக் கொண்டுள்ளது. வக்ப் போர்டு கீழ் 39 லட்சம் ஏக்கர் உள்ளது.
வருமானம் 126 கோடி ரூபாய். முறையாக நிர்வகித்தால், 10,000 கோடி ரூபாய் வருவாய் இருக்கும் என கூறப்படுகிறது.
பாதி வக்ப் போர்டு சொத்துக்களை, தி.மு.க.,வினர் அபகரித்து வைத்துள்ளனர். வக்ப் போர்டுக்கு, அதில் இருந்த வருவாய் செல்லவில்லை.
அரசியல் கட்சிகள், வக்ப் போர்டு சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக, எதற்காக போராட்டம் நடத்துகின்றன என்பதை சொல்லட்டும். என்ன காரணத்துக்காக த.வெ.க., போராடுகிறது?
தமிழக சட்டசபையில் போடப்பட்ட 'நீட்' தீர்ப்பை ஜனாதிபதி நிராகரித்து திருப்பி அனுப்பி விட்டார். நீட் நாடகம் முடிந்தது. அடுத்த நாடகத்தை முதல்வர் துவங்கட்டும். தைரியம் இருந்தால் உச்ச நீதிமன்றம் செல்லட்டும்.
தமிழக பா.ஜ., புதிய தலைவருக்கான போட்டியில் நான் இல்லை. பா.ஜ.,வை பொறுத்தவரை தலைவர் பதவிக்கு பொதுவாக போட்டியிருக்காது. யாரும் போட்டியிட்டு தேர்வு நடப்பதில்லை. எல்லாரும் சேர்ந்து, ஒரு தலைவரை ஏகமனதாக தேர்வு செய்வோம்.
ஏன் மாற்ற வேண்டும்?
ஒரு விவசாயியின் மகன் நான். கட்சியின் தொண்டனாக என் பணி எப்போதும் தொடரும். ஊழலுக்கு எதிராக வந்தவன் நான். அதில் ஒருபோதும் சமரசம் இல்லை. ஒரு நல்ல ஆட்சியை கொண்டுவர, என் முயற்சி தொடரும்.
தி.மு.க., அமைச்சரவையில் 13 அமைச்சர்கள் மீது, வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கு, தமிழக நீதிமன்றங்களில் நடக்கிறது.
தற்போது திடுமென டாஸ்மாக் தொடர்புடைய வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என, தமிழக அரசு உச்ச நீதிமன்றம் சென்றுள்ளது. டாஸ்மாக் வழக்கை மட்டும் ஏன் அடுத்த மாநிலத்துக்கு மாற்ற வேண்டும்?
உங்கள் மடியில் கனமிருக்கிறது; வழியில் பயம் உள்ளது. அமலாக்கத்துறை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. அவர்கள் உரியவர்களை கைது செய்ய வேண்டும்; நடவடிக்கை எடுக்க வேண்டும். விரைவில் தி.மு.க., தலைவர்கள் பெரும் சிக்கலுக்குள்ளாவர்.
இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

