'அன்பிட்' என்ற டி.ஆர்.பாலு சர்ச்சை பேச்சால் மோடியின் கவனத்தை ஈர்த்த எல்.முருகன்
'அன்பிட்' என்ற டி.ஆர்.பாலு சர்ச்சை பேச்சால் மோடியின் கவனத்தை ஈர்த்த எல்.முருகன்
UPDATED : பிப் 15, 2024 06:17 AM
ADDED : பிப் 15, 2024 06:11 AM
சென்னை: மத்திய இணை அமைச்சர் எல்.முருகனுக்கு மீண்டும் ராஜ்யசபா எம்.பி., வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது பா.ஜ.,வுக்குள்ளேயே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம், கோனுாரில், 1977ல் பிறந்த எல்.முருகனுக்கு பள்ளியில் படிக்கும்போதே ஆர்.எஸ்.எஸ்., அமைப்புடன் தொடர்பு ஏற்பட்டது. அதனால், சட்ட கல்லுாரியில் படிக்கும்போது, ஏ.பி.வி.பி., மாணவர் அமைப்பில் இணைந்து, அதன் மாநில செயலராக செயல்பட்டார்.

வழக்கறிஞராக செயல்பட துவங்கியதும், பா.ஜ.,வில் இணைந்தார். தமிழக பா.ஜ., - எஸ்.சி., அணித் தலைவராக இருந்தபோது, தேசிய எஸ்.சி., அணித் தலைவராக இருந்த முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன், முருகனுக்கு நல்ல நட்பு ஏற்பட்டது. அதன் பின், அரசியல் ரீதியிலும் முருகனுக்கு பல ஏற்றங்கள்.
கடந்த 2017ல் தேசிய எஸ்.சி., ஆணைய துணைத் தலைவராக எல்.முருகன் நியமிக்கப்பட்டார். இது அவரது வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. தமிழக பா.ஜ., தலைவராக 2020 மார்ச் 11ம் தேதி முருகன் நியமிக்கப்பட்டார். பட்டியலினத்தை் சேர்ந்த, அதுவும் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த ஒருவர், பா.ஜ., மாநில தலைவராக நியமிக்கப்பட்டது, அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
கடந்த, 2021 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில் தாராபுரம் தொகுதியில் போட்டியிட்டார் முருகன். குறைந்த ஓட்டில் தி.மு.க., வேட்பாளரிடம் தோல்வி அடைந்த நிலையில், 2021 ஜூலை 7ம் தேதி மத்திய இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
புதுச்சேரியில் ஒரு ராஜ்யசபா எம்.பி., பதவி பா.ஜ.,வுக்கு வந்தது. அதில் முருகன் போட்டியிடுவார் என கூறப்பட்டது. ஆனால், இரண்டரை ஆண்டு பதவிக் காலம் மட்டுமே இருந்த, ம.பி.,யில் இருந்து எம்.பி.,யானார்.
மீண்டும் எம்.பி., யானால் மட்டுமே மத்திய அமைச்சராக தொடர முடியும் என்பதால், நீலகிரி தனி தொகுதியில் போட்டியிட முடிவு செய்து தேர்தல் பணியாற்றி வந்தார். முருகனின் இந்த ஆவலுக்கு, கட்சித் தலைமையும் பச்சைக் கொடி காட்டி இருந்தது. இந்நிலையில் தான், மீண்டும் ம.பி.,யில் இருந்து ராஜ்யசபா எம்.பி.,யாக உள்ளார்.

இது பா.ஜ.,வுக்குள்ளேயே பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.இது பற்றி முருகனிடம் கேட்ட போது, ''ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பது கட்சி தலைமையின் முடிவு. கட்சி தலைமை உத்தரவிட்டால், அடுத்து லோக்சபா தேர்தலிலும் போட்டியிடுவேன். மக்களை நேரடியாக சந்தித்து, அவர்கள் ஓட்டுகளைப் பெற்று பார்லிமென்ட் உறுப்பினராக வேண்டும் என்ற ஆவலும் உள்ளது. அதனால், தேர்தலில் போட்டியிட எந்த பயமும் இல்லை. மற்றபடி, தலைமை உத்தரவுபடியே எல்லாம் நடக்கிறது,'' என்றார்.
முருகனுக்கு கிடைத்த இந்த வாய்ப்பு குறித்து பா.ஜ., நிர்வாகிகள் கூறியதாவது:
டில்லியில் உள்ள முருகன் இல்லத்தில் கடந்த ஆண்டு நடந்த தமிழ் புத்தாண்டு விழாவிலும், இந்த ஆண்டு ஜனவரியில் நடந்த பொங்கல் விழாவிலும், பிரதமர் மோடி பங்கேற்றார். இது பிரதமருடனும், பிரதமர் அலுவலகத்துடனும் நெருங்க, முருகனுக்கு நல்வாய்ப்பாக அமைந்தது.
சில நாட்களுக்கு முன்பு லோக்சபாவில், தமிழகத்திற்கு வெள்ள நிவாரணம் வழங்க மத்திய அரசு மறுப்பதாக குற்றஞ்சாட்டி, தி.மு.க.,வின் டி.ஆர்.பாலு பேசினார். அப்போது குறுக்கிட்ட எல்.முருகனை நோக்கி கடும் கோபத்துடன், 'நீங்கள், 'அன்பிட்!' இந்தப் பதவியில் இருப்பதற்கே தகுதியற்றவர்' என்றார்.
இதனால் கொந்தளித்த மூத்த மத்திய அமைச்சர்கள், முருகன் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவரை அவமதிப்பதாக, டி.ஆர்.பாலுவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த விஷயத்தில் பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோரின் கவனம் முருகன் மீது திரும்பியது. அவரிடமும் இது பற்றி விசாரித்துள்ளனர்.
அதன்பின் பார்லிமென்ட் உணவகத்தில் சாப்பிட்ட மோடி, முருகனையும் அருகில் அமர வைத்து கொண்டார். அதைத் தொடர்ந்தே முருகனுக்கு மீண்டும் ராஜ்யசபா வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பா.ஜ., வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக மோடி பிரதமராக பதவி ஏற்கும்பட்சத்தில், தமிழகத்தின் சார்பில், மீண்டும் முருகன் அமைச்சராக்கப்படுவதற்கான முன்னோட்டம் தான் இது. பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவின் மனதில் ஆழமாக இடம்பிடித்திருக்கும் முருகனுக்கு மீண்டும் அமைச்சராகும் வாய்ப்பு கிடைத்தால் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

