ரஷ்யாவுக்கு எதிராக இந்திய ஆயுதங்களா? ஆதாரமற்ற தகவல் என மத்திய அரசு மறுப்பு!
ரஷ்யாவுக்கு எதிராக இந்திய ஆயுதங்களா? ஆதாரமற்ற தகவல் என மத்திய அரசு மறுப்பு!
ADDED : செப் 20, 2024 01:54 AM

புதுடில்லி: ஐரோப்பிய நாடுகளுக்கு இந்தியா விற்பனை செய்த ஆயுதங்கள், உக்ரைன் ராணுவத்துக்கு கிடைத்துள்ளதாக வெளியான தகவலை மத்திய அரசு மறுத்துள்ளது. 'இது அடிப்படை ஆதாரமற்ற தகவல்' என, வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, 2022ல் ரஷ்யா தொடர்ந்த போர், தற்போதும் தொடர்கிறது. ரஷ்யாவுடன் நீண்ட கால நட்பு உள்ளதால், இந்த விஷயத்தில் இந்தியா நடுநிலை வகித்து வருகிறது.
அமைதி பேச்சு
போரை கைவிட்டு, அமைதி பேச்சில் ஈடுபட இரு நாடுகளையும் இந்தியா வலியுறுத்தி வருகிறது. இதில் மத்தியஸ்தம் செய்ய தயாராகவும் இருப்பதாக கூறியுள்ளது.
உலகிலேயே மிகப் பெரும் ஆயுத இறக்குமதியாளராக இருந்த இந்தியா, தற்போது ஏற்றுமதியில் ஈடுபட்டு வருகிறது.
இந்தியாவின் ராணுவ தேவைகளில், 60 சதவீதம் ரஷ்யாவிடம் இருந்தே வாங்கப்பட்டது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே நல்ல நட்பு உள்ளது.
இந்நிலையில், ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைன் பயன்படுத்தும் பீரங்கி குண்டுகள் உள்ளிட்ட சில ஆயுதங்கள், இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாயின.
அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தியா தற்போது பல ஐரோப்பிய நாடுகளுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்கிறது. அதில் சில நாடுகள், இந்த ஆயுதங்களை உக்ரைனுக்கு மடைமாற்றி விட்டதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, இத்தாலி மற்றும் செக் குடியரசு நாடுகளுக்கு அனுப்பப்பட்ட பீரங்கி குண்டுகள் உள்ளிட்டவையே, உக்ரைனுக்கு சென்று உள்ளன.
ராணுவ தளவாடங்கள், ஆயுதங்கள் தொடர்பான ஒப்பந்தங்களின்போது, குறிப்பிட்ட நாட்டின் பயன்பாட்டுக்காகவே அவை விற்கப்படுவதாக ஒப்பந்தம் செய்யப்படுகிறது.
இதை மீறினால், ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு, எதிர்காலத்தில் ஆயுதங்கள் வினியோகிக்க முடியாது என்ற கட்டுப்பாடு உள்ளது. ஆனால், இந்த ஆயுதங்கள் உக்ரைனுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் ஆயுதங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள மூன்று முக்கிய நிறுவனங்கள், 2022ல் போர் துவங்குவதற்கு முந்தைய இரண்டு ஆண்டுகளில், 23.42 கோடி ரூபாய் அளவுக்கே ஏற்றுமதி செய்துள்ளன.
அதே நேரத்தில், 2022 பிப்., - 2024 ஜூலை காலகட்டத்தில், 1.13 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இவ்வாறு செய்தியில் கூறப்பட்டுள்ளது.
பாதுகாப்பு
இந்த செய்திக்கு, மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து நம் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் நேற்று கூறியதாவது:
இந்த செய்தி, எந்த ஒரு அடிப்படையும் இல்லாதது, விபரீதமான கற்பனை. தவறாக வழி நடத்தும் நோக்கத்துடன், அவர்களாகவே அதீத கற்பனை செய்து இந்த செய்தியை வெளியிட்டுள்ளனர்.
இந்தியா, விதிகளை மீறியுள்ளதாக செய்தியில் கூறப்பட்டுள்ளது. அதுபோன்ற ஒன்று நடக்கவில்லை. இது முழுக்க முழுக்க தவறான தகவல்களின் தொகுப்பே.
ராணுவத் தளவாடங்கள் ஏற்றுமதி செய்யும்போது, பல சர்வதேச விதிகளை பின்பற்ற வேண்டும். நம் நாடு இந்த விஷயத்தில் மிகவும் ஜாக்கிரதையுடன் செயல்பட்டு வருகிறது.
ஆயுதப் பரவல் தடைச் சட்ட நடைமுறைகளின்படி, தவறானவர்களுக்கு ஆயுதங்கள் கிடைக்கக் கூடாது என்பதை உறுதி செய்யும் அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளும் பின்பற்றப்படுகின்றன.
ஒவ்வொரு கட்டத்திலும், ஆயுதங்கள் கையாள்வது தொடர்பான சான்றிதழ்களைப் பெற்று வருகிறோம். அதுபோல், பல்வேறு சட்ட விதிகளுக்கு, கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டே, ஏற்றுமதி தொடர்பான ஒப்பந்தங்கள் செய்யப்படுகின்றன.
இவ்வாறு கூறினார்.