மம்தாவின் சித்தாந்தமா; பா.ஜ.,வின் வளர்ச்சியா?: மேற்கு வங்க தேர்தல் களத்தில் கடும் போட்டி
மம்தாவின் சித்தாந்தமா; பா.ஜ.,வின் வளர்ச்சியா?: மேற்கு வங்க தேர்தல் களத்தில் கடும் போட்டி
ADDED : ஆக 24, 2025 11:40 PM

சட்டசபை தேர்தலுக்கான போர்மேகம் மேற்கு வங்கத்தில் அடர்த்தியாக சூழத் துவங்கி இருக்கிறது. வழக்கமான அரசியல் போர் என்றாலும், இந்த முறை எடுபடப் போவது சித்தாந்தமா அல்லது வளர்ச்சியா என்ற போட்டி ஏற்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில், 294 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு ஏப்ரல் - மே மாதங்களில் நடக்க உள்ளது. தொடர்ந்து மூன்று தேர்தலில் வென்று, அசைக்க முடியாத சக்தியாக திரிணமு ல் காங்கிரசின் முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளார்.
பிள்ளையார் சுழி அதே நேரத்தில், கடந்த இரண்டு தேர்தல்களில், தன் செல்வாக்கை பா.ஜ., உயர்த்திக் கொண்டே வந்துள்ளது.
இந்த முறை, திரிணமுல் காங்கிரசை வீழ்த்தியே தீருவது என்பதில் பா.ஜ., தீவிரமாக உள்ளது. அதற்கேற்ப அரசியல் வியூகங்களை வகுத்து வருகிறது.
சமீபத்தில் கொல்கட்டாவுக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, நீண்ட நாளாக மக்கள் எதிர்பார்த்திருந்த மெட்ரோ ரயில் போக்குவரத்தை துவக்கி வைத்து, தேர்தல் போருக்கான பிள்ளையார் சுழியைப் போட்டிருக்கிறார்.
மேற்கு வங்கத்தின் அரசியல், கடந்த பல ஆண்டுகளாக இரு புள்ளிகளை மையப்படுத்தியே சுற்றி வந்திருக்கிறது. ஒன்று சித்தாந்தம்; மற்றொன்று வங்கப் பெருமை என்ற பூர்வீக அடையாளம்.
மேற்கு வங்கத்தில் மார்க்சிய சித்தாந்தத்தை முன்வைத்து, 34 ஆண்டுகளாக இடதுசாரி முன்னணி ஆட்சியை நடத்தியது. அதன் பின் தாய், நிலம், பூர்வீக குடிகள் என வங்கத்தின் பெருமையை விதைத்து, இடதுசாரி சித்தாந்தத்தை உடைத்தெறிந்து ஆட்சி கட்டிலில் அமர்ந்தார் மம்தா பானர்ஜி.
உள்ளூர் அரசியல் தற்போது பா.ஜ., வேறு வகையான அடையாள அரசியலுடன் மேற்குவங்கத்தில் கால்பதிக்க துவங்கி இருக்கிறது. திரிணமுல் காங்., அரசியல் கொள்கைகளை மட்டுப்படுத்த, வழக்கம் போல ஹிந்துத்துவா சித்தாந்தத்தை கையில் எடுத்திருக்கிறது.
அ தே நேரத்தில், அது மட்டும் வெற்றியைத் தேடித் தராது என்பதை பா.ஜ., உணர்ந்துள்ளது.
பிரதமர் மோடியின் மேற்கு வங்க பயணம் வேறு விதமான சமிக்ஞையை எடுத்துக் காட்டி உள்ளது. அதுதான் மக்களின் எதிர் பார்ப்புகளை நிறைவேற்றும் வளர்ச்சி அரசியல்.
போக்குவரத்து நெரிசல், மாசு, பல் இளிக்கும் உள்கட்டமைப்பு வசதிகளே போதுமா? வளர்ச்சி வேண்டாமா என்ற கேள்வியை நடுத்தர வர்க்க வாக்காளர்களின் மனதில் எழுப்ப வைத்திருக்கிறது இந்த திட்டம்.
கொல்கட்டா வாக்காளர்களை பொறுத்தவரை, மெட்ரோ வழித்தடம் என்பது வெறும் போக்குவரத்து அல்ல. கூடுதல் வசதி வாய்ப்புக்கான ஒரு அடையாளம். இந்த சங்கதியை தான் பா.ஜ., மிக தெளிவாக மக்கள் மனதில் கடத்தி இருக்கிறது. 'உள்ளூர் அரசியல் கட்டுகளில் இருந்து வெளியே வாருங்கள்.
திருப்புமுனை ' எதிர்கால வளர்ச்சிக்கான பாலத்தை கட்டமைக்க நாங்கள் உறுதுணையாக இருக்கிறோம்' என பொட்டில் அடித்தாற் போல சொல் லி இருக்கிறது.
பா.ஜ., ஆட்சிக்கு வந்தால் மிக முக்கியமான உள்கட்டமைப்பு திட்டங்கள் நிறைவேற்றப்படும் என, கனகச்சிதமான காய்நகர்த்தல்கள் நடந்தன.
இந்த அரசியல் கதையி ல் முக்கியமான திருப்பு முனையாக, மெட்ரோ வழித்தட திறப்பு விழா அழைப்பிதழ் முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
பா.ஜ., யூகித்தது போல, மம்தா விழாவை புறக்கணிக்க, அதை வைத்து இரு தரப்பிலும் அரசியல் கணைகள் வரிசையாக தொடுக்கப்பட்டுள்ளன.
தேர்தலில் வென்றால் நவீனத்துவம், வளர்ச்சி, இளம் வாக்காளர்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என, பா.ஜ., வாக்குறுதி கொடுத்துள்ளது. இதனால், அடுத்து வரும் மாதங்களில் மேற்கு வங்க அரசியலில் சூடு பறக்கப் போகிறது.
புதிய மெட்ரோ வழித் தடங்கள், கோனா விரைவுச்சாலை ஆகியவை வெறுமனே உள்கட்டமைப்பு திட்டங்கள் அல்ல. சித்தாந்த போருக்கான அடையாளங்கள். இந்த புதிய வழித்தடங்களில் பயணிக்கும் மிஸ்டர் பொதுஜனம் தான் வெற்றியை தீர்மானிக்கப் போகும் நடுவர்.
- நமது சிறப்பு நிருபர் -