வெள்ளிங்கிரி ஆன்மிக பயணத்துக்கு கட்டணமா? கோவை மாவட்ட வன அலுவலர் விளக்கம்
வெள்ளிங்கிரி ஆன்மிக பயணத்துக்கு கட்டணமா? கோவை மாவட்ட வன அலுவலர் விளக்கம்
ADDED : அக் 27, 2024 05:31 AM

கோவை,: கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில், 40 மலையேற்ற வழித்தடங்களை, 'டிரெக் தமிழ்நாடு' திட்டத்தின் கீழ், டிரெக்கிங் வழித்தடங்களாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இவற்றில், 13 எளிய வழித்தடங்கள், 16 மிதமான வழித்தடங்கள், 11 கடின வழித்தடங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
கோவை மாவட்டத்தில், ஆழியாறு, பெருமாள்முடி, பண்டாவரை, வெள்ளிங்கிரி, பரளியாறு, சிறுவாணி, மானாம்பள்ளி ஆகிய 7 மலையேற்றப்பாதைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், வெள்ளிங்கிரி கடின மலையேற்றப் பிரிவில் உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து, 1470 மீ., உயரத்தில் வெள்ளிங்கிரி அமைந்துள்ளது.
தமிழ்நாடு மலையேற்றத் திட்டத்தின் கீழ், 10 மணி நேரப் பயணமாக, 12.2 கி.மீ., வெள்ளிங்கிரி வழித்தடம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஜி.எஸ்.டி., உட்பட 5,354 ரூபாய் கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக பூண்டியில் இருந்து வெள்ளிங்கிரிக்கு, ஆண்டுதோறும் மார்ச், ஏப்., மாதங்களில், பக்தர்கள் ஆன்மிக பயணத்தில் ஈடுபடுவர்.
மழை, வறட்சி, வன விலங்குகளின் வலசை, இனப்பெருக்க காலம், வனம் மற்றும் வன உயிரினப்பாதுகாப்பு எனப் பல்வேறு அம்சங்களைக் கருத்தில் கொண்டு, ஆண்டின் பிற நாட்களில் பொதுமக்களை வனத்துறை உள்ளே அனுமதிப்பதில்லை. அனுமதிக்கும் காலகட்டம் குறித்து நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ளது.
தற்போது, மலையேற்றத் திட்டத்தில் வெள்ளிங்கிரி சேர்க்கப்பட்டிருப்பதால், மார்ச், ஏப்., காலத்தில் வழக்கமாக ஆன்மிகப் பயணம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கும், கட்டணம் வசூலிக்கப்படுமா எனக் கேள்வி எழுந்துள்ளது.
இதுதொடர்பாக, கோவை மாவட்ட வன அலுவர் ஜெயராஜ் கூறியதாவது:
ஆன்மிக பயணத்துக்கும், டிரெக்கிங் திட்டத்துக்கும் தொடர்பில்லை. வழக்கமான ஆன்மிக பயண காலத்தில், 'டிரெக்கிங்', ஆன்லைனில் முன்பதிவு செய்ய இயலாத வகையில், நிறுத்தி வைக்கப்படும். ஆன்மிக பயணம் செல்பவர்களிடம், எவ்வித கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது. வழக்கமான நடைமுறைகள் மட்டுமே பின்பற்றப்படும்.
மலையேற்ற திட்டத்தில் செல்பவர்கள் உடன், பயிற்சி அளிக்கப்பட்ட, வழித்தடம் நன்கறிந்த பழங்குடி மற்றும் உள்ளூர் இளைஞர்கள் உடன் செல்வர். உரிய பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படும்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.