'காமராஜர் ஆட்சி லட்சியம்; கூட்டணி ஆட்சி நிச்சயம்': புதிய கோஷத்துடன் களமிறங்க தயாராகுது காங்.,
'காமராஜர் ஆட்சி லட்சியம்; கூட்டணி ஆட்சி நிச்சயம்': புதிய கோஷத்துடன் களமிறங்க தயாராகுது காங்.,
UPDATED : நவ 01, 2025 06:46 AM
ADDED : நவ 01, 2025 05:03 AM

: தி.மு.க., கூட்டணியில் உள்ள காங்கிரஸ், வரும் சட்டசபை தேர்தலுக்கு, 'காமராஜர் ஆட்சி லட்சியம்; கூட்டணி ஆட்சி நிச்சயம்' என்ற, புதிய கோஷத்துடன் களமிறங்க முடிவு செய்துள்ளது.
ஜனவரி மாதம் மூன்று லட்சம் நிர்வாகிகளுடன், ராகுல் பங்கேற்கும் மாநாட்டை நடத்த, கட்சி தலைமை முடிவு செய்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை பொறுப்பேற்றதும், காங்கிரஸ் சீரமைப்பு மேலாண்மை தலைவராக பீட்டர் அல்போன்ஸ் நியமிக்கப்பட்டார்.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி எங்கே இருக்கிறது என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை கேட்டது, தமிழக காங்கிரசாரிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
அதைத் தொடர்ந்து, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் கிரிஷ் சோடங்கர், சூரஜ் ஹெக்டே ஆகியோர் இணைந்து, கிராம, நகர காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் நியமன திட்டத்தை, தமிழக காங்கிரசில், முதல் முறையாக அமல்படுத்தினர்.
இத்திட்டத்தின் கீழ், அனைத்து கிராமங்களிலும், கட்சிக்கு தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட வேண்டும்.
இதற்காக, தமிழகத்தை 13 மண்டலங்களாக பிரித்து, கோஷ்டி தலைவர்களை பொறுப்பாளர்களாக நியமித்தனர்.
சட்டசபை தொகுதிக்கு, 1,000 நிர்வாகிகள் என, மொத்தம் உள்ள 234 சட்டசபை தொகுதிகளில், 2.34 லட்சம் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கியூஆர் கோடுடன் கூடிய, அடையாள அட்டை வழங்கும் பணி நடந்து வருகிறது.
சென்னை சத்தியமூர்த்தி பவனில், மாநில துணைத்தலைவர் வசந்த ராஜ் தலைமையில், 'வார்ரூம்' அமைக்கப்பட்டு, அனைத்து பணிகளும், டிஜிட்டல் வாயிலாக முடிக்கப்பட்டுள்ளன. இதை அறிந்த ராகுல், கட்சி நிர்வாகிகளை பாராட்டி உள்ளார்.
தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரியில் காங்கிரஸ் ஏற்கனவே ஆட்சி அமைத்தது போல், தமிழகத்திலும் ஆட்சி அமைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அதன் தொடர்ச்சியாக, 'காமராஜர் ஆட்சி லட்சியம்; கூட்டணி ஆட்சி நிச்சயம்' என்ற கோஷத்துடன், ஜனவரி மூன்றாவது வாரத்தில், 3 லட்சம் பேர் பங்கேற்கும் மாநாட்டை, திருச்சியில் நடத்த முடிவு செய்துள்ளனர். அம்மாநாட்டில் 234 தொகுதிகளில் தலா ஆயிரம் நிர்வாகிகள் பங்கேற்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மாநாட்டை எழுச்சியுடன் நடத்திய பின், தி.மு.க.,வுடன் கூட்டணி ஆட்சிக்கு பேரம் பேசி, கூடுதல் தொகுதிகளை பெற, கட்சி தலைமை திட்டமிட்டுள்ளது.
தி.மு.க., சம்மதிக்காவிட்டால், த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்கும் முடிவை எடுக்க வாய்ப்பு உள்ளது என, தமிழக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறின.
- நமது நிருபர் -

