தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/வலை வளை: மதுக்கடையில் 'மட்டை':குரங்கார் செய்த சேட்டை

வலை வளை: மதுக்கடையில் 'மட்டை':குரங்கார் செய்த சேட்டை

வலை வளை: மதுக்கடையில் 'மட்டை':குரங்கார் செய்த சேட்டை

1


ADDED : செப் 27, 2026 04:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 27, 2026 04:28 AM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுக்கடையில் 'மட்டை':குரங்கார் செய்த சேட்டை

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில், திறந்திருந்த மதுக்கடைக்குள் குரங்கு ஒன்று புகுந்து விட்டது. பிஸ்கட் ஆசை காட்டி, வெளியே அனுப்ப முயற்சித்த ஊழியர்களின் பாச்சா, குரங்கிடம் பலிக்கவில்லை. வரிசையாக அடுக்கி வைத்திருக்கும் மது பாட்டில்களை பார்த்த குரங்கு, ஒரு 'குவார்ட்டர்' பாட்டிலை மட்டும் கையில் எடுத்துக் கொண்டது.

பாட்டில் மூடியை பல்லால் கடித்து திறந்த குரங்கு, அதில் இருந்த மதுவை முழுதும் குடித்து விட்டது. பார்த்துக் கொண்டே இருந்த கடை ஊழியர்கள், என்ன செய்வதென தெரியாமல் நின்றனர்.

சற்று நேரத்தில் போதை ஏறிய குரங்கு, அதே இடத்தில் படுத்துக் கொண்டது. தகவல் அறிந்து வந்த வனத்துறையினர், குரங்கை கூண்டில் ஏற்றி அழைத்துச் சென்றனர். மதுவால் குரங்கு மட்டையான செய்தி, இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளது.

பெங்களூரு தான் பெஸ்ட்!

எந்த ஊருக்கு சிறப்புகள் அதிகம் என்ற சண்டை, எல்லா காலமும் டிரெண்டிங்கில் இருக்கும். 'பெங்களூரின் வேலை கலாசாரம் நல்லதா, குருகிராமின் வேலை கலாசாரம் சிறந்ததா' என, அஸ்தா கோயல் என்ற பெண் பட்டியலிட்ட வீடியோ, வலைதளங்களில் பரவியது. 'பெங்களூரில் என்ன மாதிரியான உடை அணிந்தும் அலுவலகம் செல்ல முடியும். யாரும் அதைப்பற்றி எதுவும் சொல்ல மாட்டார்கள். குருகிராமில் முறையான உடைக் கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டியிருக்கிறது' என்று வருத்தப்படுகிறார் அவர்.

'பெங்களூரில் அலுவலகம் செல்லும்போது வளர்ப்பு பிராணிகளையும் உடன் அழைத்துச் செல்ல முடியும். இங்கு என் பூனையையும் அழைத்துச் செல்ல வாய்ப்பில்லை. மிகவும் வேதனையாக இருக்கிறது' என்கிறார், அஸ்தா. வீடியோவை பார்த்த வலைதள பிரியர்கள் பலரும், அவரை ஆதரித்தும், எதிர்த்தும், தாங்கள் வசிக்கும் நகரங்களுடன் ஒப்பிட்டும் கமென்ட் செய்து வருகின்றனர்.

குண்டு நாய்களுக்கு தேர்தல்:ஆதரவு கேட்கிறார் 'குட்டா சிங்'

டில்லியில் தேர்தல் இல்லாவிட்டாலும், ஓட்டு கேட்கும் விளம்பரங்கள், இன்ஸ்டாகிராமில் சரமாரியாக வந்து குவிகின்றன.

'டில்லியின் குண்டு நாய்கள்' என்ற இன்ஸ்டா பக்கத்தில் வெளியான அறிவிப்பு தான், அனைவரையும் ஈர்த்து விட்டது.

'இது, குண்டு நாய்களுக்கான உலகின் முதலாவது போட்டி. உங்கள் பகுதியில் இருக்கும் குண்டு நாய்களை பெயர், ஏரியாவுடன் போட்டோ எடுத்து அனுப்புங்கள். தேர்வு செய்வோம்' என்று அறிவிப்பு வெளியானது தான் தாமதம்.

ஆளாளுக்கு போட்டோ எடுத்து அனுப்ப, 64 நாய்கள் களம் கண்டன. 'நாக் அவுட்' முறையில் போட்டிகள் நடக்கின்றன. செப்., 27ல் கால் இறுதி, 28ல் அரை இறுதி. 29ல் இறுதிப் போட்டி நடக்கப் போகிறது. இன்ஸ்டாகிராமில் மக்கள் ஓட்டளித்து வெற்றியாளரை தேர்வு செய்யலாம்.

தேர்தல் என்றால் முறைகேடு புகார் வேண்டாமா, அதுவும் கிளம்பியிருக்கிறது. நடப்பதை கண்டதும், 'பிளிங்கிட்' நிறுவனம், 'நாங்கள் 'குட்டா சிங்' நாய்க்கு ஆதரவு என அறிவித்துள்ளது. 'ஒரே அலப்பறை தான் போங்க' என்கின்றனர், டில்லி மக்கள்.

காலரை பிடித்த பேராசிரியர்: காமெடியன் பாடு திண்டாட்டம்

ஆமதாபாத் நிர்மா பல்கலையில் கருத்தரங்கம், பல்சுவை நிகழ்ச்சிகள் நடந்தன. காமெடியன் ரஜத் சூட் நிகழ்ச்சி முடிந்ததும், அவரை பேராசிரியர் ஒருவர் பாராட்டிப் பேசினார்.

கீழே இருந்த மாணவர்களில் ஒருவர், 'சீக்கிரம் முடிங்க, நான் ரொம்ப துாரம் போகணும்' என்பது போல, ஒரு கமென்ட் அடித்தார். கொந்தளித்த பேராசிரியர், குறிப்பிட்ட அந்த மாணவரை மேடைக்கு அழைத்தார். மாணவரின் சட்டைக்காலரை பிடித்தபடி, 'தொலைத்துக்கட்டி விடுவேன்' என்று அவர் பேசியதன் வீடியோ, பரபரப்பை ஏற்படுத்தியது.

இது பற்றி பதிவிட்ட ரஜத் சூட், 'ஏதாவது அசம்பாவிதம் நடந்தால், அந்த இடத்தில் நான் இருப்பது என்பது வழக்கமானது தான். அன்றைய தினம் குற்ற நிகழ்விடத்துக்கு, 2 அடி தொலைவில் நான் இருந்தேன். என் வாழ்நாள் முழுதும் இப்படி அவசரகால சூழ்நிலைகளில் தான் கழிகிறது' என்று நகைச்சுவையாக கூறியுள்ளார் ரஜத் சூட்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us