‛'லா நினா'வால் தமிழகத்தில் அதி கனமழை பெய்யும்: வல்லுனர்கள் எச்சரிக்கை
‛'லா நினா'வால் தமிழகத்தில் அதி கனமழை பெய்யும்: வல்லுனர்கள் எச்சரிக்கை
ADDED : அக் 13, 2025 12:23 AM

சென்னை: 'லா நினா நிகழ்வால், வடகிழக்கு பருவமழை காலத்தில், கடலோர மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது' என, காலநிலை மாற்ற வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை, வரும், 16 முதல், 18ம் தேதிக்குள் துவங்க வாய்ப்புள்ளதாக, இந்திய வானிலை துறை அறிவித்து உ ள்ளது.
எனவே, அதி கனமழை பெய்தால், வெள்ள பாதிப்பு ஏற்படாமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, தமிழக அரசு முடுக்கி விட்டுள்ளது.
தீவிரமடையும் அதுவும் இந்த ஆண்டு வழக்கத்தை விட, கூடுதலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை துறை கணித்துள்ளது. இந்நிலையில், தீபாவளிக்கு பின் வங்கக்கடலில், வடகிழக் கு பருவமழையின் தாக்கம் தீவிரமடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், பசிபிக் பெருங்கடலில் ஏற்படும், 'லா நினா' நிகழ்வின் தாக்கமும், தமிழக கடலோர மாவட்டங்களில், கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து, சென்னை அண்ணா பல்கலையின், காலநிலை மாற்றம் பேரிடர் மேலாண்மை மைய பேராசிரியர் ஆ.ராமச்சந்திரன் கூறியதாவது:
பொதுவாக, பசிபிக் பெருங்கடலில், மத்திய மற்றும் கிழக்கு பூமத்தியரேகை பகுதியில், கடலின் மேற்பரப்பு வெப்பநிலை இயல்பை விட குளிர்ந்து காணப்படுவது, 'லா நினா' நிகழ்வு என்று கூறப்படுகிறது.
பசிபிக் பெருங்கடலில் இந்நிகழ்வு ஏற்பட்டாலும், அதன் தாக்கம், பல்வேறு பகுதிகளில் எதிரொலிக்கும். பசிபிக் பெருங்கடலில், இந்த ஆண்டு காணப்படும் லா நினா நிகழ்வால், வறண்ட காற்று மேற்கு நோக்கி வீசும்.
பருவக்காற்று இந்தக் காற்று ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா நாடுகளை கடந்து, வங்கக்கடல் வரை வர வாய்ப்பு உள்ளது. இவ்வாறு வரும் காற்று, நீராவியை எடுத்து வரும் போது, அதிக மழை மேகங்கள் உருவாகும். அவை, வங்கக்கடலில் நுழையும் போது, இங்கு வடகிழக்கு பருவக்காற்று தீவிரமடையும்.
இதனால், இலங்கையின் திரிகோணமலையில் இருந்து ஒடிசா வரையிலான, கடலோர பகுதிகள், அதி கனமழையை பெற வாய்ப்புள்ளது. தமிழகத்தில், கன்னியாகுமரி முதல் திருவள்ளூர் வரையிலான பகுதிகளில், அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது.
இதை கருத்தில் வைத்து, சம்பந்தப்பட்ட அரசு துறையினர், தகுந்த முன் னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.