பள்ளிகளுக்கான மின் கட்டண நிதி வரவில்லை: சொந்த பணத்தை செலவிடும் தலைமையாசிரியர்கள் புலம்பல்
பள்ளிகளுக்கான மின் கட்டண நிதி வரவில்லை: சொந்த பணத்தை செலவிடும் தலைமையாசிரியர்கள் புலம்பல்
ADDED : மார் 05, 2025 04:45 AM

'தமிழகம் முழுதும், அரசு உயர், மேல்நிலை பள்ளிகளுக்கான மின்சார கட்டணம் செலுத்துவது உள்ளிட்ட சில்லரை செலவினங்களுக்கான நிதி ஒதுக்கீடு இன்னும் கிடைக்கவில்லை' என, தலைமையாசிரியர்கள் புலம்புகின்றனர்.
அரசு பள்ளிகளுக்கு தேவையான ஸ்டேஷனரி பொருட்கள், அலுவலர் பயணப்படி, மின்கட்டணம் உள்ளிட்ட சில்லரை செலவினங்களுக்காக, மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆண்டுதோறும் இரண்டு தவணையாக, 50,000 ரூபாய் வரை அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
இதற்கான செலவினங்கள் விபரத்தை, ஆண்டு தோறும் மார்ச் இறுதிக்குள் சம்பந்தப்பட்ட கருவூலங்களில் தலைமையாசிரியர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
ஆனால், 2024 - 2025க்கு ஒதுக்கப்பட்ட நிதி இதுவரை பள்ளிகளுக்கு கிடைக்கவில்லை. இதனால், மின்சார கட்டணம் உள்ளிட்ட செலவுகளை தலைமையாசிரியர்கள் தங்கள் சொந்த பணத்தில் மேற்கொண்டனர்.
பிப்ரவரியில் நிதி கிடைத்தால் தான், மார்ச் இறுதிக்குள் அதற்கான செலவினங்கள் தொடர்பான, 'பில்'களை தாக்கல் செய்ய முடியும். ஆனால், மார்ச் மாதமாகியும், இதுவரை நிதி வழங்காமல் இழுத்தடிக்கப்படுகிறது.
தலைமையாசிரியர்கள் கூறியதாவது: கடந்த, 2023 - 2024ம் நிதியாண்டிற்கு முதல் தவணை நிதி மட்டுமே பள்ளிகளுக்கு கிடைத்தது. இரண்டாம் தவணை கிடைக்கவில்லை. இந்தாண்டும் நிதிஆண்டு முடியும் நிலையிலும், சில்லரை செலவினங்களுக்கான நிதி விடுவிக்கப்படவில்லை. ஒவ்வொரு பள்ளிக்கும் தலைமையாசிரியர்கள் தங்கள் சொந்த பணத்தில், 10,000 முதல் 60,000 ரூபாய் வரை மின்கட்டணம் செலுத்தியுள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -