'இந்தியாவை ஹிந்து நாடாக அறிவிக்க வேண்டும்' திருமா பேரணிக்கு கிருஷ்ணசாமி பதிலடி
'இந்தியாவை ஹிந்து நாடாக அறிவிக்க வேண்டும்' திருமா பேரணிக்கு கிருஷ்ணசாமி பதிலடி
ADDED : ஜூன் 17, 2025 03:28 AM

சென்னை: திருச்சியில் நடந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின், 'மதச்சார்பின்மை காப்போம்' பேரணியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு பதிலடி தரும் வகையில், 'இந்தியாவை ஹிந்து நாடாக அறிவிக்க வேண்டும்' என, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
கடந்த 14ம் தேதி, திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், 'மதச்சார்பின்மை காப்போம்' என்ற பெயரில் பேரணி நடத்தப்பட்டது. அதில், 'இந்தியாவை மதச்சார்பற்ற நாடாக பாதுகாப்போம்'என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அந்த தீர்மானத்திற்கு பதிலடி தரும் வகையில், டாக்டர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்திய அரசியல் சாசனத்தில் ஜம்மு -- காஷ்மீரை தவிர, இந்தியாவில் எவரும் சொத்து வாங்கலாம் என்ற ஷரத்தும் இருந்துள்ளது; ஆனால், அனைவரும் சொத்து வாங்குவதற்கான வழிமுறைகள் அதில் சொல்லப்படவில்லை.
ஒரு மிகப் பெரிய பிரதேசம் மதரீதியாக பிளவுபட்டபின், அதே மத ரீதியான மக்களையும் உள்ளடக்கி, எப்படி மதச்சார்பற்ற தேசமாக விளங்க முடியும் என்பதை பற்றி சிறிதும் சிந்தித்து பார்த்து, அரசியல் வடிவம் கொடுக்கவில்லை.
பிரிவினைக்கு பின்னர் இந்தியா, ஹிந்து நாடாகத்தான் அறிவிக்கப்பட்டு இருக்க வேண்டும். இந்தியாவில் ஜாதி பிரிவினைகள் உண்டு என்பதை அனைவரும் அறிவர். மொழி ரீதியான மாநில பிரிவினைகளால், இந்தியாவின் பிரதான பிரச்னைகளுக்கு தீர்வு காண இயலவில்லை.
மேலும், மொழிவாரி மாநில பிரச்னைகளே, இந்தியாவின் இன்றைய பெரும்பாலான பிரச்னைகளுக்கு காரணமாக உள்ளன.
மதச்சார்பின்மை என்பது, ஒரு சில குறிப்பிட்ட அரசியல் கட்சிகளின் கோஷமே தவிர, 140 கோடி இந்திய மக்களின் உள்ளக் கிடங்கை வெளிப்படுத்தக்கூடியது அல்ல.
குறிப்பிட்ட ஒரு சில நபர்கள், அரசியல் கட்சிகள், சில மதங்களின் மடிகளில் சாய்ந்து கொண்டு பேசுகிற போலி தத்துவமாக மதச்சார்பின்மை இருக்கக்கூடாது.
எந்த மதத்தையும் உண்மையில் சாராமல் நின்று பேசுவது தான் உண்மையான மதச்சார்பின்மை.
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு ஜாதியும் ஒரு தேசிய இனம். எனவே, ஜாதிகளை தேசிய இனமாக அங்கீகரித்துவிட்டு, இந்தியாவை ஹிந்து தேசமாக அறிவிப்பதே, இந்தியாவிற்கும் பாதுகாப்பு; இந்திய மக்களுக்கும் பாதுகாப்பு. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.