பேரு மாத்த மூணு மாசமாங்க? வீடு, மனை வாங்குவோர் கடும் அதிருப்தி
பேரு மாத்த மூணு மாசமாங்க? வீடு, மனை வாங்குவோர் கடும் அதிருப்தி
UPDATED : நவ 08, 2024 04:35 AM
ADDED : நவ 07, 2024 11:55 PM

சென்னை: வீடு, மனை போன்ற சொத்துக்களுக்கு, பட்டா பெயர் மாற்றம் கோரி அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள், சரிபார்ப்பு பணிகள் முடிந்தும், அதிகாரிகளின் இறுதி முடிவுக்காக, மூன்று மாதங்களுக்கு மேல் காத்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில் வீடு, மனை வாங்குவோர், அதற்கான பத்திரப்பதிவு முடிந்ததும், பட்டா பெயர் மாற்றத்துக்கு விண்ணப்பிக்கின்றனர். இதில், கிராம நிர்வாக அலுவலர், குறுவட்ட வருவாய் ஆய்வாளர் நிலையில், பொது மக்கள் அலைக்கழிக்கப்படுவதாக புகார்கள் வந்தன.
புகார்
இதையடுத்து, பட்டா பெயர் மாற்றம் தொடர்பான அனைத்து பணிகளையும், 'ஆன்லைன்' முறைக்கு மாற்றி, தமிழக அரசு உத்தரவிட்டது. இதன்படி, வீடு, மனை விற்பனை பத்திரம் பதிவு செய்யப்படும்போது, உட்பிரிவு உருவாக்கம் தேவைப்படாத நிகழ்வுகளில், தானியங்கி முறையில் பட்டா மாறுதல் பெறலாம்.
அடையாள சான்றுகளை, சார் - பதிவாளர் சரிபார்த்து உறுதி செய்தால் போதும். அந்த விண்ணப்பங்களுக்கு, தானியங்கி முறையில் பட்டா பெயர் மாற்றம் செய்யப்படும். உட்பிரிவுக்கான நில அளவை மேற்கொள்ள வேண்டிய விண்ணப்பங்கள், வருவாய் ஆய்வாளர் வழியாக நில அளவை அலுவலருக்கு அனுப்பப்படும்.
இந்த பணிகளை, சம்பந்தப்பட்ட அலுவலர்கள் குறிப்பிட்ட கால வரம்புக்குள் முடிக்க வேண்டும். இதில், உட்பிரிவு உருவாக்கம் தேவைப்படாத சொத்துக்களுக்கு, 15 நாட்களிலும், உட்பிரிவு உருவாக்கம் தேவை உள்ள விண்ணப்பங்களை, 30 நாட்களிலும் முடிக்க வேண்டும் என, கால வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த காலவரம்பை தாண்டி, பட்டா மாறுதல் கோரும் விண்ணப்பங்கள் கிடப்பில் போடப்படுவதாக புகார் எழுந்துள்ளது. அனைத்து நிலை சரிபார்ப்பு முடிந்தும், இறுதி முடிவு எடுக்க வேண்டிய நிலையில், விண்ணப்பங்கள் தேக்கம் அடைந்துள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தாமதம்
இதுகுறித்து, தமிழக வீடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவோர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பி.மணிசங்கர் கூறியதாவது: பட்டா விபரங்கள் சரியாக இருந்தால் மட்டுமே, அடுத்தடுத்த பரிமாற்றங்களுக்கான பத்திரப்பதிவு மேற்கொள்ள முடியும். இதனால், சொத்து வாங்குவோரில் பெரும்பாலானோர், பட்டா பெயர் மாற்றத்துக்கு விண்ணப்பிக்கின்றனர்.
அதன்மீது 15 அல்லது30 நாட்களில் நடவடிக்கையை முடிக்க வேண்டும். ஆனால், விண்ணப்பங்கள் சரிபார்ப்பு பணிகள் முடிந்தும், துணை தாசில்தார் நிலையில் மூன்று மாதங்களுக்கு மேல் காத்திருக்கின்றன. தாலுகா அலுவலகங்களில் விசாரித்தால், வரிசைப்படி தான், இறுதி உத்தரவுகள் வரும் என்கின்றனர்.
தேவைக்கு ஏற்ப அதிகாரிகளின் எண்ணிக்கையை அதிகரித்து, பணிகளை விரைந்து முடிக்க, வருவாய்த் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து வருவாய்த் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பெரும்பாலான துணை தாசில்தார்கள், கூடுதல் பொறுப்பு என்ற அடிப்படையில் உள்ளனர். பிற பணிகளுக்கு இடையே, பட்டா கோப்புகளை முடிப்பதில் தாமதம் ஆகிறது. துணை தாசில்தார்கள்நிலையில், பட்டா மாறுதல் போன்ற பணிகளுக்கு தனி அதிகாரி இருந்தால் தான் இதற்கு தீர்வு ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.