தமிழகத்தை வட்டமடிக்கும் நிர்மலா சீதாராமன்; வரும் 2026 சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் பா.ஜ., மேலிடம்
தமிழகத்தை வட்டமடிக்கும் நிர்மலா சீதாராமன்; வரும் 2026 சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் பா.ஜ., மேலிடம்
ADDED : அக் 14, 2024 12:02 AM

வரும் 2026 தமிழக சட்டசபை தேர்தலுக்கான பணிகளை ஆளும் தி.மு.க., துவக்கி விட்டது. ஆட்சியிலும், கட்சியிலும் அதற்கான பணிகளை முடுக்கி விடுவதற்கென்றே, கட்சியின் இளைஞர் அணி செயலர், அமைச்சர் உதயநிதியை, அவசர அவசரமாக துணை முதல்வராக்கி உள்ளனர். அதற்கேற்ப, அவர் கட்சி மற்றும் ஆட்சிப் பணிகளில் தீவிரம் காட்டுகிறார்.
அதேபோல, தமிழக பா.ஜ.,வும், சட்டசபை தேர்தலை எதிர்நோக்கி, சில பணிகளை துவக்கி உள்ளது. முதற்கட்டமாக, மாநிலம் முழுதும் கட்சி உறுப்பினர் சேர்க்கை வேகமாக நடந்து வருகிறது. இந்த பணியில், கட்சியின் அனைத்து முன்னணி தலைவர்களும் களம் இறங்கியுள்ளனர்.
பா.ஜ., தலைமையில் வலுவான கூட்டணி அமைக்க திட்டமிட்டு, ஒத்த எண்ணம் கொண்ட பல கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகளிடம், மேல்மட்டத் தலைவர்கள் பேசி வருகின்றனர்.
இப்படி கூட்டணிக்கான முயற்சிகள் துவங்கியுள்ள நிலையில், முதல்வர் வேட்பாளராக களம் இறக்குபவரையும் தேர்வு செய்துவிட வேண்டும் என, கட்சி தலைமை முடிவெடுத்திருக்கிறது.
இதற்காக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை தேர்வு செய்து இருப்பதாகவும், அதனாலேயே அவர் தமிழகத்தை நோக்கி, தன் முழுப் பார்வையையும் திருப்பி இருப்பதாகவும் டில்லியில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
தலைமை உத்தரவு
கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, கட்சியின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டபின், கட்சியை அடிமட்ட அளவில் வளர்த்தெடுத்திருக்கிறார். ஆனால், கட்சி தனித்து போட்டியிட்டு வெற்றி பெறும் அளவுக்கு வளர்த்தெடுக்கப்படவில்லை.
தமிழகம் முழுதும் பல 'பூத்'களுக்கு பா.ஜ.,வுக்கென்று தனித்த ஆட்கள் கிடையாது. இந்நிலையில், கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதே சரியாக இருக்கும் என கட்சித் தலைமை முடிவெடுத்துள்ளது.
லோக்சபா தேர்தலுக்காக பா.ஜ., தலைமையில் ஏற்கனவே கட்டமைக்கப்பட்ட கூட்டணி அப்படியே தொடரும் நிலையில், வேறு பல கட்சிகளையும் கூட்டணியில் இணைய வைக்கும் முயற்சியில் கட்சியின் மூத்த தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
'சர்வதேச அரசியல்' என்ற தலைப்பில் சான்றிதழ் படிப்புக்காக லண்டன் சென்றிருக்கும் அண்ணாமலை இன்னும் சில வாரங்களில் தமிழகம் திரும்புகிறார். அதன்பின், கட்சியை வேகமாக வளர்த்தெடுக்க, அவர் ஏற்கனவே பாத யாத்திரை சென்றது போல மீண்டும் ஒரு யாத்திரைக்கு தயாராவார் எனத் தெரிகிறது.
கடந்த பாதயாத்திரையின் போதே வெளியிடப்பட்ட அறிவிப்புதான் என்றாலும், அது இன்னும் சில மாதங்களிலேயே துவங்கக்கூடும்.
தமிழகத்தின் மீனவ கிராமங்களை குறிவைத்து கன்னியாகுமரி முதல் சென்னை வரை கடற்கரை ஓரமாக, இம்முறை அவர் பாதயாத்திரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இப்படி கட்சியை கிராமம்தோறும் வளர்க்கும் பணியை தலைவர் அண்ணாமலை ஏற்றுக்கொள்ள, பா.ஜ., தலைமையிலான கூட்டணியை கட்டமைத்து, அதை வழி நடத்திச் செல்லும் பொறுப்பை தேசிய அளவில் தலைவராக இருக்கும் ஒருவரை நியமிக்கவும் கட்சித் தலைமை திட்டமிட்டுள்ளது. கூடவே, அவரையே கூட்டணி சார்பிலான முதல்வர் வேட்பாளராக நியமிக்கவும் திட்டமிட்டு உள்ளனர்.
அந்த வகையில், பா.ஜ., சார்பில் தமிழக முதல்வர் வேட்பாளருக்கான தேர்வு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தான். அவர் ஒரு பெண் என்பதோடு, தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட தமிழ்ப்பெண் என்பதும், அவருக்கான கூடுதல் தகுதி.
இதை கட்சித் தலைமை அவரிடம் ஏற்கனவே சொல்லி விட்டது. அந்த அடிப்படையில் தான், சமீப காலமாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழகத்தையே அடிக்கடி வலம் வருகிறார்.
கடந்த மாதம் கோவையை மையமாக வைத்து நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர், அங்கிருக்கும் தொழில் அதிபர்களை சந்தித்து குறைகள் கேட்டார். அப்போது, கோவை தொழில் அதிபர் அன்னபூர்ணா சீனிவாசன் பேசிய பேச்சு, அதைத் தொடர்ந்து அவர் கேட்ட மன்னிப்பு போன்றவை பெரும் பரபரப்பைக் கிளப்பின.
இதில் பா.ஜ.,வுக்கு சில தர்ம சங்கடங்கள் ஏற்பட்டாலும், அந்த சர்ச்சைக்குரிய நிகழ்வுகளால், தமிழகம் முழுக்க பரபரப்பாகப் பேசப்பட்ட நபர்களில் முக்கியமானவர் நிர்மலா சீதாராமன்.
பொய்யாகிய விமர்சனம்
இந்த சர்ச்சையைத் தொடர்ந்து நிர்மலா சீதாராமன், இப்போதைக்கு தமிழகம் வரமாட்டார் என்று சொன்னவர்கள் ஏராளம். ஆனால், அடுத்த வாரமே தமிழகத்திற்கு வந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
தென்சென்னையில், கட்சி உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியில் பங்கேற்றார். மக்களோடு மக்களாக பல மணி நேரம் இருந்தார். சாதாரண பூக்கார பெண்மணி முதல் பெசன்ட் நகர் ஏரியாவில் இருக்கும் பெரும் தொழில் அதிபர் வரை எளிமையாகப் பேசி, அவர்களை கட்சியில் இணைய வைத்தார்.
அதேபோல சென்னை அடையாறு எம்.ஆர்.சி., நகரில் உள்ள இந்தியன் வங்கி கெஸ்ட் ஹவுசில் தங்கி இருந்து, கட்சியின் பல மட்டத் தலைவர்களையும் வரவழைத்துப் பேசினார். கட்சியில் இருக்கும் வேறுபாடுகளை களைந்து, கட்சியை வேகமாக வளர்த்தெடுப்பது எப்படி என்பது குறித்து ஆலோசித்தார். பின், அனைவருக்கும் காலை உணவளித்து மகிழ்ந்தார்.
வீடு தேடி சென்று வாழ்த்து
இந்த நிகழ்ச்சியில் விடுபட்டுப் போனவர்கள் பட்டியல் எடுத்து, மீண்டும் தமிழகம் வந்து, அவர்களையெல்லாம் தனித்தனியாக சந்தித்துப் பேசினார். கட்சியின் மாநில செயலர் அஸ்வத்தாமனை இந்தியன் வங்கி கெஸ்ட் ஹவுசுக்கு வரவழைத்தவர், அவரிடம் மட்டும், 45 நிமிடங்கள் பேசியுள்ளார்.
அடுத்ததாக, கட்சியின் மூத்தத் தலைவராகவும், கட்சி செயலராகவும் இருக்கும் கராத்தே தியாகராஜனுடைய மணி விழாவுக்காக, அவருடைய வீடு தேடி சென்று, அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இதே போல, கட்சியின் பல தலைவர்களையும் அவர் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேச, அதன்பின், அவர்களெல்லாம் நிர்மலா புகழ்பாடுவது வழக்கமாகி இருக்கிறது.
இந்த நிகழ்வுகளுக்கு இடையில், ஒருநாள் தமிழகம் வந்தவர், நேராக திருவாரூர் சென்று அங்கிருக்கும் தியாகராஜரை தரிசித்தார். அதோடு, அந்தப் பகுதியில் இருக்கும் பா.ஜ.,வினர் பலரையும் சந்தித்து, சில நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று விட்டு டில்லி சென்றார்.
அடுத்தடுத்தும், தமிழகத்தை மையமாக வைத்து அவருக்காக பல்வேறு நிகழ்ச்சிகள் திட்டமிடப்படுகின்றன. இதெல்லாம் சரியாக நடந்தால், ஒரு கட்டத்தில் நிர்மலா சீதாராமன், தமிழக பா.ஜ.,வின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு, பின், முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. அதுவரை, மத்திய அரசு வாயிலாக தமிழகத்துக்கு பல்வேறு திட்டங்களை வாங்கிக் கொடுத்து, அதை நிறைவேற்றும் பணியிலும் நிர்மலா ஈடுபடுவார். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -